Published : 25 Jul 2014 10:00 AM
Last Updated : 25 Jul 2014 10:00 AM

கூடைப்பந்து போட்டியில் சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதி: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சர்வதேச கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற சீக்கிய விளையாட்டு வீரர்கள், தலைப்பாகை அணிய தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இனிவரும் போட்டிகளில் தலைப்பாகை அணிந்து விளையாட அனுமதிக்கும் வகையில் விதிமுறையை திருத்த வேண்டும் என்று சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்திய அணியை சேர்ந்த சீக்கியர்கள் இருவர், தலைப்பாகையை அணிந்து விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.

பிறருக்கு தீங்கிழைக்கும் வகையிலான பொருள்களை உடலில் அணிந்து வீரர்கள் விளையாடக் கூடாது என்ற சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பின் விதிமுறையை அதற்கு காரணம் காட்டி இருந்தனர். இந்நிலையில், சீக்கியர்களின் மத அடையாளமான தலைப்பாகையை அணிந்து விளையாட அனுமதி அளிக்கும்படி சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்புக்கு அமெரிக்க எம்.பி.கள் ஜோ குரோவ்லி, அமி பேரா உள்ளிட்ட எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அடுத்த மாதம் சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டத்தின்போது, தற்போதைய விதிமுறையை மறுபரிசீலனை செய்து, போட்டியின்போது சீக்கிய விளையாட்டு வீரர்கள் தலைப்பாகை அணிய அனுமதிப்பீர்கள் என நம்புகிறோம்.

தலைப்பாகை அணிந்து விளையாடுவதால், மற்ற வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடிய அளவுக்கு தீங்கு எதுவும் நேரப்போவதில்லை. இதுவரை எந்தவொரு விளையாட்டிலும், அப்படி சக வீரர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. அமெரிக்காவின் டிரினிட்டி பல்கலைக்கழக கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்த தர்ஷ் பிரீத் சிங், தலைப்பாகை அணிந்துதான் விளையாடினார். அதனால், எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.

பல்வேறு இன, மத, கலாச்சார பின்னணியை கொண்ட வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடுவதற்கான களமாக கூடைப்பந்து இருக்க வேண்டும். பாரபட்சம் காட்டக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x