

இன்று சுலபமாக, ஒரு தொடுதலில் உலகின் அடுத்த மூலையில் இருப்பவர்களுடன் நம்மால் பேசமுடிகிறது. முன்பின் தெரியாத முகவரிக்கு திறன்பேசியே நம்மைப் பத்திரமாக அழைத்துச் சென்று விடுகிறது. மருத்துவ, சுகாதாரத் துறை முன்னேற்றத்தால், நூறு வருடங்களுக்கு முன்பிருந்த இறப்பு விகிதம் இப்போது இல்லை.
பணப்பரிவர்த்தனை எளிதாக இருக்கிறது. இவ்வளவையும் தாண்டி இன்றைக்கு சூப்பர் கணினிகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என அறிவியல் எப்படி எப்படியோ வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி எது தெரியுமா அறிந்துகொள்வதற்கான ஆர்வம் (curiosity).
“ஏன் நட்சத்திரங்கள் நகர்கின்றன? ஏன் பொருள் கள் கீழே விழுகின்றன? நெருப்பு ஏன் மேல் நோக்கி எரிகிறது?” என்பது போன்ற அறிந்துகொள்வ தற்கான ஆர்வமான கேள்விகளே இயற்பிய லுக்கு வித்திட்டன. ஆரம்பத்தில் இந்த கேள்விகளுக்கு எல்லாம், கற்பனை கதைகள் மூலம் பதில்கள் சொல்லப் பட்டன.
ஏனென்றால் அன்றைய மனிதர்களிடம் இருந்த ஒரே கருவி ‘கதைசொல்லல்' மட்டுமே. அவர்கள், தொடர்ந்து இயற் கையை அவதானித்தபோது, அதில் ஒரு ஒழுங்கு முறை தெரிந்தது.
சூரியன் ஒவ்வொரு நாளும் உதித்தது, பருவ காலங்கள் சரியான காலத்தில் வந்தன, நிலவு ஒழுங்கு முறையுடன் தேய்ந்து வளர்ந் தது. இதனால் அவர்களுக்கு இயற்கையைக் கணிப்பதுடன், பதிவுசெய்வதும், அளவிடுவதும் எளிதாக இருந்தது. இயற்பியலின் பயணம் இப்படித்தான் தொடங்கியது.
விடிவு பிறந்தது: பண்டைய கிரேக்க, மெசபடோமிய, எகிப்து நாகரிகங் களில், வானவியல், அளவீட்டுக் கணிதம், கட்டிடக்கலை, நகர அமைப்பு போன்ற துறைகள் வளர்ந்தன. அவற்றை இயற்பியல் என்று வரையறுத்துவிட முடியாது. ஏனென்றால், அவை இயற்கை எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கவில்லை. மேலும் இயற்கையைச் சுற்றிக் கடவுள்கள், மதங்களின் பெயரால் நிறைய புனைக்கதைகள் சுற்றின.
இந்நிலையை அரிஸ்டோடில், பிதாகோராஸ், அர்கிமிடிஸ் போன்ற கிரேக்கத் தத்துவஞானிகள் மாற்றி னார்கள். இவர்கள், புனைக்கதைகளை நிராகரித்து, பகுத்தறிவையும் தர்க்கத்தையும் பயன்படுத்தி இயற்கையை விளக்க முயன்றனர். ஆனால், பரிசோதனையற்ற விளக்கங்களில் நிறைய தவறுகள் இருந்தன.
இருப்பினும் இயக்கம், வானவியல், பருப்பொருள்கள் பற்றிய கிரேக்க சிந்தனையாளர்களின் தத்துவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மத நூல்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் முக்கியமான பாடமாகவும் அவை பரிந்துரைக்கப்பட்டன. இந்தப் போக்கு 1,500 ஆண்டுகளுக்கு இயற்பியலை, எந்த முன்னேற்றமும் இன்றி இருளில் வைத்திருந்தது எனலாம்.
இதற்கெல்லாம் விடிவுகாலமாக, பொ.ஆ. (கி.பி.) 1600இல் பரிசோதனையுடன் கூடிய அறிவியல் முயற்சிகள் தொடங்கின. பரிசோதனைகளின் மூலம், அரிஸ்டோடிலின் தத்துவங்களை கலிலியோ பொய்யாக்கினார். கோள்கள் கணித சமன்பாடுகளின் அடிப்படையில் சுற்றுகின்றன என்பதை கெப்ளர் நிரூபித்தார்.
இயற்பியலைப் பகுத்தறி வுக்கும் கணிதத்துக்கும் தெகார்தே நகர்த்தினார். இதன் அடித்தளத்தில்தான், மாபெரும் இயற்பியல் திருப்பு முனையை 1687ஆம் ஆண்டில் நியூட்டன் நிகழ்த்தினார்.
இயக்க வியல், புவிஈர்ப்புவிசை, விண்வெளி இயக்கம் ஆகிய அனைத்தையும் ஒரே கணித கட்டமைப்புக்குள் கொண்டு வந்தார். மனித வரலாற்றில் முதன்முறையாக, கீழே விழும் ஆப்பிளில் இருந்து வானில் சுற்றும் கோள்கள்வரை ஒரே விதியின்கீழ் வந்தன. அதுதான் மரபு இயற்பியல் பிறந்த தருணம்.
புதிய பாய்ச்சல்: அதன் பின் இயற்பியலில் நடந்தது அனைத்துமே பெரும் சாதனைகள். கண்ணுக்குப் புலப்படாத மின்காந்தப் புலம், இயற்பியலுக்குள் வந்தது. இதன் மூலம் ஃபாரடேவும், மாக்ஸ்வெல்லும் மனித குலத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினர். இவ்வாறு தொடர்ந்த இயற்பியலை, இன்று சார்பியல், குவாண்டம் இயங்கியல் ஆகிய இருவேறு கோட்பாடுகள் வேறு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருக்கின்றன.
மனிதனின் அறிந்துகொள்வதற்கான ஆர்வம் அளவீடாகவும், அளவீடு விதிகளாகவும் மாறியதே இயற்பியலின் வளர்ச்சி. கலிலியோவின் சறுக்கும் பந்து முதல் நியூட்டனின் ஆப்பிள்வரை, மேக்ஸ்வெல்லின் மின்காந்தப் புலங்கள் முதல் ஐன்ஸ்டைனின் வளைந்த கால-வெளி வரை, ஒவ்வொரு கண்டுபிடிப்பும், இந்த ‘பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது?' என்கிற கேள்வியை இன்னும் ஆழமாக்கியது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மர்மமும் அவிழும் அந்த முடிவற்ற நீண்ட பாதையில் இயற்பியலுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்.
- sujaaphoenix@gmail.com