

ஏமன்: ஏமன் நாட்டை நோக்கிச் சென்ற அகதிகள் படகு ஜிபூட்டி கடற்கரை அருகே கவிழ்ந்த விபத்தில், 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 116 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அனைத்து சர்வதேச அகதிகள் அமைப்பான ஐஓஎம் நேற்று தெரிவித்துள்ளது.
சுமார் 350 பேருடன் சென்ற அந்தப் படகு அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிபூட்டி நாட்டின் துறைமுக நகரான ஒபோக்கிற்கு வடக்கே உள்ள குஹெரே பகுதிக்கு அருகில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 80 பேருக்கும் அதிகமானோர் உயிர் பிழைத்துள்ளனர். உயிர் பிழைத்த அனைவரும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
எத்தியோப்பிய அரசுத் தரப்பிலிருந்தும் தகவல் வெளியிடப்படவில்லை. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே ஆபத்தான கடல் வழிகளில் அகதிகள் பயணம் செய்யும்போது இதுபோன்ற கோர விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.