Published : 13 Nov 2017 12:47 PM
Last Updated : 13 Nov 2017 12:47 PM

‘நான் கிழவனா?’ - வட கொரிய அதிபருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேள்வி

‘நான் கிம்மை குண்டானவர், குள்ளமானவர் என்று அழைக்கவில்லையே.. என்னை எதற்கு கிழவர் என்று கிம் அழைத்தார்?’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா என ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ட்ரம்பின் இந்தப் பயணத்தில், அத்துமீறி ஏவுகணைச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாவைப் பற்றியே பெரும்பாலும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ட்ரம்பின் இந்தப் பயணம் குறித்து வடகொரியா, “ட்ரம்ப் அழிவை ஏற்படுத்துபவர், அணுஆயுத போருக்காக கெஞ்சுபவர். அவர் கிழவர் ஆகிவிட்டதால் அவரது மனம் தளர்ந்துவிட்டது” என்று கூறியிருந்தது.

இதற்கு ட்ரம்ப் தனது ட்வீட்டில் கிண்டலான தொனியில் பதிலளித்துள்ளார்.

ட்ரம்ப் தனது ட்விட்டரில், ” நான் கிம்மை குண்டானவர், குள்ளமானவர் என்று அழைக்கவில்லையே.. என்னை எதற்கு கிம் கிழவர் என்று அழைத்தார். நான் கிம்முடன் நண்பர் ஆக முயற்சி செய்து கொண்டிருகிறேன். ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் ட்விட்டர் பதிவு

ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக, அந்த நாட்டின் மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x