Published : 25 Oct 2023 06:12 AM
Last Updated : 25 Oct 2023 06:12 AM

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம்: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

கோப்புப்படம்

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயாராகிறோம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று 18-வது நாளாக போர் நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 400 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காசா பகுதியில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,000-ஐ தாண்டியுள்ளது.

இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு பகுதி எல்லையை குறிவைத்து தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த எல்லைப் பகுதிகளிலும் சண்டை தீவிரமடைந்துள்ளது.

இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் நேற்று கூறியதாவது:

பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறோம். எங்களை பொறுத்தவரை ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க வேண்டும். காசா பகுதி ஆட்சி நிர்வாகத்தில் இருந்து அவர்களை முழுமையாக நீக்க வேண்டும். அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறோம். இதன்படி காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு டேனியல் தெரிவித்தார்.

2 பிணைக் கைதிகள் விடுதலை: கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள், சுமார் 220 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் அமெரிக்காவை சேர்ந்த தாய், மகள் கடந்த 22-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேலை சேர்ந்த யாச்சிவத் (85), நூரித் (79) ஆகிய இரு பெண்களை ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் விடுதலை செய்தனர். செஞ்சிலுவை சங்கத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இதர பிணைக்கைதிகளை மீட்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனிடையே காசா பகுதி மக்களின் உதவியை இஸ்ரேல் ராணுவம் கோரியிருக் கிறது. ‘‘பிணைக் கைதிகள் குறித்து காசா பகுதிமக்கள் தொலைபேசி, குறிப்பிட்ட சமூக வலைதள கணக்குகள் மூலம் தகவல் தெரிவிக்கலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அவர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்கப்படும்’’ என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் துண்டு பிரசுரங்களை வீசியுள்ளன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க கடற்படை சார்பில் 2 அதிவீன போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்கள் இஸ்ரேலை குறிவைத்து வீசும் ஏவுகணைகளை அமெரிக்க போர்க்கப்பல்கள் நடுவானில் அழித்து வருகின்றன.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதி களுக்கு இடையிலான போரில் 3-ம் தரப்பு தலையிட்டால் நாங்கள் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுப்போம்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் ஈரானின் நட்பு நாடான சீனாவின் 6 போர்க்கப்பல்கள் மத்திய தரைக் கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அளித்துள்ள விளக்கத்தில், "வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போருக்கும் எங்களது போர்க் கப்பல்களுக்கும் தொடர்பில்லை" என கூறப் பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சீன போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத் தப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x