Published : 09 Oct 2023 03:58 PM
Last Updated : 09 Oct 2023 03:58 PM

அமெரிக்க பேராசிரியர் கிளாடியாவுக்கு பொருளாதார நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம்: நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "தொழிலாளர் சந்தையில் (labour market) பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக" கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

1946-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த க்ளாடியா கோல்டின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இவரது ஆராய்ச்சி 200 ஆண்டுகளாக தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு எப்படி மாறியுள்ளன என்பதையும் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு விகிதங்களில் பாலின வேறுபாடுகள் எப்படி உள்ளன என்பது பற்றிய தரவுகளை வழங்கியுள்ளது என நோபல் பரிசு வழங்கும் தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2-ம் தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, மருத்துவத்துக்கான நோபல் பரிசு ட்ரூ வெய்ஸ்மேன், கட்டாலின் கரிக்கோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதேபோல், அமெரிக்காவின் ஒகையோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் பெரன்க் க்ரவுஸ், ஸ்வீடனின் லூண்ட்பல்கலைக்கழக பேராசிரியர் ஆனிஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மவுங்கி ஜி பவெண்டி, அமெரிக்காவின் லூயிஸ் இ புருஸ், ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சி ஐ எகிமோவ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு அறிவிக்கப்பட்டது. ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடப்பு ண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டின் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1896-ஆம் ஆண்டு மறைந்த ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் உயிலின்படி பெறப்பட்ட 11 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனார் (1 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையைக் கொண்டது. இந்தாண்டு ஸ்வீடிஸ் குரோனார்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை 1 மில்லியன் குரோனார்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

ஆல்பரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு பெற்றவர்கள் பரிசு பெற அழைக்கப்படுவார்கள். இதில் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x