

“அ… அ… அம்மா…” - அந்த ஒரு வார்த்தையைச் சொல்லுவதற்கே எட்டு வயது ஆதவனுக்கு சில விநாடிகள் தேவைப்பட்டன. அவன் தாய் லட்சுமிக்கு அந்த சில விநாடிகள், ஒரு ஆயுளைப் போல இருந்தது.
மற்ற குழந்தைகள் சரளமாகப் பேசியபோது, ஆதவன் சில வார்த்தைகளைக் கோவையாகப் பேசவே சிரமப்பட்டான். “ஏன் இப்படித் திக்கித் திக்கிப் பேசுறே?” என்று பள்ளியில் சில குழந்தைகள் கேலி செய்தனர்.
ஆதவனை ஒரு பேச்சு, மொழிப் பயிற்சியாளரிடம் அவனது பெற்றோர் அழைத்துச் சென் றனர். ‘பேச்சு, மொழிக் குறைபாடு’ (Speech and Language Disability) என்கிற பதத்தை அப்போது தான் முதலில் கேள்விப்பட்டார்கள்.
“உங்கள் மகனுக்குத் தடுமாறிப் பேசும் குறைபாடு இருக் கிறது. ஆனால், கவலைப்பட வேண்டாம். சரியான பயிற்சியும் ஆதரவும் இருந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்,” என்றார் பயிற்சியாளர்.
மொழிக் குறைபாடு
பேச்சு, மொழிக் குறைபாடு என்பது ஒருவரின் பேசும் திறன், மொழியைப் புரிந்துகொள்ளும் திறன் அல்லது எண்ணங்களை வெளிப்படுத்தும் திறனைப் பாதிக்கும் நிலை.
சிலர் தெளிவாகப் பேச முடியாமல் இருப்பார்கள். சிலர் வார்த்தை களை உச்சரிக்கச் சிரமப்படுவார்கள். சிலர் சொல்வதை புரிந்துகொள்ள முடியாமல் இருப்பார்கள்.
பல வடிவங்களில் சவால்கள்
ஆதவன் போன்ற சில குழந்தைகள் தடுமாறிப் பேசுதல் பிரச்சினையை அனுபவிக் கின்றனர். பேசும்போது வார்த்தைகள் சிக்கிக்கொள்வதுபோல இருக்கும். சில குழந்தை களுக்கு உச்சரிப்பு குறைபாடு இருக்கும்.
“ர” என்பதை “ல” என்பார்கள். சிலருக்குக் குரல் குறைபாடு இருக்கும். அவர்களின் குரல் மிகவும் மெலிதாகவோ அல்லது கரகரப்பாகவோ இருக்கும். வேறு சில குழந்தைகளுக்கு, மொழி வளர்ச்சி தாமதம் எனப்படும் வயதுக்கேற்ற மொழித்திறன் இருக்காது.
பக்கவாதம் ஏற்பட்ட பெரியவர்களுக்கு முன்பு தெரிந்த மொழியையே பேச முடியாத ‘அஃபேசியா’ நிலை ஏற்படலாம். மூளை, பேச்சு உறுப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு சரியாக இல்லாததால், சொல்ல நினைப்பதைப் பேச முடியாத நிலை ‘அப்ராக்சியா’ (Apraxia of Speech).
பேச்சுப் பயிற்சி
மருத்துவமனைபோல் இருக்கும் என நினைத்துதான் ஆதவன் முதல் முறையாகப் பேச்சுப் பயிற்சி அறைக்குள் சென்றான். அங்கே இருந்ததோ பல வண்ண அட்டைகள், விளையாட்டுப் பொருள்கள், பாடல்கள். “பேசுவது பயமாக இருக்கக் கூடாது; அது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று பேச்சு பயிற்சியாளர் கூறினார்.
ஆதவன் ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாக உச்சரிக்கக் கற்றான். கண்ணாடி முன் நின்று ஒலிகளைப் பயிற்சி செய்தான். விளையாட்டுகள், கதைகள், பாடல்கள் மூலம் அவன் பேச்சு மெதுவாகத் தெளிவடைந்தது.
