Published : 18 Jan 2018 10:49 AM
Last Updated : 18 Jan 2018 10:49 AM

உலக மசாலா: இந்த ஒளிப்படக் கலைஞருக்கு என்ன விருது தரலாம்!

அமெரிக்காவில் வசிக்கும் டேவ், பாம் ஜாரிங் தம்பதியரிடம், கடந்த மே மாதம் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் வந்தார். தன்னைத் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். குடும்பப் படங்களை எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார். அதற்கு பாம் ஜாரிங் சம்மதம் தெரிவித்தார். ஒரு விடுமுறை நாளன்று கணவர், 2 மகன்கள் மற்றும் மாமியாரோடு பூங்காவுக்கு சென்றனர். நீண்ட நேரம் படங்கள் எடுத்துத் தள்ளினார் அந்தப் பெண். வேலை முடிந்தவுடன் அவர் கேட்ட 16 ஆயிரம் ரூபாயையும் கொடுத்தார் பாம் ஜாரிங். இந்தப் படங்களை சில வாரங்களில் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

பல மாதங்கள் ஆகியும் படங்கள் வரவேயில்லை. ஒரு கட்டத்தில் பாம் ஜாரிங் படங்கள் எடுத்ததையே மறந்து போனார்.

கடந்த வாரம் அந்த ஒளிப்படக் கலைஞரிடமிருந்து அழைப்பு வந்தது. மெயிலில் படங்களை அனுப்புவதாக தகவல் சொன்னார். சில நாட்களில் படங்களும் வந்தன. ஆனால், படங்களைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

“படங்களைப் பார்த்தபோது கோபமும் எரிச்சலுமாக இருந்தது. குழந்தைகள் மிகவும் குழப்பமடைந்தனர். யாராவது நம்மை வைத்து காமெடி செய்கிறார்களா என்று கேட்டனர். எடிட் செய்கிறேன் என்று எங்கள் அனைவரின் முகங்களையும் லெகோ பொம்மைகள் போன்று மாற்றியிருக்கிறார். சில மணி நேரம் கழித்து, இந்தப் படங்களை மீண்டும் பார்த்தபோது சிரிப்புதான் வந்தது. உடனே ஒளிப்படக் கலைஞரைத் தொடர்புகொண்டேன். பூங்காவில் எடுத்த படங்களில் நிழல் படிந்துவிட்டதால், அவரது பேராசிரியர் சொன்னபடி எடிட் செய்ததாகச் சொன்னார். எங்களைப் போல் யாரும் ஏமாற வேண்டாம் என்பதற்காக, ‘நன்றாக விசாரித்து ஒருவரிடம் வேலையை ஒப்படையுங்கள்’ என்ற செய்தியோடு, சமூக வலை தளத்தில் படங்களை வெளியிட்டேன்” என்கிறார் பாம் ஜாரிங்.

இந்த விழிப்புணர்வு படங்கள் இதுவரை 3 லட்சம் முறை பகிரப்பட்டிருக்கின்றன.

இந்த ஒளிப்படக் கலைஞருக்கு என்ன விருது தரலாம்!

தைவானைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி குளிக்காததால், விவாகரத்து செய்திருக்கிறார்! “நானும் லின்னும் காதலிக்கும்போது வாரத்துக்கு ஒரு நாள்தான் குளித்துக்கொண்டிருந்தார். அது எனக்குப் பெரிய விஷயமாகப் படவில்லை. திருமணத்துக்குப் பிறகு 2 வாரங்களுக்கு ஒருமுறை குளிக்க ஆரம்பித்தார். பிறகு அது மாதத்துக்கு ஒரு முறையானது. பத்தாண்டுகளில் வருடத்துக்கு ஒருமுறை குளிக்க ஆரம்பித்துவிட்டார். எப்போதாவது முடியை அலசுவார், பற்களைத் தேய்ப்பார். இதனால் எங்கள் இருவரின் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. லின்னின் பழக்கத்தை மாற்ற எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை. வேறு வழியின்றி விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன். இறுதிவரை அவர் விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை” என்கிறார் லின்னின் கணவர்.

பாவப்பட்ட கணவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x