Published : 14 Oct 2023 05:50 PM
Last Updated : 14 Oct 2023 05:50 PM

‘இது இரண்டாவது நக்பா...’ - 1948 போரை நினைவூட்டுவதாக கூறும் காசா மக்களின் வேதனைப் பதிவுகள்

காசா நகர்: ‘24 மணி நேரத்துக்குள் வெளியேறிவிடுங்கள். இல்லாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும்’ என்று இஸ்ரேல் எச்சரித்ததில் இருந்து சாரை சாரையாக காசா மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அவ்வாறு செல்வோர் பலரும் நடப்பவை எல்லாம் 1948 போரை நினைவுபடுத்துவதாக வேதனையைத் தெரிவிக்கின்றனர்.

அதில் ஒருவர், "இப்போது நடப்பவை எல்லாம் அல்-நக்பாவை நினைவுபடுத்துகிறது. 1948 போரில் ஏற்பட்ட பேரழிவால் (அல்-நக்பா என்றால் பேரழிவு) 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணிலிருந்தே வெளியேற்றப்பட்டனர். அதேபோல் இப்போது காசாவிலிருந்து வெளியேற்றப்படுகின்றோம், ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் எங்கள் நிலம். இங்கேதான் எங்களின் வேர்கள் இருக்கும். சுதந்திரம், அமைதி, பாதுகாப்புக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.

1948-ல் நடந்தது என்ன? - காலனி ஆதிக்கப் பிடிக்கு பாலஸ்தீனமும் தப்பவில்லை. 1947 வரை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தபோது அரபிக்களும், யூதர்களும் இருந்த பாலஸ்தீனம் இரண்டாகப் பிரியும் சூழல் உருவானது. யூதர்களுக்கு இஸ்ரேல், அரபிக்களுக்கு பாலஸ்தீனம். புனித நகரான ஜெருசலேம் சர்வதேச நகரமாக இருக்கும் என்பதுதான் பிரிட்டன் பரிந்துரைத்த யோசனை. இந்த யோசனையை ஐ.நா.வும் அங்கீகரித்தது. ஆனால், பாலஸ்தீன அரபிக்கள் இதனை ஏற்கவில்லை. ஓராண்டு காலம் பல்வேறு சர்ச்சைகள் நடந்த நிலையில், 1948-ல் பிரிட்டன் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து யூத தலைவர்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார்கள். அதன் நீட்சியாக போர் மூண்டது.

1948 போரில் 7 லட்சம் பாலஸ்தீனியர்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனை பாலஸ்தீனியர்கள் அல் நக்பா (பேரழிவு) எனக் கூறுகின்றனர். இந்நிலையில் அதுபோலவே இன்னொரு அல் நக்பா இப்போது காசாவில் நடக்கின்றது என ஒப்பிட்டுக் கூறுகின்றனர். காசா நகரவாசி ஒருவர், "எங்களுக்கு தண்ணீர், உணவு, மின்சாரம் என எல்லாம் துண்டிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் ஏன் எங்களுக்கு இந்தக் கொடுமையை செய்கிறார்கள். காசாவில் நாங்கள் பாலஸ்தீனியர்களாக இருக்கிறோம். அதனால் நாங்கள் அநீதிக்கு உட்படுத்தப்படுகிறோம்" என்றார்.

காசாவில் இருந்து வெளியேற மறுத்த கரம் அபு குடா என்ற நபர், "நாங்கள் எங்கு சென்றாலும் எங்களை அவர்கள் குண்டுவீசி கொல்வார்கள் என்றால், இங்கிருந்து மட்டும் நாங்கள் ஏன் செல்ல வேண்டும். நாங்கள் இங்கேயே எங்கள் வீட்டிலேயே இறந்துபோகிறோம்" என்று கூறினார்.

"1948-ல் புதிதாக அமைந்த இஸ்ரேல் நாடானது 500 பாலஸ்தீன கிராமங்கள், நகரங்களை அழித்தது. ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்தனர். 7 லட்சம் பேர் வேரறுக்கப்பட்டனர். அப்போதும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பாரபட்சமின்றி இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டனர். 1948-ல் தப்பியோடியவர்கள் யாரும் மீண்டும் அப்பகுதிக்கும் திரும்ப நினைக்கவே இல்லை. அதுபோன்ற உத்தரவைத்தான் இப்போதும் இஸ்ரேல் பிறப்பித்துள்ளது. இப்போது செல்பவர்கள் திரும்பிவருவார்களா எனப் பேசுவதற்கு முன்னர் அவர்கள் உயிர் தப்புவார்களா என்பதை யோசிக்க வேண்டும்" என்று இன்னொரு காசாவாசி கூறினார்.

இந்நிலையில், தெற்கு நோக்கிச் செல்லத் தொடங்கியபோது நேர்ந்த அவலம் குறித்து ஒருவர் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார். "நான், என் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருடன் தெற்கு நோக்கி புறப்பட்டேன். எங்கள் குடும்பத்தில் பெண்கள், குழந்தைகள் இருந்தனர். திடீரென ஒரு குண்டு வீச்சில் சிக்கினோம். நான் கண்விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிலும் என் உறவுகளின் சடலங்கள். அதிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்கள். நான் மட்டும் மீண்டும் மீண்டும் பிழைத்தேன். என் தலை மீது ஒரு மூளை சிதறிவந்து கிடந்தது. பெண்களும், குழந்தைகளும்தான் இலக்கு என்பதுபோல் தாக்கினார்கள்" என்றார்.

724 குழந்தைகள் உள்பட 2,215 பேர் பலி: காசாவில் உள்ள ஹமாஸ் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது. இதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதலில் இதுவரை 724 குழந்தைகள், 458 பெண்கள் உள்பட 2,215 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 324 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் 8,714 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா நகரை விட்டு பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் நேற்று கெடு விதித்த நிலையில், பொதுமக்கள் பலரும் பல்வேறு வாகனங்கள் மூலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே, காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலை தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட இஸ்லாமிய ஜிகாதி குழுக்களும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இருந்து ரஃபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் டாங்குகள் உள்ளிட்ட ராணுவ வாகனங்களை இஸ்ரேல் காசாவை ஒட்டிய எல்லையில் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x