Published : 13 Oct 2023 04:49 AM
Last Updated : 13 Oct 2023 04:49 AM

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் குறித்து முதல்முறையாக ஈரான் அதிபருடன் சவுதி இளவரசர் ஆலோசனை

ரியாத்: பாலஸ்தீனத்துக்கு எதிரான போர் குற்றங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் காசா நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

வான் தாக்குதலுக்கு பயந்து காசா நகரில் உள்ள மக்கள் தங்கள்உடமைகளுடன் , ஐ.நா. பள்ளிகள் உட்பட பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். பேக்கரிகள் மற்றும் பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைபோதுகிறது. பேக்கரிகளில் எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாததால், அவைகள் திறந்த சில மணி நேரங்களிலேயே மூடப்படுகின்றன. காசா பகுதிக்குள் உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்துகள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தி விட்டது. காசா நகரில் இருந்த ஒரே மின் நிலையமும், எரிபொருள் இன்றி மூடப்பட்டுவிட்டது. இதனால காசா நகர் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின் பற்றாக்குறை மருத்துவமனைகளின் செயல்பாட்டை முடக்கும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசா பகுதியில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனை அல்-ஷிபாவில் ஜெனரேட்டர்கள் இயங்க இன்னும் 3 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே உள்ளது. இங்கு ஆபரேஷனுக்காக 50 நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று மருத்துவர் காசன் அபு சித்தா கூறியுள்ளார்.

தப்பிக்க வழியில்லை: காசா பகுதியில் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு விட்டன. இதனால் காசா நகரில்உள்ள மக்களால் அப்பகுதியைவிட்டு வெளியேற முடியவில்லை. எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாமல் குண்டுகள் வீசப்படுகின்றன. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடிபாடுகளில் சிக்கி இறக்கின்றனர். வான் தாக்குதலில் காசாவில் சுமார் 1,200 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் குறித்து போனில் ஆலோசனை நடத்தினர். ஈரான், சவுதி இடையே கடந்த 7 ஆண்டுகளாக விரோதம் நிலவிவந்தது. இதை போக்கி மீண்டும் உறவுகள் ஏற்பட சீனா முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த சவுதி அரேபியா, ஈரான் ஆகியவை கடந்த மார்ச் மாதம் ஒப்புக்கொண்டன. இந்நிலையில் நேற்று இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக போனில் பேசினர். அப்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான போர் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்துவது தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் பேசுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்பதாக சவுதி இளவரசர் தெரிவித்தார். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை சவுதி அரேபியா நிராகரிக்கிறது என அவர் வலியுறுத்தினார்.

பிளிங்கன் வருகை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், நேற்று இஸ்ரேல் வந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இதர இஸ்ரேலிய தலைவர்களை சந்தித்து பேசினார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அவர் உறுதியளித்தார்.

ஜெர்மனி ராணுவ உதவி: ஐந்து ஹெரான் டி.பி ட்ரோன்களை ஜெர்மனி ராணுவம் குத்தகைக்கு எடுத்து ஜெர்மனி ராணுவத்தினரின் பயிற்சிக்காக இஸ்ரேலில் வைத்துள்ளது. இவற்றில் இரண்டு ட்ரோன்களை பயன்படுத்திக் கொள்ள இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் போர்க்கப்பல்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கும்படி ஜெர்மனியிடம் இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என ஜெர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் போரிஸ் பஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

எந்த உதவி தேவைப்பட்டாலும் ஜெர்மனியிடம் கேட்கலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், கூறியதாக ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ் தெரிவித்தார்.

ஜெர்மனியில் இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். ஒரு சிலர் ஹமாஸ் தாக்குதலை கொண்டாடினர். ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவுளிக்கும் செயல்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x