லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்: இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்: இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Updated on
1 min read

டெல் அவிவ்: லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக லெபனானில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ராணுவம் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்தச் சூழலில் ஈரானுக்கு ஆதரவாக கடந்த 2-ம் தேதி ஹிஸ்புல்லா படை வீரர்கள், இஸ்ரேலை குறி வைத்து ஏராளமான ஏவுகணைகளை வீசினர். இதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி அழித்து வருகின்றன. இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் சக்திவாய்ந்த குண்டுகளை வீசின. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேலின் வான் வழி, தரைவழி தாக்குதல்களில் லெபனான் முழுவதும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவுக்கு ஈரான் ராணுவம் ஆயுத உதவிகளை வழங்கி வந்தது. கடந்த 2023 அக்டோபர் முதல் 2025 அக்டோபர் வரை இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழுவுக்கு இடையே 2 ஆண்டுகள் போர் நடைபெற்றது. இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி முழுமையாக அழிக்கப்பட்டது. ஹமாஸ் கிளர்ச்சிக் குழு நசுக்கப்பட்டது. மேலும் காசாவின் பல்வேறு பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்தது.

தற்போது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவின் மீதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த குழுவின் மூத்த தலைவர்கள், நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போதைய போரின் மூலம் தெற்கு லெபனானின் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்: இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வர்த்தக காஸ் சிலிண்டருக்கான ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்வு: மத்திய அரசு அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in