

நிச்சயம் விவசாயத்தை எதற்காகவும் கைகழுவி விட முடியாது. "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடியுள்ள பாரதியின் வரிகளை உயிர்ப்பிக்க பயிர்த்தொழில் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் பாரெங்கும் கிட்டத்தட்ட 600 மில்லியன் விவசாயிகள் தன்முனைப்புடன் வேளாண்மையை மேற்கொள்வதுடன் உலகளவில் நான்கில் ஒருவர் வேலைவாய்ப்புக்கு விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர்.
வேளாண் சாகுபடி பரப்பளவை எடுத்துக்கொண்டால் 4.8 பில்லியன் ஹெக்டர் அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதாவது பூமியின் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி விவசாயத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. வருமானத்தை எடுத்துக்கொண்டால் பல நாடுகளிலும் மற்றதுறைகளைக் காட்டிலும் வேளாண்மை மூலம் கிடைக்கும் வருமானம் மிகக்குறைந்த அளவே ஆகும்.
அதிலும் சிறு குறு விவசாயிகளின் வருமானம் என்பது நாள் ஒன்றுக்கு ரூ.200 என்கிற அளவில்தான் இருக்கிறது. வளர்ந்த நாடுகளான ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெரும்பாலும் விவசாயிகளின் வருமானத்தை நிலையாக கட்டமைப்பதில் அரசின் மானியம் மற்றும் வலுவான சந்தை கட்டமைப்பும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
அதுவே நம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் சராசரியாக ஒரு விவசாயியின் மாத வருமானம் ரூ. 13,600 அளவிலும், தமிழ்நாட்டில் ரூ.11,924 அளவிலும் இருக்கிறது. இவை சொற்ப வருமானமாக இருந்தாலும், இன்னமும் இந்தியாவில் கிட்டத்தட்ட 45 சதவீத மக்கள் வேளாண்மை மூலமே வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.