மாசில்லா காற்றினைத் தேடி…

மாசில்லா காற்றினைத் தேடி…
Updated on
2 min read

எங்கள் பள்ளியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்கிருந்த ஒரு அறிவியல் மாதிரி என் மனதை தொட்டது.

அதில் சிறு சிறு பொம்மைகளாக மனிதர்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தனர். அவற்றில் ஒவ்வொரு பொம்மையின் பின்புறமும் ஒரு ஆக்சிஜன் உருளை இருந்தது. அந்த மாதிரியை உருவாக்கிய ஆசிரியர் மற்றும் மாணவனிடம் அதுபற்றி வினவினேன் அதற்கு அவர்கள் அளித்த பதில் இன்னும் ஒரு 50 அல்லது 60 ஆண்டுகளில் நமது பூமியில் இருக்கின்ற காற்று மாசடைந்து சுவாசிக்க உகந்ததாக இல்லாமல் போகலாம். எனவே, நாம் அனைவரும் ஆக்சிஜனை சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் உருளைகளை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். அதைத்தான் காட்சிப்படுத்தி இருக்கிறோம் என்று விளக்கம் அளித்தார்கள்.

தற்போதைய ஆய்வுகளின் முடிவுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் இவ்வாறு நடந்து விடுமோ என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது.

காற்றின் தரம்

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐ க்யூ ஏர் என்ற நிறுவனம் 2019-2020 -ம் ஆண்டில் உலக அளவில் காற்றின் தரம் பற்றி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் 30 நகரங்கள் மிகவும் மாசடைந்துள்ளன. இதில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக சீனாவின் ஸின்ஜியாங் நகரம் உள்ளது. இதற்கு அடுத்த 9 இடங்களை இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காஜியாபாத், புலந்ஷர், பிஸ்ரக், ஜலால்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாரி மற்றும் தலைநகர் டெல்லி ஆகியவை இடம் பிடித்துள்ளன.

டெல்லி காற்றின் தரம் 2019- 2020-ம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்தாலும், சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் அது முதலிடத்தில் உள்ளது. போக்குவரத்து, மின் உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானங்கள், கழிவுகள் எரிப்பு, விவசாயக் கழிவுகள் எரிப்பு உட்பட பல காரணங்களால் இந்தியாவில் காற்று மாசு அதிகரிக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்றும் ஒரு ஆய்வின் தரவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டினால் 40 சதவீதம் இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறையும் ஆயுள்காலம்

அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகம் காற்று தர வாழ்க்கை குறியீடு (ஏ கியூ எல் ஐ)என்ற ஆய்வை இந்தியாவில் நடத்தியது. இதுகுறித்த ஆய்வு அறிக்கையில் இருந்து ஒரு சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகிலேயே மிகவும் காற்று மாசு அடைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு அதிகப்படியான காற்று மாசு நிலவுகிறது.

இதனால் 40 சதவீதம் இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறையும் அபாயம் உள்ளது. மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. வட இந்தியாவில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகளை இந்த காற்று மாசுபாட்டால் இழக்கும் அபாயம் உள்ளது. 2019-ம்ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட தேசிய தூய்மை காற்று திட்டம் அபாயகரமான மாசுவை கட்டுப்படுத்துவதில் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் நாட்டு மக்களின் மொத்த ஆயுள் 1.7 ஆண்டுகளாக உயரும். குறிப்பாக டெல்லி மக்களின் ஆயுள் 3.1 ஆண்டுகள் அதிகரிக்கும்.

“மாசில்லாக் காற்றினை, காசில்லாமல்

பெற்றிட முயற்சிக்கலாமா?”

கட்டுரையாளர்

தலைமை ஆசிரியர்

பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி

நாகமலை, மதுரை மாவட்டம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in