Published : 27 Dec 2017 10:34 AM
Last Updated : 27 Dec 2017 10:34 AM

ரஷ்ய கப்பலை கண்காணித்த பிரிட்டன்

பிரிட்டிஷ் கடல் எல்லை அருகே வந்த ரஷ்ய போர்க்கப்பலை அந்த நாட்டு கடற்படை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளது.

சிரியாவில் முகாமிட்டிருந்த ரஷ்ய போர்க்கப்பல்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றன. இதில் ரஷ்யாவின் அட்மிரல் கோர்சோவ் போர்க்கப்பல் கடந்த சனிக்கிழமை பிரிட்டிஷ் கடல் எல்லைக்கு மிக அருகில் வந்தது.

உடனடியாக பிரிட்டிஷ் கடற்படையைச் சேர்ந்த எச்எம்எஸ் டைனி என்ற ரோந்து கப்பல் ரஷ்ய போர்க்கப்பலை பின் தொடர்ந்து கண்காணித்தது.

இதுகுறித்து பிரிட்டிஷ் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது. பிரிட்டிஷ் கடல் எல்லை அருகே வரும் அனைத்து கப்பல்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ரஷ்ய போர்க்கப்பல் அட்மிரல் கோர்சோவை நிழலாகப் பின்தொடர்ந்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களையும் பிரிட்டிஷ் கடற்படை வெளியிட்டுள்ளது.

அட்மிரல் கோர்சோவ் போர்க்கப்பல் ரஷ்ய கடற்படையில் இன்னமும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. ஆனால் அந்த போர்க்கப்பல் உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பிரிட்டிஷ் கடல் எல்லையை தாண்டும் வரை ரஷ்ய போர்க்கப்பலை அந்த நாட்டு கடற்படை தீவிரமாக கண்காணித்தது. இதற்காக பிரிட்டனின் 2 ஹெலிகாப்டர்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் இணையதள கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேபிள்களை ரஷ்யா ரகசியமாக துண்டிக்கக்கூடும் என்று பிரிட்டிஷ் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடுமையான பொருளாதார இழப்புகள் ஏற்படும். பாதுகாப்புக்கு அச்சறுத்தல் நேரிடும் என்று நேட்டோவும் எச்சரித்துள்ளது.

எனவே பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் கடல் எல்லைப் பகுதிக்குள் வரும் ரஷ்ய போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் அண்மைகாலமாக மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x