Published : 08 Dec 2017 10:05 AM
Last Updated : 08 Dec 2017 10:05 AM

உலக மசாலா: நடக்க முடியாதவர்களுக்கு அற்புத ரோபோ சூட்

னிதர்கள் அணிந்து கொள்ளக்கூடிய வகையில் உலகிலேயே முதல்முறையாக ‘ரோபோ சூட்’ தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோபோ உடையை அணிந்துகொண்டால், மனித உடல் உறுப்புகளின் பணியில் முன்னேற்றம் தெரியும். மனிதனும் ரோபோவும் சேர்ந்து இயங்கக்கூடிய தொழில்நுட்பம் இது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மனித உடல் உறுப்புகள் தாங்களாகவே வேலை செய்யாமல், செயல் இழந்துவிடுவதில்லை. அவற்றுக்கு மூளையிலிருந்து இயங்க வைக்கக்கூடிய கட்டளைகள் வருவதில்லை. இந்த ரோபோ உடை மூளை நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து, குறிப்பிட்ட உறுப்புகளுக்குக் கட்டளைகளை அனுப்ப வைக்கிறது. கட்டளைகள் கிடைத்ததும் அந்த உறுப்பு வேலை செய்யத் தயாராகிவிடுகிறது. ஆண்டு கணக்கில் நடக்க இயலாமல் இருப்பவர்கள் கூட, இந்த உடையை அணிந்தவுடன் மாடிப்படிகளில் கூட எளிதாக ஏறிவிடுகிறார்கள். “நான் 5 ஆண்டுகளாகச் சக்கர நாற்காலியில்தான் அமர்ந்திருந்தேன். ரோபோ உடையைப் போட்டவுடன் என்னால் நிற்க முடிந்தது. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாடிப்படிகளிலும் ஏறியபோது ஆச்சரியத்தில் உறைந்துபோனேன்” என்கிறார் 74 வயது ஹிஃபுமி ஃபுகுஷிமா. “மனித மூளையையும் பயோ எலக்ட்ரிக் சமிக்ஞைகளையும் இணைத்து, உடல் உறுப்புகளைச் செயல்பட வைக்க நினைத்தோம். அதற்காகக் கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்திருக்கிறோம். ஆரம்பத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து செய்த முயற்சியால் 6 ஆண்டுகளுக்கு முன்பு பயன் அளிக்கக்கூடிய வகையில் ரோபோ உடையைத் தயாரித்துவிட்டோம். ஆனால் அதன் எடை 22 கிலோவாக இருந்தது. இதை எல்லோராலும் அணிந்து செல்வது கடினமானது. அதனால் ரோபோ உடையில் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டு வந்தோம். தற்போது 10 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட ரோபோ உடைகளை உருவாக்கிவிட்டோம். இது மிகவும் வசதியாக இருக்கிறது” என்கிறார் சைபர்டைன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி யூஷுகி ஷங்காய்.

மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, இந்த உடையை சாதாரணமானவர்களும் அணிந்துகொண்டால் அசாதாரணமான காரியங்களைச் செய்யமுடியும். 40 கிலோ எடை உடைய ஒரு பொருளைக் கூட ரோபோ உடை மூலம் சாதாரணமாகத் தூக்கமுடியும். “எங்கள் மருத்துவமனைக்கு ரோபோ உடை வந்த பிறகு நோயாளிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடக்கிறார்கள். அவர்களது சக்கர நாற்காலியை அவர்களே தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். இங்கே பணி செய்யும் ஊழியர்களின் சுமையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. நோயாளிகளைத் தூக்கிக்கொண்டு அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல முடிகிறது. படுக்கையில் இருக்கும் 60 கிலோ எடை கொண்ட ஒரு நோயாளியை நான் கூட எளிதாகத் தூக்கிவிடமுடிகிறது. ரோபோ உடை நோயாளிகளுக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற மருத்துவ ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மாதத்துக்கு 1.3 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து, இந்த ரோபோ உடையை எங்கள் மருத்துவமனை நோயாளிகளுக்காகப் பயன்படுத்திவருகிறது. தொழில்நுட்பத்தின் மகத்துவத்தை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் மேற்கு ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்யும் ஒரு செவிலியர்.

நடக்க முடியாதவர்களுக்கு அற்புத ரோபோ சூட்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x