Published : 12 Sep 2023 02:46 PM
Last Updated : 12 Sep 2023 02:46 PM

பார்பிக்யூ உணவகம் முதல் ராக்கெட் லாஞ்சர் வரை - கவனம் ஈர்க்கும் கிம் ஜாங் உன்னின் கவச ரயில்

பியாங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு செல்வதாகவும், அங்கு அவர் அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் பயணிக்கும் பச்சை நிற ரயில் குறித்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் கிம் ஜாங் ரஷ்யா வருவவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அவர் வெளிநாட்டுக்குச் செல்வது 4 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதன் முறையாகும். கிம் ஜாங் - புதின் சந்திப்புக்கு நிகரமாக பேசப்படுவது கிம் பயணிக்கும் கவச ரயில் குறித்துதான். ஆம், வட கொரியாவிலிருந்து ரஷ்யா வரை சுமார் 1,180 கிமீ தொலைவை ரயிலில் கடக்கிறார் கிம். இந்த ரயில் பயணத்துக்கு பின்னால் சில சுவாரஸ்யமூட்டும் தகவல்கள் உள்ளன. மணிக்கு 59 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லும் இந்த ரயில் முழுக்க முழுக்க பச்சை நிறத்தில் உள்ளது. 1,180 கிமீ தொலைவை 20 மணிநேரத்துக்கும் மேலாக கிம், ராணுவ அதிகாரிகள் படை சூழ இந்த குறிப்பிட்ட ரயிலில் பயணம் செய்ய பாரம்பர்ய பின்னணி ஒன்றும் உள்ளது.

கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் (Kim Jong Il) மற்றும் தாத்தா கிம் இல் சுங் (Kim Il Sung) ஆகிய இருவருக்கும் விமான பயணத்தின்மீது அச்சம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களின் ஜெட் ஒன்று சோதனை ஓட்டத்தில் வெடித்ததில் இருந்து இருவரும் விமான பயணங்களை மேற்கொண்டதில்லை என்பதும் பலமுறை வெளிவந்துள்ளது. கிம் இல் சுங் கடந்த 1986-ல் சோவியத் யூனியனுக்குப் விமானத்தில் சென்றதே, கடந்த மூன்று தசாப்தங்களில், வட கொரிய தலைவர் ஒருவர் அதிகாரபூர்வமாக மேற்கொண்ட விமானம் பயணம் என்பது அதற்கான சான்று. இதன்பின் வடகொரிய தலைமை பொறுப்பில் இருந்த எவரும் அதிகாரபூர்வ விமான பயணங்களை மேற்கொண்டதில்லை.

கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல், இதேபோல் 2001-ல் புதினை சந்திக்க ரஷ்யா சென்றபோது 10 நாள்கள் ரயில் பயணம் செய்தார். கிம் ஜாங் உன்னை பொறுத்தவரை 1990களில் சுவிட்சர்லாந்தில் படித்தவர் என்பதாலும், அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டவர் என்பதாலும் அவருக்கு விமானத்தில் அச்சம் என்றே கூறப்படுகிறது. எனினும், 2011ல் வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றத்தில் இருந்து பெரும்பாலும் தனது தொலைதூர பயணங்களுக்கு ரயிலையே தேர்வு செய்கிறார். கடைசியாக இரு முறை சீனாவுக்கு சென்றபோதும், இதற்கு முன் ரஷ்யாவுக்கு சென்றபோதும் ரயிலே கிம்மின் பிரதான தேர்வு.

சிறப்பம்சங்கள் என்னென்ன? - கிம் ஜாங் உன் பயணிக்கும் இந்த பச்சை நிற ரயில் மொத்தமாக 90 பெட்டிகள் கொண்டது என்கிறார்கள். அனைத்து பெட்டிகளுமே குண்டு துளைக்க முடியாதவை. வெடிகுண்டு அல்ல, ராக்கெட் லாஞ்சரை வைத்தும் இந்த ரயிலை தாக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் இந்த ரயிலை கவச ரயில் என்று கொரிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ரயிலினுள் யார் யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாத வகையில் ரயிலின் ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயிலுக்குள் பார்பிக்யூ தயாரிக்கும் உணவகம், ஆலோசனை அறை, படுக்கையறை, சேட்டிலைட் தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் போன்ற அதிநவீன வசதிகளும் இருப்பதாக கூறப்டுகிறது. இவை தவிர போதுமான அளவிலான ஆயுதங்களுடன், ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் வசதியும் இருப்பதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இதனால் ரயிலின் எடையும் மிக மிக அதிகம்.

இதில், 90 பெட்டிகள் ஒரே ரயிலாக இல்லாமல், மூன்று ரயில்களாக பிரிக்கப்பட்டு பயணிக்கும் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. முதல் ரயில், அதிபர் செல்ல உள்ள பாதையில் எந்த தடையும் இல்லை என்பதை உறுதி செய்யவும், இரண்டாவது ரயில் அதிபர் பயணிப்பதற்காகவும், மூன்றாவது பாதுகாப்பு வீரர்கள் குழு பயணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

வடகொரிய அதிபர் குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்பே அங்கு பாதுகாப்பு படையை சேர்ந்த 100 பேர் சென்று பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் முதல் ரயிலில் வீரர்கள் அனுப்பப்படுவதும் வழக்கம். அதற்கேற்ப ரயிலில் செல்லும் பாதுகாப்பு அதிகாரிகள் பிரத்யேக பயிற்சிகளை பெற்றவர்கள் என்று கொரிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆனால், இவை கதைகளாக ஒருபுறம் சொல்லப்பட்டாலும் கிம்மின் இந்த ரயில் பயணத்தை அமெரிக்கா வேறுவிதமாக பார்க்கிறது. உக்ரைன் - ரஷ்ய போர் நடைபெற்று வரும் இந்த சமயத்தில் கிம்மின் ரஷ்ய பயணம் ஆயுதங்களை மாற்றுவதற்காக இருக்கலாம் என அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. அதற்காக இந்த ரயிலை அவர் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிறது.

வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில், வட கொரிய அதிபர் கிம் தனது நாட்டு ராணுவ பலத்தையும், ஆயுத பலத்தையும் அதிகரித்துக்கொண்டே செல்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் தற்போது ரஷ்யாவுக்கு ஆயுத விற்பனையை கிம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரமே, ஆயுதப் படையை பலப்படுத்தும் வகையில், வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதனை உண்மையாக்கும் வகையில் கிம் - புதின் சந்திப்பு நடக்கவுள்ள நிலையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதற்கான பலனை வடகொரியா சந்திக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுளிவியன் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x