

தமிழ்நாடு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்காகத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தால் கடந்த 2023இல் உருவாக்கப்பட்டது இலவச கல்விச் செயலி ‘மணற்கேணி’ (TNSED Manarkeni App).
இந்தச் செயலியில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் அனைத்துப் பாடங்களும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டுள்ளன. மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனிப் பதைத் தாண்டி, தங்களுக்குப் பிடித்தமான முறையில், பாடங்களைப் பயிலவும், புரியாத பாடங்களை வீட்டில் இருந்தபடி கற்கவும் மணற்கேணி செயலி பெரும் உதவியாக அமையும்.
பாடம் சார்ந்த காணொளிகள் 2டி, 3டி அனிமேஷன் வடிவில் இதில் இடம்பெற்றுள்ளதால் மாணவர்களைக் கவர்கின்றன. மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பெற்றோரின் திறன்பேசி வாயிலாக இந்தச் செயலியை ஆசிரியரின் துணையோடு பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
‘மணற்கேணி’ செயலி குறித்துப் பெற்றோர், மாணவர்கள் தெரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வழிகாட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
என்ன இருக்கிறது?
பாடப் பகுதிகளைத் தாண்டி அனைத்துவிதமான மாணவர் களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் உயர்கல்வி வழிகாட்டுதல், விநாடி வினா, நீட், ஜெஇஇ, கிளாட் உள்ளிட்ட பலவிதமான தலைப்புகளில் பாடப் பொருள் கள் ‘மணற்கேணி’ செயலியில் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
உயர் கல்வி வழிகாட்டி பிரிவு: நீட், ஜெஇஇ, கலை - வணிகவியல் படிப்புகள், தொழில் நுட்பம், நூல் அறிமுகம், முன்மாதிரி ஆளுமைகள் (Role model), நோபல் பரிசாளர்கள், உடல்நலம், பிரபஞ்சம், பொறியியல் அற்புதங்கள், வடிவியல் இயற்கணிதம் (Geo Gebra), நுண்ணோக்கியல், தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS), பெரிய கனவுகளைக் காணத் தைரியம் கொள்ளுங்கள்( Dares to Dream), கண்டு பிடிப்புகள் (Key Invention), வாழ்க்கை திறன்கள், வெற்றித் திறன் தொடர் (Success skill Series), அதிசயமான சின்னங்கள் (Wonders and myste ries), கணித பயத்தை வேடிக் கையாக மாற்றுவது (Math fear to fun), முதல்வர் திறனறித் தேர்வு என 20 தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.
கலை, வணிகவியல்: வணிக நிர்வாகவியல் படிப்புகள், ஊடகவியல் ஆசிரியர் பயிற்சி, கவின் கலை, கணினி அறி வியல், அனிமேஷன், காட்சித்
தொடர் பியல் (விஸ்காம்), ஃபேஷன் டெக்னாலஜி, தடய வியல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
படிப்பு உத்திகள் பிரிவு: நினைவாற்றல் உத்தி, தோல்வியை எதிர்கொள்வது எப்படி, வேகமான வாசிப்பு, படிப்பு உத்திகள் ஆகிய தலைப்புகள் உள்ளன.
ஏஐ முதல் திறன்கள் வரை
உடல்நலம் எனும் பிரிவில் உடல் உறுப்பு கள், பல்வேறு வகையான நோய்கள் குறித்து விழிப்புணர்வு, சத்தான உணவு வகைகள் சார்ந்த பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரபஞ்சம் எனும் பிரிவில், வானியல் சார்ந்த பாடங்களும், பொறியியல் அற்பு தங்கள் தலைப்பில் ரோபாட், சூப்பர் கணினி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாடங்கள் உள்ளன. ‘Geo Gebra’ பகுதியில், வடிவியல், இயற்கணிதம், புள்ளியியல், நுண்கணிதம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.
‘ரோல் மாடல்’ பகுதியில் தாமஸ் ஆல்வா எடிசன், அப்துல் கலாம், முகமது அலி, சார்லி சாப்ளின், ஜி.டி.நாயுடு, வால்ட் டிஸ்னி, ஹென்றி ஃபோர்டு உள்ளிட்ட பல ஆளுமைகள் குறித்து அறியலாம். நூல் அறிமுகப் பகுதியில், வாசிக்க உகந்த பல நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நுண்ணோக்கியல் குறித்து ‘Foldscope’ பகுதியில் அறியலாம். 8ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS பாடங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
‘பெரிதினும் பெரிது கேள்’ என்கிற பாரதியின் கூற்றுக்கு இணங்க, உயரிய கனவுகளைக் கொண்டிருக்க வேண்டும், அவற்றை அடையும் வழிகளை யும் அறிந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பல காணொளிகள் ‘Dares to Dream’ பிரிவில் உள்ளன.
வாழ்க்கைத் திறன்கள் பகுதியில் சுய ஒழுக்கம், புன்னகை, தன்னை அறிதல், சுயக் கட்டுப்பாடு, அறிவியல் பார்வை, நட்பு, நன்றி மறவாமை, கம்பீரமான தோற்றம், வாசிப்பு, மேடைப்பேச்சு, அறிவியல் பார்வை குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.
சிகரம் தொட!
* வெற்றித் திறன் தொடர் (Success skillseries) வழியாக, பண நிர்வாகம், தன்னம் பிக்கை, நேர்மறைச் சிந்தனை, நேர நிர்வாகம், விடாமுயற்சி, தலைமைப்பண்பு முதலான அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு பெறலாம்.
* அதிசயமான சின்னங்கள் பகுதியில் பெர்முடா முக்கோணம், மோவாய் சிலைகள், பறக்கும் அதிசயங்கள் எனப் பலவற்றை அறியலாம்.
* கிளாட் தேர்வுக்குத் தயாராக நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.
* தொடர்ந்து கற்போம் பகுதியில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்றல் கையேடு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப் பயனுள்ள வகையில் அமையும்.
* விநாடி- வினா பகுதியில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்துப் படங்களுக்கும் தமிழ், ஆங்கில மொழியில் வினாக்கள் இடம்பெற்றுள்ளன.
* தமிழ்ப் பண்பாடு பகுதியில் தமிழர்களின் வரலாறு, கீழடி அகழாய்வு சார்ந்த காணொளிகள் சுவாரசியமான வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
தோண்டத் தோண்ட ஆற்று மணலில் நீர்ச் சுரப்பதுபோல, மணற்கேணி செயலியில் இடம்பெற்றுள்ள காணொளிகளைக் காணக் காண அறிவு பெருகும்.
பெற்றோரின் திறன்பேசியை மாணவர்கள் வெறும் பொழுது போக்குக்காகப் பயன்படுத்தாமல் பயனுள்ள வகையில் இதுபோல் பயன்படுத்தலாம்.
- choraamu@gmail.com