Published : 30 Oct 2023 06:04 AM
Last Updated : 30 Oct 2023 06:04 AM

ஹமாஸ் தீவிரவாதிகளின் ரகசிய சுரங்க நகரம்: 260 அடி ஆழம், 500 கி.மீ. தொலைவுக்கு நீள்கிறது

காசா நகர்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதியில் சுமார் 260 அடி ஆழத்தில் 500 கி.மீ. தொலைவுக்கு ரகசிய சுரங்க நகரத்தை அமைத்துள்ளனர். இந்த சுரங்க நகரத்தில் பதுங்கியிருந்து இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக அவர்கள் போரிட்டு வருகின்றனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இருதரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் வான் வழி தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 40 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. காசாவுக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகின்றனர். ஹமாஸின் போர் வியூக பின்னணியில் அவர்களின் ரகசிய சுரங்க நகரம் இருப்பது தெரியவந்துள்ளது.

சுரங்க பாதை வரலாறு: பாலஸ்தீனத்தின் காசா பகுதி 41 கி.மீ. நீளம், 12 கி.மீ. அகலம் கொண்டதாகும். இதன் தென்மேற்கில் 11 கி.மீ. தொலைவு எல்லையை எகிப்து உடனும் கிழக்கு, மேற்கில் 51 கி.மீ. தொவு எல்லையை இஸ்ரேல் உடனும் பகிர்ந்து கொண்டுள்ளது.

கடந்த 1948 முதல் 1967 வரை காசா பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1967-ல் நடந்த போரில் எகிப்திடம் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. இதன்பிறகு எகிப்து, காசா எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது.

அப்போது எகிப்தில் உள்ள தங்களது உறவினர்களை சந்திக்க காசா பகுதி மக்கள் எகிப்துக்கு ரகசியமாக சுரங்கப் பாதை அமைத்தனர். கடந்த 1994-ம் ஆண்டில் இந்த சுரங்கப் பாதை வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் ஆயுதங்களை கடத்த தொடங்கினர்.

இதை தடுக்க அமெரிக்காவின் உதவியுடன் எகிப்து அரசு கடந்த 2009-ம் ஆண்டில் காசா எல்லையில் 16 அடி ஆழத்தில் அஸ்திவாரம் அமைத்து, 20 அடி உயரத்துக்கு இரும்பிலான சுவரை கட்டியது. இந்த இரும்பு சுவருக்கும் கீழாக காசாவில் இருந்து எகிப்துக்கு ரகசிய சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டன. இந்த பாதைகள் வழியாக எகிப்தில் இருந்து ஆயுதங்கள், எரிபொருள், உணவு பொருட்கள், மருந்துகள், கட்டுமான பொருட்கள் காசாவுக்கு கொண்டு வரப்பட்டன.

கடந்த 2005-ம் ஆண்டில் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேறியது. அதன்பிறகு ஹமாஸ் தீவிரவாதிகள், காசா பகுதியில் பிரம்மாண்ட சுரங்க நகரத்தை நிர்மாணிக்கும் பணியை தொடங்கினர். நாள்தோறும் 22,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான கட்டுமான செலவை ஈரானும், அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளும் ஏற்றுக் கொண்டன. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதியில் சுமார் 260 அடி ஆழத்தில் 500 கி.மீ. தொலைவு நீளத்துக்கு சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர்.

சுரங்கத்தில் ஆயுத கிடங்குகள்: இதுகுறித்து அமெரிக்க, இஸ்ரேலிய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது: காசா பகுதியின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பல்வேறு சுரங்க பாதைகள் எகிப்து வரை நீள்கின்றன. இதை சுரங்கப் பாதை என்று கூறுவதைவிட சுரங்க நகரம் என்று அழைக்கலாம். சுரங்கப் பாதைக்குள் பிரம்மாண்ட தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில்தான் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆயுத கிடங்குகளும் சுரங்கப் பாதையில் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான சுரங்கப் பாதைகள் சிலந்தி வலை பின்னல் போல கட்டப்பட்டு உள்ளன. இந்த பாதைகள் எங்கு தொடங்கி, எங்கு முடிகிறது என்பது ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு மட்டுமே தெரியும்.

வீடுகள், மசூதிகளில் சுரங்கப் பாதைகளின் நுழைவு வாயில்கள் உள்ளன. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமைஅலுவலகமும் சுரங்க நகரத்தில் செயல்படுகிறது. சிறிய மருத்துவமனை, மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சுரங்க நகரத்தில் இருக்கின்றன.

இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையால் காசா பகுதிக்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் முழுமையாக தடைபட்டிருக்கிறது. ஆனால் ரகசிய சுரங்கப் பாதைகள் வழியாக எகிப்தில் இருந்து காசாவுக்கு குடிநீர், உணவு, எரிபொருள், ஆயுதங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கடத்தி வரப்படுகின்றன. இதன் காரணமாகவே ஹமாஸ் தீவிரவாதிகளால் தொடர்ந்து போரில் ஈடுபட முடிகிறது.

மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சுரங்கப் பாதை வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்த சுரங்கப் பாதைகளை அமைக்கவும் ஹமாஸ் தீவிரவாதிகளே உதவி செய்துள்ளனர். இவ்வாறு அமெரிக்க, இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுரங்க பாதைகளை அடைக்க நுரை குண்டுகள்: காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் தொடர்புடைய இடங்களில் தற்போது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அடுத்த கட்டமாக காசா பகுதியில் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

அப்போது ஹமாஸின் சுரங்கப் பாதைகள் பெரும் சவாலாக இருக்கும். இந்த சவாலை எதிர்கொள்ள நுரை குண்டுகளை தயார் செய்துள்ளோம். இந்த குண்டுகளில் வெடிபொருட்கள் கிடையாது. அதற்குப் பதிலாக பல்வேறு வகையான ரசாயனங்கள் உள்ளன. ஹமாஸின் சுரங்கப் பாதையை கண்டுபிடித்த உடன் அதன் நுழைவு வாயில்களில் நுரை குண்டுகள் வீசப்படும். இந்த குண்டுகளில் இருந்து நுரை வெளியாகி சுரங்கப் பாதைகளை முழுமையாக அடைத்துவிடும். சுரங்கப் பாதைக்குள் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளால் வெளியேற முடியாது. அவர்களால் எதிர் தாக்குதல் நடத்தவும் முடியாது. சுரங்கத்துக்குள்ளேயே அவர்கள் சமாதியாகும் சூழல் ஏற்படும். ஹமாஸின் சுரங்க நகரத்தை அழிக்க மற்றொரு திட்டத்தையும் ஆலோசித்து வருகிறோம். மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து மோட்டார் பம்புகள் மூலம் ஹமாஸின் சுரங்க பாதைகளில் தண்ணீரை செலுத்த திட்டமிட்டு வருகிறோம். சுரங்க நகரம் தண்ணீரில் மூழ்கினால் ஹமாஸின் முதுகெலும்பு உடைந்துவிடும். இவ்வாறு இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x