Published : 16 Oct 2023 04:19 PM
Last Updated : 16 Oct 2023 04:19 PM

இஸ்ரேல் - ஹமாஸ் போர் | ‘குளித்தால் குடிக்க தண்ணீர் இருக்காது. அதனால்...’ - காசாவின் அவல நிலை

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்ல காத்திருக்கும் கண்டெய்னர் லாரிகள்.

காசா நகர்: தெற்கு காசாவில் மக்கள் கழிவறைகள், குளியலறைகள் முன்னால் வரிசைகட்டி நிற்கின்றனர். அவர்களில் பலரும் கடந்து 10 நாட்களாக குளிக்காமல் நிற்கின்றனர். இதுபோல் ஆங்காங்கே முகாம்களில் பலரும் காத்திருக்கின்றனர். குடிக்க, குளிக்க, அத்தியாவசியத் தேவைகளுக்கென தண்ணீருக்காகக் காத்திருக்கின்றனர். போர் உயிர் பலியை மட்டும் ஏற்படுத்துவதுதான் பிரதானமாகத் தெரிகிறது. ஆனால், இதுபோன்ற மோசமான பக்கவாட்டு விளைவுகளும் இருக்கின்றன. சுகாதாரமற்ற தண்ணீரை அருந்துவதால் நோய்கள் ஏற்படும் என்று ஐ.நா. ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில்தான், காசாவில் தண்ணீரின்ற நிலவும் அவலம் பற்றியத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தொடரும் இஸ்ரேலின் பதில் தாக்குதல் காரணமாக, வடக்கு காசாவை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். காசாவுக்கான உணவு, மின்சாரம், குடி தண்ணீர் என அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. அகமது ஹமீது என்ற 43 வயது பெண்மணி 7 குழந்தைகளின் தாய். அவர் காசாவின் தெற்கே உள்ள ரஃபா எல்லையில் இருக்கிறார். அவர் கூறுகையில், "நான் குளித்து சில நாட்கள் ஆகிவிட்டன. கழிவறை செல்வதுகூட கடினமாக உள்ளது. வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. உணவில்லை. கடைகளில் பொருட்கள் இல்லை. ஓரிரு இடங்களில் ஏதாவது கிடைத்தாலும் விலை உச்சத்தில் இருக்கிறது. கொஞ்சம் சீஸ் கட்டிகளும், டூனா மீன் கேன்களும் மட்டுமே இருக்கின்றன. மிகுந்த சுமையை உணர்கிறேன். ஏதும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்" என்றார்.

மோனா அப்தல் ஹமீது (55) என்ற பெண் கூறுகையில், "எங்கள் வீடு காசா வடக்கில் இருந்தது. இஸ்ரேல் தாக்குதலில் எல்லாம் இழந்து ரஃபாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். வழியில் யாரென்றே தெரியாதவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சமடைய நேர்ந்தது. எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. என்னிடம் போதிய ஆடைகள் கூட இல்லை. கையில் இருப்பவை அழுக்கடைந்துவிட்டன. துவைக்க தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. இணையம் இல்லை. மனிதாபிமானமும் கூட தீர்ந்துவிட்டதாகவே உணர்கிறேன்" என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் சபா மசாப் தனது கணவர், மகள் மற்றும் 21 உறவினர்களுடன் ரஃபாவில் உள்ள ஓர் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். "நாங்கள் மோசமான சூழலில் வசிக்கிறோம். நாங்கள் யாருமே கடந்த சில நாட்களாகக் குளிக்கவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கிறோம்" என்றார்.

ஐ.நா.வின் முகாம் ஒன்றில் இருக்கு இஷாம் கூறுகையில், "காசா வடக்கிலிருந்து சிலர் இங்கே வந்துள்ளனர். ஆனால் தண்ணீர் தான் இங்கே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ச தண்ணீரைப் பெற்றுக் கொள்வதுகூட சவாலாக இருக்கிறது. நாங்கள் குளித்தால் குடிக்க தண்ணீர் இருக்காது" என்றார் வேதனையுடன்.

"தெற்கு நோக்கிச் செல்லச் சொன்னார்கள். ரஃபா வந்துவிட்டோம். ஆனால், இங்கேயும் தாக்குதல் நடந்துள்ளது. காசாவில் திவிரவாதம் இருக்கிறது என்கிறார்கள். சரி அவர்கள் கூறும் மனிதாபிமானம் எங்கே இருக்கிறது. நாங்கள் எங்கே செல்ல வேண்டும். அரபு நாடுகள் எங்களுக்கா இருக்கின்றனவா? எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் எங்காவது இடம் பெயர்ந்து கொண்டேதான் இருக்கிறோம். தெருவில் தூங்குகிறோம். ஏதும் இல்லாமல் இருக்கிறோம்" என்றார் அலா அல் ஹமாஸ் என்ற பெண்.

இன்று (அக்.16) உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'தண்ணீரே உயிர். தண்ணீரே உணவு. யாரையும் கைவிடாதீர்கள்' என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள். இந்தக் கருப்பொருள் கொண்டு எங்கும், எதிலும் விழிப்புணர்வுக் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கும்போது போர் பாதித்த பகுதிகளில் தண்ணீரின் தேவை பற்றிய பரிதாபத்தை தோலுரித்துக் காட்டுகிறது காசாவாசிகளின் வேதனைக் குரல்கள். யாரையும் கைவிடாமல் தண்ணீரைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால் அது காசா, உக்ரைன், சிரியா, சூடன் எனப் போர் பாதித்தப் பகுதிகளுக்கும் பொருந்தும் தானே!

இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுடனான இஸ்ரேல் போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளையில், காசாவில் பதற்றத்தை தணிக்க எந்த நிபந்தனையுமின்றி இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுக்கு ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோல், காசாவில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தவிக்கும் சூழலில், அரபு நாடுகளான கத்தார், ஜோர்டான், லெபனான், எகிப்து ஏன் எல்லைகளை மூடிவைத்திருக்கின்றன என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் நிக்கி ஹாலே கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்புலம்: கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குபகுதியில் தரை, கடல், வான் வழியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 2,300 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இதில் இதுவரை 2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே இன்று 10-வது நாளாக போர் நீடித்துள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக மக்களுக்கு முதலில் 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் 6 மணி நேரம் அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
ஆனால், மக்கள் செல்லும் வழிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மூடிவிட்டதால், லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசா பகுதியில் சிக்கி தவிக்கின்றனர்.

இதனிடையே, பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. இதற்காக காசா முனை எல்லை பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 10,000 வீரர்கள் ஏற்கெனவே காசா எல்லை பகுதிக்குள் நுழைந்துவிட்டனர். ராணுவ தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் தாக்குதல் தொடங்கும். இஸ்ரேல் ராணுவம், விமானப் படை, கடற்படை தயார் நிலையில் உள்ளன. வடக்கு காசாபகுதியில் ஒரே நேரத்தில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்தும்போது, ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டு தாக்குதலை தீவிரப்படுத்தக் கூடும் என்று தெரிகிறது. இதனால், காசாவை ஒட்டிய இஸ்ரேலின் தெற்கு பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி வருகின்றனர். இதனால், இஸ்ரேல் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x