Published : 02 Jul 2023 01:27 PM
Last Updated : 02 Jul 2023 01:27 PM

பிரான்ஸ் கலவரம் | மேயர் வீட்டின் மீது காரை மோதி தீ வைத்த கும்பல்; மனைவி, குழந்தை காயம்

தாக்குதலுக்கு உள்ளான மேயரின் வீடு

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் வீட்டின் மீது கலவரக்காரர்கள் காரை மோதியதில் வீட்டில் இருந்த மேயரின் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளில் ஒருவர் காயமடைந்தனர்.

பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே மூண்ட மோதல் 5-வது நாளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் தெற்குப் பகுதியின் ஹே லெஸ் ரோஸஸ் டவுன் மேயர் வின்சென்ட் ஜேன்ப்ரன் வீட்டை வன்முறையாளர்கள் சுற்றிவளைத்தனர். அவர் வீட்டின் மீது சிலர் காரை மோதினர். இதில் மேயரின் மனைவியும் அவர்களது குழந்தைகளில் ஒருவரும் காயமடைந்தனர். மேலும் மேயரின் வீட்டுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்றிரவு திகிலும், அவமானமும் நிறைந்ததாக இருந்தது. என் வீட்டின் மீது நடந்த தாக்குதலில் என் மனைவியும் என் குழந்தைகளில் ஒருவரும் காயமடைந்தனர். இது கொலை முயற்சி மற்றும் உச்சபட்ச முட்டாள்தனம்" என்று பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன? பாரிஸ் புறநகரான நான்டெரி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த நயில் என்ற 17 வயது இளைஞர் காவல் துறையின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து பாரிஸின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைதிக்காக்குமாறு போராட்டக்காரர்களுக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு விடுத்தும் பல இடங்களில் 5 நாட்களாக வன்முறை நடைபெறுகிறது. நயிலுக்காகப் பழிவாங்குவோம் (Revenge for Nahel) என்னும் பதாகைகள் போராட்டக்களங்களில் காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மேயரின் வீட்டின் மீது வன்முறையாளர்கள் காரை மோதியதோடு வீட்டுக்கு தீவைத்தனர். நேற்றிரவு மட்டும் 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பதின்மவயதினர். இதுவரை மொத்தம் 1300 பேரை போலீஸ் காவலில் எடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x