பேச்சுப் பயிற்சி (Speech Therapy) என்பது ஒருவரின் பேச்சு, மொழித் திறனை மேம்படுத்தும் திட்டமிட்ட செயல்முறை. முதலில், பேச்சுப் பயிற்சியாளர் குழந்தையின் பேசும் திறன், உச்சரிப்பு, குரல், மொழிப் புரிதல், தொடர்புத்திறனை மதிப்பீடு செய்கிறார்.
அதன் பின்னர் அவர்களின் தேவைக்கேற்ப தனிப்பட்ட பயிற்சி திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் ஒலிகளைச் சரியாக
உச்சரிக்கும் பயிற்சிகள், சுவாசக் கட்டுப்பாடு, வாய்வழி இயக்கப் பயிற்சிகள், சொற்கள், வாக்கியங்களைப் பயன்படுத்தும் செயல் பாடுகள் ஆகியவை இடம்பெறும்.
குழந்தை களுக்கு விளையாட்டுகள், பாடல்கள், கதைகள், படங்களின் மூலம் சுவாரசியமான முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து செய்யப்படும் பயிற்சி, பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மூலம் அவர்களின் தொடர்புத்திறன் மெதுவாக மேம்பட்டு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.
தொழில்நுட்பம் தரும் குரல்
ஆதவன் வீட்டில் இருக்கும் நேரம் அவனது அம்மாவின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் மூலம் பேச்சுப் பயிற்சி எடுத்துக்கொண்டான். ஏஐ தொழில்நுட்பம் இன்று பேச்சு, மொழிக் குறைபாடுகளைச் சரிசெய்யும் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிவருகிறது.
ஏஐ அடிப்படையிலான ‘Speech Therapy Apps’, ‘Text-to-Speech’, ‘Speech Recognition’ தொழில்நுட்பங்கள் மூலம் குழந்தைகள், பெரியவர்கள் தங்களின் பேச்சுத் திறனை மேம்படுத்தப் பயிற்சி பெறுகின்றனர். சில ஏஐ செயலிகள் தவறான உச்சரிப்புகளைக் கண்டறிந்து சரியான ஒலியை மீண்டும் மீண்டும் பயிற்சி அளிக்கின்றன.
பேச முடியாதவர்களுக்குக் குரலாகச் செயல்படும் தொடர்புக்கருவிகளும் உருவாக்கப் பட்டுள்ளன. மேலும், குழந்தையின் பேச்சு முன்னேற்றத்தைக் கண்காணித்துத் தனிப்பட்ட பயிற்சித் திட்டங்களையும் ஏஐ வழங்குகிறது. இதன் மூலம் சிகிச்சை எளிமையாகவும் சுவாரசியமாகவும் மாறி, பேச்சு, மொழிக் குறைபாடு உள்ளவர்களுக்கு புதிய நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
புதிய உலகம்
பேச்சுப் பயிற்சி ஆரம்பித்த சில மாதங்க ளுக்குப் பிறகு, ஆதவனிடம் சிறிய மாற்றங்கள் தெரிந்தன. அவன் திணறாமல் மெதுவாகப் பேசத் தொடங்கினான்.
ஒருநாள் வகுப்பில் ஆசிரியர் கேட்டார்: “யாருக்காவது சூரியக் குடும்பம் பற்றித் தெரியுமா?”. முன்பு எப்போதும் கையை உயர்த்தாத ஆதவன், அந்த நாள் மெதுவாகக் கையைத் தூக்கினான்.
அவன் பேசும்போது சில வார்த் தைகள் இன்னும் தடுமாறின. ஆனாலும், அன்று யாரும் சிரிக்கவில்லை. ஏனெனில் ஆசிரியர் ஏற்கெனவே மாணவர்களிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார்: “ஒருவரின் பேச்சை வைத்து அவர்களை மதிப்பிடக் கூடாது.”
அந்த வாக்கியம் ஒரு வகுப்பறையை மாற்றியது. ஒரு வார்த்தையைச் சொல்ல அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படலாம். இருப்பினும் அவர்களின் கனவுகள், திறமைகள், உணர்வுகள் மற்றவர்களைப் போலவே ஆழமானவை.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com