Last Updated : 14 Nov, 2023 05:09 PM

3  

Published : 14 Nov 2023 05:09 PM
Last Updated : 14 Nov 2023 05:09 PM

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இவர்கள்தான் இலக்குகள்... காசா நகரம் ‘குழந்தைகளின் மயானம்’ ஆனது எப்படி?

"எங்களுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது. அது எங்களுக்கு ஏதேனும் நல்லதைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் சந்தித்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது எங்களை எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கச் செய்கிறது..." - கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை உலகில் நடந்த அத்தனை மோதல்களிலும் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, கடந்த அக்டோபரில் தொடங்கி இதுவரை காசாவில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். அதனால்தான் காசாவை ’குழந்தைகளின் மயானம்’ என்று வேதனையுடன் அழைத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ்.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதிலிருந்து, அந்தப் பிராந்தியத்தில் மனிதப் பேரழிவுகளின் வீச்சு விவரிக்க முடியாத அளவில் இருக்கின்றது. காசாவில் குழந்தைகளும், இளைஞர்களும் கொத்துக் கொத்தாக மடிகின்றனர். கிழக்கு ஜெருசலேமிலும், மேற்குக் கரையிலும் இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. அங்கே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இரு பகுதிகளுக்கும் இடையே மக்கள் பயணிப்பதுகூட பாதுகாப்புக் காரணங்களுக்காக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போரால் இஸ்ரேலிய குழந்தைகளும், பாலஸ்தீன குழந்தைகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத அதிர்ச்சியில் தள்ளுப்படுவர் என்று யுனிசெஃப் UNICEF அமைப்பு எச்சரிக்கின்றது.

2019 முதல் 2022 வரை காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்குக் கரையில் குழந்தைகளின் நலன் சார்ந்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதுபற்றி இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். நார்வே நாட்டின் அகதிகள் கவுன்சில் பங்களிப்புடன் 800 குழந்தைகள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் தெரிவித்த கருத்துகள் எல்லாமே கூர்ந்து கவனிக்க வேண்டியவையாக இருக்கின்றன.

‘எப்போதுமே பாதுகாப்பற்ற உணர்வு’ - காசாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் பலரும் எப்போதுமே பாதுகாப்பற்ற உணர்வுடன் இருந்தனர். எங்கள் ஆய்வில் பங்கேற்ற 800 குழந்தைகளும் இஸ்ரேலின் 3 பெரிய தாக்குதல்களை சந்தித்தவர்கள். அவர்களுக்கு உணவு பற்றி அச்சமும், மின்சாரம், குடிநீர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் எப்போதுமே உண்டு. பெரும்பாலான வீடுகளில் வறுமை தாண்டவமாடும், வீடுகள் இல்லாமல் பராமரிப்பாளர்களிடம் வாழும் குழந்தைகளின் நிலை இன்னமும் மோசம். அவர்கள் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்.

2019-ல் காசாவில் மேற்கொண்ட ஆய்வின்போது அங்கிருந்த குழந்தைகள் எதிர்காலத்தில் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், 2021-ல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அதன் பின்னர் எங்கள் ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளில் 20 சதவீதம் பேர் மட்டுமே எதிர்காலம் பிரகாசமாகும் என்று நம்பினர். நாங்கள் நடத்திய குழு நடவடிக்கையில் ஒரு மாணவர்கள் குழு, "எங்களுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது. அது எங்களுக்கு ஏதேனும் நம்பிக்கையைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் சந்தித்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது எங்களை எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கச் செய்கிறது" என்று எழுதியிருந்தனர். இந்த எண்ணங்கள்தான் அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க, கனவு காண ஆசைப்படவிடாமல் செய்கிறது.

கரோனா தந்த நிம்மதி: உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று உயிரிழப்புகளை, பொருள் நஷ்டங்களையும் ஏற்படுத்தியது. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹெப்ரான் 2 மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஏனெனில் அப்பகுதி குழந்தைகள் தினமும் இஸ்ரேல் ராணுவத்தின் பல சோதனைச் சாவடிகளையும் தாண்டி பல்வேறு தொந்தரவுகளைக் கடந்தே பள்ளி செல்ல வேண்டும். ஆனால், கரோனா காலத்தில் கெடுபிடிகள் தளர்வால் அவர்களால் பள்ளிக்கு தாமதமின்றி செல்ல முடிந்தது. இது குறித்து குழந்தைகள் "தெருக்கள் அமைதியாக இருந்தன. நாங்கள் செல்லும் வழியில் ராணுவ வீரர்கள் எங்களை நிறுத்தவும் இல்லை துன்புறுத்தவும் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த அக்டோபர் 7-க்கு முன்பாகவே காசா குழந்தைகளிடம் அத்தனை வேதனை இருந்தால் இனி அவர்கள் என்ன சொல்வார்களோ! அதனால்தான் இப்போது நடைபெறும் போரை நிறுத்த பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. போர் நிறுத்தப்பட்டால் அங்கே மனிதாபிமான தொண்டு நிறுவனங்களும், கொடையாளர்களும் குவிந்துவிடுவார்கள். அங்கே மீட்பு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள், குழந்தைகளின் உடல் ரீதியான இழப்புகளையும் சிதைந்துபோன உள்ளங்களையும் சரி செய்யலாம். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த நிரந்தர தீர்வு காணப்படாவிட்டால் ரத்தம் சிந்திக் கொண்டேதான் இருக்கும். துயரக் கதைகள் நீண்டு கொண்டேதான் இருக்கும்.

"எங்களுக்கு எதிர்காலத்தை நினைத்து பயமாக இருக்கிறது. அது எங்களுக்கு ஏதேனும் நல்லதைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் சந்தித்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது எங்களை எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு இருக்கச் செய்கிறது" என்ற இந்த வலிமிகு வார்த்தைகள் காசா குழந்தைகள் மட்டுமல்ல, போரினால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு குழந்தையின் மனநிலை இதுவாகத்தான் இருக்கும். எங்கோ காசாவில், உக்ரைனில் ஏதோ ஒரு குழந்தையின் வேதனை இதுவென்று நினைத்துக் கடந்துவிட இயலாது. போரினால், வெறுப்பினால் வரும் எந்த ஆபத்தும் யாருக்கும் வெகு தூரத்தில் இல்லை.

அதனால்தான், யூத இன அழிப்பு தொடர்பான ஆராய்ச்சியாளர் ஒருவர், இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தாக்கத்தை ஒரு ரஷ்ய யூத கவிஞரின் பாடல் மூலம் விளக்குகிறார். ஹயீம் நாமென் பிலாலிக் என்ற அந்தக் கவிஞர், "பழிவாங்குவோம் என்று சொல்பவர் மனிதரா! ஒரு சிறு குழந்தையின் ரத்தத்திதுக்காக இத்தகைய பழிவாங்கலை சாத்தான் கூட இன்னும் திட்டமிடவில்லை" என்று பொருள்பட கவிதை வரிந்திருப்பார். ஹமாஸ் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குழந்தைகள் இறந்துள்ளனர். காசாவில் 4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். எண்ணிக்கை மாறுபடலாம்; ஆனால் இவை மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x