Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM

தொண்டு நிறுவனங்களின் பேச்சுரிமையை பறிப்பதா? - இலங்கை அரசுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

ஊடகங்களின் மூலம் தொண்டு நிறுவனங்கள் தங்களின் கருத்துகளைச் சொல்வதற்கு தடை விதித்த இலங்கை அரசின் செயல் கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், தேச நலனுக்கு எதிரான பணிகளை மேற்கொள்வதாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கான தேசிய செயலகம், ஜூலை 1-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், “செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை சில தொண்டு நிறுவனங்கள் நடத்துகின்றன. முக்கிய விவகாரங்கள் குறித்து செய்தி அறிக்கைகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற செயல்களை தொண்டு நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி கூறும்போது, “இலங்கையில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், ஊடகம் சார்ந்த தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது மிகுந்த கவலையை அளிக்கிறது.

பேச்சுரிமை, கூட்டம் நடத்துவதற்கான உரிமை, இலங்கையின் ஜனநாயகப் பாரம்பரியம் ஆகிய வற்றிற்கு எதிராக இந்த உத்தரவு அமைந்துள்ளது. இலங்கையின் ஜனநாயக மதிப்பீடுகளுக்கு ஆதரவாக செயல்படும் இந்த தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட அந்நாட்டு அரசு அனுமதிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x