Published : 30 Sep 2023 10:10 AM
Last Updated : 30 Sep 2023 10:10 AM

”பேச்சு சுதந்திரத்தை நாங்கள் யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” - கனடா பிரச்சினையில் அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

வாஷிங்டன்: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டக்கூடாது. அது எங்களைப் பொறுத்தவரை உரிமை துஷ்பிரயோகமாகும். கனடா தீவிரவாதம், பயங்கரவாதம், வன்முறையை ஆதரிப்பதுதான் உண்மையான பிரச்சினை. கனடாவில் உள்ள இந்தியத் தூதரகக் கட்டிடத்தில் காலிஸ்தான் ஆதரவுப் போஸ்டர்கள் தொங்கவிடப்பட்டன.

இதேபோன்ற நிலைமையை நீங்கள் (அமெரிக்கர்கள்) எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வீர்கள் என்று என் நிலைமையில் இருந்து யோசித்துப் பாருங்களேன். கனடாவில் மட்டுமல்ல இங்கே சான் ஃப்ரான்சிஸ்கோவிலும் இந்திய தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்தியாவும், கனடாவும் இணைந்து பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பது பற்றி கலந்தாலோசிக்க வேண்டும். கனடா பிரச்சினை பற்றி நான் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் பேசியிருக்கிறேன். நாங்கள் கனடாவின் குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல் இல்லை. எதையும் பார்க்கமாட்டோம் என்று கதவுகளை மூடிக் கொண்டும் இல்லை. எதிர்தரப்பில் என்று ஆதாரமாகக் காட்ட தெளிவாக ஏதேனும் இருந்தால் அதை நாங்கள் பார்க்கத் தயாராகவே இருக்கிறோம்.

அதேபோல் இந்தியா சார்பில் சில தனிநபர்களை நாடு கடத்தும்படி கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அவற்றை கனடா கண்டுகொள்ளவே இல்லை. அந்த நபர்கள், அமைப்புகள் இந்தியாவுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும், சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டன என்பது தெரிந்துமே கனடா ஒத்துழைக்கவில்லை என்றார். கனடாவில் இந்திய தூதரக அலுவலகம் மீது புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எங்கள் தூதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதும், அவமரியாதை செய்யப்படுவதும் இன்றும் தொடர்கிறது. இதேபோன்ற சம்பவங்கள் வேறு நாடுகளுக்கு நடந்திருந்தால் என்னவாகியிருக்கும். அதனால்தான் இந்தச் சம்பவத்தை சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். ஊடகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாகப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன், கனடா - இந்தியா தங்கள் பிரச்சினையை தாங்களே பேசித் தீர்க்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

கனடா - இந்தியா மோதல் பின்னணி: கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x