கல்லாதவர்கள் களர்நிலமா? | என் மன வானில்

கல்லாதவர்கள் களர்நிலமா? | என் மன வானில்
Updated on
1 min read

உலகின் அழகான இடங்களில் வகுப்பறையும் ஒன்று. கற்றலும் கற்பித்தலும் ஒருங்கே நடைபெறும் ஆற்றல்மிக்க இடம் அது. ஆசிரியர் மட்டுமே கற்பிப்பவராகவும் மாணவர் கேட்பவராகவும் மட்டுமே இருந்த சூழல் மாறிப்போன இடமாக, தற்போது மேலும் அழகாக மாறிக்கொண்டிருக்கும் இடம்.

வகுப்பறையில் கற்பித்தல் நடைபெறும் நேரம் மாணவர்களின் மனமும் உடலும் ஆற்றலின் உச்சத்தில் இருக்கும். கவனித்தல் முக்கிய அங்கம் வகிக்கும் அந்நேரத்தில் தான் கூறவிரும்பும் கருத்துகளை ஆசிரியர் எடுத்துரைக்கும்போது, மாணவரிடம் இருந்து மாற்றுக் கருத்து வெளிப்படும் சூழலில் வகுப்பறை அழகிய நந்தவனமாக மாறுகிறது.

தாயின் அக்கறை

ஒன்பதாம் வகுப்பறையில் ஒருநாள்... ‘குடும்பவிளக்கு' பாடம் அரங்கேறிக் கொண்டிருந்தது. பெண் உரிமைகளை, பெண் மதிப்புகளை மாணவர் உலகம் அறிந்துகொண்டால், எதிர்கால சமுதாயம் சமத்துவமுடையதாக, ஆரோக்கியமான மனநிலை கொண்டதாக இருக்குமே என்கிற உள்ளார்ந்த ஏக்கத்துடன், மிகவும் முயற்சி செய்து பெண் உரிமைகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தேன்.

‘கல்லாத பெண்கள் களர்நிலம்' என்கிற பாரதிதாசனின் செய்யுளைக் கூறினேன். ‘அங்கு புல் விளைந்திடலாம்... நல்ல புதல்வர்கள் விளைவதில்லை’ எனச் சொல்லி முடிக்கும் முன்னரே, மாணவர் ஒருவர் எழுந்து நின்றார். “கல்லாத பெண்கள் களர்நில மில்லை. என் அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

ஆனாலும், என் கல்வியின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் அவர்தான். எனக்காக, நான் படிக்க வேண்டும் என்பதற்காக நாள் முழுவதும் வேலை செய்கிறார். எனக்கான பணிகளைக் கவனித்துச் செய்கிறார்.

இதற்கு மாறாக படித்த பெண்களில் பலரோ தங்கள் குழந்தைகளிடம் திறன்பேசியைக் கொடுத்துவிடு கிறார்கள். தங்களைத் தொல்லை செய்யா மல் இருந்தால்போதும் என நினைக்கி றார்கள். படிக்காத பெண்களில் பலர், தங்கள் குழந்தைகளைக் கவனித்து வளர்க்கிறார்கள். ஆக, கல்லாத பெண்களால் எப்படிநல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்கிறார் பாரதிதாசன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

ஆய்ந்து அறிதல்

கல்லாத பெண்கள் என்பது எழுத்து அறிவு இல்லாத பெண்கள் என்றுதான் பாரதிதாசன் கூறியிருக்கிறாரா? இல்லை. ஆய்ந்து அறியும் திறம் இல்லாதவர்களை கல்லாத பெண்கள் என பாரதிதாசன் கூறி இருக்கலாம்.

பள்ளியில் கொடுக்கப்படும் எழுத்தறிவு, அனைவரையும் ஆய்ந்து அறியும் திறம் பெற்றவர்களாக மாற்றுகிறதா? இல்லை. எழுத்தறிவுக்கும், வாழ்க்கைத் திறன் பெற்றுக்கொள்வதற்கும் ஏதும் ஒருங்கிணைப்பில்லை.

இதுகுறித்து ஆழ்ந்த, அகன்ற உரை யாடலை ஒன்பதாம் வகுப்பில் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனத் தோன்றியதால், மாணவரை அழைத்து அவரின் புதுமையான கருத்துக்கு வரவேற்பளித்தேன்.

அவரின் தாயாரிடம் பேச விரும்புவதாகக் கூறிகைபேசி எண் வாங்கிக் கொண்டேன். அவரின் அம்மாவை கைபேசியில் அழைத்துப்பாராட்டவும் செய்தேன்.

அவரின் அறிவார்ந்த உரையாடலைப் பகிர்ந்துகொண்டேன். மற்ற மாணவர்களின் மனதிலும் தங்கள் அம்மாவைப் பற்றிய உயர் மதிப்பீட்டை இந்தச் செயல் உருவாக்கும் எனும் நம்பிக்கையோடு அன்றைய நாள் நிறை வடைந்தது.

- udhayalakshmir@gmail.com

கல்லாதவர்கள் களர்நிலமா? | என் மன வானில்
மன நிறைவு அடைந்த நாள் | என் மன வானில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in