Published : 29 Aug 2023 12:54 PM
Last Updated : 29 Aug 2023 12:54 PM

எல்லைப் பிரச்சினை | அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா

பீஜிங்: சீன அரசாங்கம் நேற்று (ஆகஸ்ட் 28) தங்கள் தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. காரணம் அதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் தனது வரைபடத்தில் இணைத்ததோடு, அக்‌ஷய் சின் பிராந்தியம் சீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதுபோல் காட்டப்பட்டுள்ளது.

2023 சீன வரைபடம் எனப் பெயரிடப்பட்ட இந்த வரைபடத்தை சீனாவின் இயற்கை வளங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த புதிய வரைபடம் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய நைன் டேஷ் லைனையும் உள்ளடக்கியுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சீன உள்துறை அமைச்சகம் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

முன்பு பெயர்கள்; இப்போது முழு பிராந்தியமும்.. அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் மாற்றி உள்ளது. இதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றியது. இந்நிலையில், சீன அரசாங்கம் நேற்று (ஆகஸ்ட் 28) தங்கள் நாட்டின் புதிய வரைபடம் வெளியிட்டது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 9, 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"nine-dash line" சர்ச்சை என்றால் என்ன? ஒன்பது வரிக் கோடு (Nine Dash line) என்பது தென்சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கோர சீனா பயன்படுத்தும் எல்லைக் கோடு ஆகும். இங்கு ஆழமற்ற கடற்பகுதிகளில் மணலை போடுவதன் மூலம் செயற்கையான தீவுகளையும் சீனா உருவாக்கியுள்ளது. அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் “மணல் பெருஞ்சுவர்” என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தக் கோட்டை வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. இது தொடர்பாக 2016-ல் சர்வதேச நீதிமன்றத்தை பிலிப்பைன்ஸ் நாடியது. அப்போது சர்வதேச நீதிமன்றம், நைன் டேஷ் லைனுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் ஏதுமில்லை. ஆகையால் பிலிப்பைன்ஸ் அப்பகுதிகள் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கலாம் என்று கூறியது. ஆனால் அந்தத் தீர்ப்பை சீனா நிராகரித்தது. சீனாவுடன் இவ்விவகாரத்தில் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் அவ்வப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நைன் டேஷ் லைன் பகுதியையும் புதிய வரைபடத்தில் சீனா உள்ளடக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x