Published : 24 Aug 2023 07:14 AM
Last Updated : 24 Aug 2023 07:14 AM

‘பிரிக்ஸ்’ அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் 3 நாட்கள் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்க நாளில் கலந்துகொண்ட (இடமிருந்து) பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ். படம்: பிடிஐ

ஜோகன்னஸ்பர்க்: ‘பிரிக்ஸ்’ அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இம்மாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு சென்றார். அங்கு உள்ள வாட்டர்க்ளூஃப் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய மோடிக்கு அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்.

உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும். இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. யு.பி.ஐ. தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்

பிரிக்ஸ் அமைப்பில் தற்போது இந்தியா, ரஷ்யா, பிரேசில் உட்பட5 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைந்து பெரிய அளவிலான அமைப்பாக மாறவேண்டும் என்பது எங்களது விருப்பமாக உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடுகளை அதிகரிப்பதற்கு இந்தியாதனது முழு ஆதரவை இங்கு தெரிவித்துக் கொள்கிறது.

அதேநேரத்தில் தற்போது பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கருத்தொற்றுமையுடன் இந்த விரிவாக்கம் நடைபெறவேண்டும். .

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே விண்வெளி, கல்வி, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. 2016-ல் இந்தியா தலைமையேற்று பிரிக்ஸ் மாநாட்டை நடத்தியது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிக்ஸ் என்பதற்கு ‘தடைகளை உடைத்தல், பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளித்தல், புதுமைகளை ஊக்குவித்தல், வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்று நாம் அர்த்தம் கூற முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாநாட்டில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x