உச்ச நீதிமன்றம் நோக்கி இண்டியா கூட்டணி இன்று பேரணி: அனைவரும் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு

உச்ச நீதிமன்றம் நோக்கி இண்டியா கூட்டணி இன்று பேரணி: அனைவரும் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு
Updated on: 
2 min read

புதுடெல்லி: இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று ‘இண்டியா கேட்’ முதல் உச்ச நீதிமன்றம் வரை பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்க இளைஞர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, இண்டியா கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 6-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடைபெற்றது. கடந்த 7-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் அருகே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கடந்த 8-ம் தேதி இண்டியா கூட்டணி தலைவர்கள் காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை போராட்டம் நடத்தினர். கடந்த 9-ம் தேதி அந்தக் கூட்டணியின் மூத்த தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய கோரி மனு அளித்தனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்த இந்தியாவை நாம் விரும்பவில்லை. அக்டோபர் 12-ம் தேதி ‘இண்டியா கேட்’ முதல் உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி செல்கிறோம். இதில் கட்சி, பாலினம், சாதி, சமுதாயம், மாநில பாகுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன். வாக்கு திருட்டை தடுக்க வேண்டும். எஸ்ஐஆர் பணிக்குத் தடை விதிக்க வேண்டும்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். நாம் ஒன்றிணைந்து பேரணியாகச் செல்வோம். இதன் மூலம் சகோதரத்துவம், தேசப்பற்றை வெளிப்படுத்துவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில், ‘‘டெல்லியில் அக்டோபர் 12-ம் தேதி பேரணி நடைபெறுகிறது. அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தைக் காப்பாற்ற பொதுமக்கள் அனைவரும் பேரணியில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களவை, மாநிலங்களவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர். பேரணியின் இறுதியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்தைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கு நேரம் ஒதுக்கக் கோரி தலைமை நீதிபதியிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அளித்துள்ளார். இதன்படி இன்று மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் இண்டியா கூட்டணி தலைவர்கள் தலைமை நீதிபதி சூர்ய காந்த்தை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் நோக்கி இண்டியா கூட்டணி இன்று பேரணி: அனைவரும் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு
‘மத்திய அரசு விழா மேடையில் பாஜக தலைவரை உட்கார வைத்தது மோசமான முன் உதாரணம்’ - அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in