Last Updated : 30 Jan, 2018 03:47 PM

 

Published : 30 Jan 2018 03:47 PM
Last Updated : 30 Jan 2018 03:47 PM

அதிரவைத்த ஆன்லைன் கொள்ளை: கிரிப்ட்டோகரன்ஸி பெயரில் வாடிக்கையாளர்களிடம் ரூ.1 கோடி சுருட்டல்

கிரிப்டோகரன்ஸி எனப்படும் மெய்நிகர் பணம் வழங்குவதாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இ-மெயில் தகவல்களை 'ஹேக்' செய்த கொள்ளையர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகள் சமீபகாலமாக பிரபலமடைந்து வருகின்றன. இது, ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். சில நாடுகள் இதனை அங்கீகரித்துள்ள போதிலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மேலும், கிரிப்டோகரன்ஸி முறைகள் எந்த அரசையும் சார்ந்து இருப்பதில்லை. இது, ஆன்லைன் முறைகளிலும், வாட்ஸ் அப் போன்ற குழுக்களின் மூலமாகவும் புழக்கத்தில் உள்ளது.

சில நாடுகளில் கிரிப்டோகரன்ஸி விற்பனை செய்யும் குழுக்கள் முன் பதிவு அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் ஈ-வாலட் நிறுவனம் ஒன்றும் இதுபோன்று எத்திரீயம் என்ற கிரிப்டோகரன்ஸியை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான முன் ஒதுக்கீடு விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டன. டோக்கன் அடிப்படையிலான ஒதுக்கீடு வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட வாலட் கணக்கில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தினர். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தினர்.

அடுத்த நாள் சம்பந்தப்பட்ட ஈ-வாலட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள், தங்களுக்கு எப்போது பணம் வரும் என விவரம் கேட்டனர். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்ட விவரம் வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்தது. ''நாங்கள் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டுள்ளோம். யாருக்கும் மெயில் அனுப்பவில்லை. ஒதுக்கீடு ஜனவரி 31-ம் தேதி தான் நடைபெறவுள்ளது'' என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. ஈ- வாலட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டு ஹேக்கர்கள் ஆன்லைனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தகவல்களை ஹேக் செய்து அதனை பயன்படுத்தி போலியாக இ - மெயில் அனுப்பியுள்ளனர். இதனை உண்மை என நம்பி வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தியுள்ளனர். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஹேக்கர்கள் கொள்ளைடியத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x