Published : 24 Aug 2023 03:54 PM
Last Updated : 24 Aug 2023 03:54 PM

‘பிரிக்ஸ்’ விரிவாக்கம்: அடுத்த ஆண்டு முதல் புதிதாக 6 நாடுகள் இணைப்பு

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய தலைவர்கள்

ஜோகன்னஸ்பர்க்: வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் அடுத்த ஆண்டு முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகள் புதிதாக இணைப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வியாழக்கிழமை தெரிவித்தார்.

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர், "அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும்" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டை முன்னிட்டு, அமைப்பினை விரிவாக்கம் செய்யும் முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறுகையில், "பிரிக்ஸ் அமைப்பின் விரிவாக்கம், அதன் ஒற்றுமை வழிமுறைகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும். இது ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கான பிரிக்ஸ் அமைப்பின் உறுதிப்பாட்டினை பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆக.22-ம் தேதி தொடங்கியது. இந்த அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில், அமைப்பினை விரிவாக்கம் செய்வதற்கான கொள்கை ஆதிக்கம் செலுத்தியது. இதில் புதிய உறுப்பினர்களை இணைப்பது குறித்த அளவுகோல்களை உருவாக்குவதில் கருத்து வேறுபாடுகள் நிலவியது. ஆனாலும், பிரிக்ஸ் அமைப்பினை விரிவாக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், தரநிலைகள், நடைமுறைகள் குறித்து எடுக்கப்பட்ட முடிகளை குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது தலைமை தாங்கும் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ராமபோசா தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரத்தில் கால் பகுதியையும், சுமார் மூன்று பில்லியனுக்கும் அதிகமான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு இரண்டு டஜன்களுக்கும் அதிகமான நாடுகள் முறையாக விண்ணப்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக்கத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி: புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில்:
"பிரிக்ஸ் அமைப்பில் தற்போது இந்தியா, ரஷ்யா, பிரேசில் உட்பட 5 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைந்து பெரிய அளவிலான அமைப்பாக மாறவேண்டும் என்பது எங்களது விருப்பமாக உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடுகளை அதிகரிப்பதற்கு இந்தியா தனது முழு ஆதரவை இங்கு தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரத்தில் தற்போது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கருத்தொற்றுமையுடன் இந்த விரிவாக்கம் நடைபெறவேண்டும்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே விண்வெளி, கல்வி, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. 2016-ல் இந்தியா தலைமையேற்று பிரிக்ஸ் மாநாட்டை நடத்தியது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிக்ஸ் என்பதற்கு ‘தடைகளை உடைத்தல், பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளித்தல், புதுமைகளை ஊக்குவித்தல், வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்று நாம் அர்த்தம் கூற முடியும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x