

சென்னை: செல்போன் விளையாட்டில் மூழ்கியுள்ள குழந்தைகளை அந்த செல்போனுக்கு "குட்பை" சொல்ல வைக்கவோ அல்லது அதன் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கவோ செய்ய முடியுமா என்பது பெரும் சவாலாக இருக்கும் நிலையில், அது சாத்தியம்தான் என்கிறார் குழந்தை இலக்கியப் படைப்பாளி தேவி நாச்சியப்பன்.
குழந்தைகள் சாலையில், பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடிய காலம் போய், செல்போனில் விளையாடுவதிலேயே தற்போது மும்முரமாக உள்ளனர். அதுவும் கரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டதால், குழந்தைகள்செல்போனில் முழுவதுமாக மூழ்கிப்போய்விட்டனர்.
இன்னும் சொல்லப் போனால் செல்போனுக்கு அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு செல்போன் தாக்கம் ரொம்பவே இருந்தது. செல்போன் மூலம் ஆன்-லைனில் பாடம் படிக்கவும் செய்தனர். இருந்தாலும் படிப்பைவிட விளையாட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்தப் பழக்கத்தில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டியது அவசர அவசியமாகும்.
அதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியையும், குழந்தை எழுத்தாளரும், குழந்தை இலக்கியத் துறைக்கு ஒட்டுமொத்த பங்களிப்புக்காக பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்றவருமான தேவி நாச்சியப்பன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம். என்பது போல, ' மாணவப்பருவத்தில் கொஞ்சம் பள்ளியைக் காணோம்'னு சொல்லலாம். உங்களுக்கே தெரியும் பெருந்தொற்றுனு சொல்லக் கூடிய கரோனாவால பள்ளி,பாடம், படிப்பு, தேர்வு என்ற நடைமுறையில பெரிய மாற்றம் ஏற்பட்டது.
முதல் ஒரு மாதம் ஐ...லீவ்... ஜாலினு இருந்திருப்பீங்க. அப்புறம்உங்களுக்கே போரடிக்க ஆரம்பித்துவிட்டது. எப்படா பள்ளி திறக்கும்? நண்பர்களப் பார்க்கலாம்னு ஏங்க ஆரம்பித்திருப்பீர்கள். உண்மைதானே?!
சரி, பெருந்தொற்றுக் காலத்தில் என்ன செய்தீங்க? கொஞ்சம் யோசித்துப் பாருங்க. சிலபேர் ஆன் லைன்லபள்ளிப் பாடங்களைப் படிச்சீங்க. பலபேர் அலைபேசியில விளையாடுனீங்க. சிலரை பாட்டு, நடனம், இந்தி, பிரன்ஞ்சு, யூசிமஸ் போன்ற ஆன் லைன் வகுப்புகளில் பெற்றோர் சேர்த்தாங்க. ஆக நிறையப்பேர் அலைபேசியோடதான் பொழுதைக் கழித்தீர்கள்.
நிச்சயமா இது உங்க தவறல்ல.காலம் செய்த கோலம். "வீட்டைவிட்டு எங்கும் செல்லக் கூடாது. சிறுவர்களுக்கு உடனே தொற்றிக் கொள்ளும்." என்று சொல்லி உங்களை வீட்டிலேயே இருக்க வைத்தால், பாவம்! நீங்கள் என்னதான் செய்வீர்கள்?
தொலைக் காட்சியிலே நிலையத்தில் உள்ளவர்கள் விரும்புவதைப் போடுவார்கள். நாம் விரும்பும் நிகழ்ச்சியைப் போடமாட்டார்கள் அல்லவா?அதனால் தானே நீங்கள் அலைபேசியையும், மடிக் கணினியையும் கையில்எடுத்தீர்கள். எப்படியோ, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன.
இப்போது பள்ளிகள் திறந்துவிட்டன. பழையநிலை வந்துவிட்டது. ஆனாலும் வீட்டிலிருக்கும் போது அலைபேசியைப் பிரிந்து இருக்க முடிவில்லை என்கிறீர்கள். இருந்தாலும் நீங்கள் மனது வைத்தால் முடியாததெல்லாம் முடியும்; பழகிக் கொள்ளலாம்.
ஒரேயடியாக அலைபேசியை ஒதுக்க வேண்டுமென்பதில்லை. பள்ளி செல்லும் உங்களுக்கு நேரம் மிக முக்கியம். நேரத்தைத் திட்டமிடுங்கள். "ஓடியாட ஒரு நேரம்.
உணவை உண்ண ஒரு நேரம்.
பாடம் படிக்க ஒரு நேரம்
படுத்துத் தூங்க ஒரு நேரம்
பெற்றோருக்கு ஒரு நேரம்
பிறருக்காக ஒரு நேரம்
இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்.
என்றும் இன்பம் பெற்றிடுவேன்." இந்தப் பாடல் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதியது.
இதுபோல நீங்களும் வீட்டிலிருக் கும் நேரத்திற்கு, உங்கள் வேலைகளுக்கு ஏற்ப ஒரு கால அட்டவணை (டைம் டேபிள்) தயார் செய்து கொள்ளுங்கள். அதில் மறக்காமல் 20 முதல் 10 நிமிடங்களை அலைபேசியில் நல்ல தகவல்களைப் பார்க்கும் நேரமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு 10… 5 என அலைபேசி நேரத்தைக் குறைத்து மறந்தேவிடலாம்.
அலைபேசியை நாம் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்க்கிறோம். அதில் பல விதமான நிறங்கள் மாறி மாறி வரும். கதிர் வீச்சும் இருக்கும். இதனால் நம் கண்கள் மட்டுமல்ல, பார்வை நரம்பு, மூளை எல்லாம் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
தொடர்ந்து அலைபேசியும் கையுமாக அலைந்த ஒரு சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு வார இதழில் படித்தேன். ஐயோடா... இவ்வளவு பாதிப்பா? வேண்டாமடா சாமி . 'அலைபேசியே அருகில் வராதே'னு சொல்லத் தோன்றுகிறது.
நல்ல பல தகவல்களை அலைபேசி மூலமாத் தெரிந்து கொண்டோம். இனிஅதுக்கு பதிலா எதன் மூலம் தெரிந்துகொள்வது என்று கவலைப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம்.
பள்ளியிலும், உங்கள் ஊரிலும், வீதியிலும் நூலகம் இருக்குமே. அங்க போங்க. நல்ல பல நூல்களை எடுத்துப் படியுங்கள். நல்லவற்றைத் தெரிந்துகொள்ளலாம். கண்ணுக்கும் கேடில்லை.அலைபேசியா? ஐயோ வேண்டாம்! அருமை நூல்களா? கொடுங்க படிப்போம் என்று குழந்தைகள் கேட்கும் நிலையை உருவாக்குவது சாத்தியம் என்கிறார் தேவி நாச்சியப்பன்.