காலம் என்பது வெறும் கற்பனை | அணு முதல் அண்டவெளி வரை 02
சம்பவம் 1: அலுவலகம் முடிந்து, அண்ணா சாலை பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஆர்ப் பாட்டமாகச் சத்தம் கேட்கிறது. பார்த்தால், சோழ இளவரசி குந்தவை, பல்லக்கில் அமர்ந்து கொண்டு ஊர்வலம் வருகிறார். உங்களைக் கடக்கும்போது, பல்லக்கின் திரையை விலக்கி, உங்களைப் பார்த்துப் புன்னகை புரிகிறார்.
சம்பவம் 2: பொறியியல் கல்லூரிக்கு நீங்கள் விண்ணப்பிக்கப் போகும்போது, விஞ்ஞானி போலத் தோற்றமளிக்கும் நாற்பது வயது மனிதர் உங்களைத் தடுத்து, மரபியல் துறையைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார். உற்றுப்பார்த்தால், அவர் வேறு யாருமல்ல, வயதான தோற்றத்தில் நீங்களேதான்.
நேர்கோட்டில் பயணம்: “என்ன கலர்கலரா ரீல் விடுறீங்க, இப்படி யெல்லாம் நடக்குமா?” என நீங்கள் கேட்கலாம். காலம் என்கிற ஒன்று, நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்துக்கு ஒரே நேர்கோட்டில் போகாமல், எல்லா காலமும், கலந்து கட்டி, ஒரே நேரத்தில் நடந்தால் மேற்கண்ட சம்பவங்கள் சாத்தியம்தான்.
ஆனால், ஒரு நாற்சந்தி சிக்னலில், நான்கு பக்கங்களுக்கும், பச்சை விளக்கு எரிந்தால் என்ன ஆகும்? அனைத்து வாகனங்களும் முட்டிக்கொண்டு, எதுவுமே நகராது இல்லையா, அதுபோல கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் ஒன்றாக நடந்து, கடைசியில் எதுவுமே நடக்கவில்லை என்று ஆகிவிடும்.
ஆக, காலம் சமர்த்தாக, ஒன்றன்பின் ஒன்றாக ஒரு வரிசையில் நகர்வதுதான் நம் இயல்பு வாழ்க்கை. காலம் என்னும் மாயநதியில், நம்மால் ரிவர்ஸ் கியர் போட்டு கடந்தகாலத்துக்கும் போகமுடியாது, ஃபார்வர்டு கியர் போட்டு எதிர்காலத்துக்கும் போகமுடியாது.
காலத்தின் ஒரே நேர்கோட்டுப் பயணத்துக்கு மூன்று காரணங்களை உத்தேசமாகச் சொல்லலாம். முதலில், மனரீதியான காரணம் (Psychological Arrow of Time). “ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!” எனக் கடந்தகாலத்தை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
என்னவென்றே தெரியாத எதிர்காலத்தை எப்படி நினை வில் வைத்துக் கொள்ள முடியும்? இரண்டாவது, வெப்ப வியலின் இரண்டாவது விதியில் வரும் ‘என்ட்ரோபி' (Entropy). “நட்புங்கறது கண்ணாடி மாதிரி, ஒரு தரம் உடைந்தால் மறுபடியும் ஒட்டாது” எனும் சினிமா பாணியிலான வசனம்தான் இந்த ‘என்ட்ரோபி’.
பிரபஞ்ச பொருள்கள் அதன் ஒழுங்கிலிருந்து, காலத்தின் ஓட்டத்தில் ஒழுங்கற்றதாக மாறுவது. திரும்பவும் அவை முந்தைய நிலைக்குத் திரும்புவதில்லை. மூன்றாவது, பிரபஞ்சம் விரிந்துகொண்டே இருப்பதால் (Cosmological Arrow of Time), அது காலத்தின் ஓட்டத்துடன் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆக, காலம் முன்னோக்கித்தான் செல்லும் என்பதை நம்பவேண்டும்.
ஒரேநேரத்தில் முக்காலம்!? - இயற்பியலின், ‘பிளாக் பிரபஞ்ச கோட்பாடு’ (Block Universe Theory) இதை வேறு விதமாக சொல்கிறது. “காலம் எனும் மாயநதி ஓடவில்லை. அது உறைந்து போய் இருக்கிறது (உருவகம்). இங்கு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் ஒரே கட்டமைப்பில் நிலைத்திருக்கின்றன! காலம் உண்மையாகவே நகரவில்லை, நீ தான் அதை நோக்கி நகர்கிறாய்!” என்கிறது.
தலைசுற்றுகிறதா? ஐன்ஸ்டைனின் ‘சார்பியல் கோட்பாட்டு’க்கு முன்புவரை, இயற்பியலில் ‘காலம்’ எல்லாருக்கும் ஒரே மாதிரியாக, மாறாத ஒன்றாகவே கருதப்பட்டது. ஆனால் சார்பியலில், ஐன்ஸ்டைன் காலத்தை வெளியுடன் (Space) இணைத்து, பிரபஞ்சத்தை நான்காம் பரிமாணக் கால–வெளியாக விளக்கினார்.
அந்த நான்காம் பரிமாணக் கால–வெளி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தத்துவ விளக்கமாக ‘பிளாக் பிரபஞ்ச கோட்பாடு’ உருவானது. இதன்படி கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல், ஒரே கட்டமைப்பில் நிலைத்திருக்கின்றன.
ஆக, காலம் முன்னோக்கி நகரவில்லை, நாம் ‘நிகழ்காலம்’ என்று உணர்வது, ‘அந்த கால–வெளியில் தற்போது எந்த இடத்தில் நின்றுகொண்டு எந்தத் தருணத்தை உணர்கிறோமோ’ அதைத்தான் என்கிறது இந்தக் கோட்பாடு. இந்த நான்காம் பரிமாணக் காலவெளி என்பது என்ன, ஈர்ப்புவிசை எப்படி உருவாகிறது என்பன போன்றவற்றை அடுத்துப் பார்க்கலாம்.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com
