Last Updated : 02 Nov, 2023 04:00 AM

 

Published : 02 Nov 2023 04:00 AM
Last Updated : 02 Nov 2023 04:00 AM

மழைக்கால சீசன் தொடக்கம்: பழவேற்காடு ஏரியில் குவியும் பறவைகள்

பழவேற்காடு ஏரியில் பூ நாரை உள்ளிட்ட வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றன.

பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றன. அதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பழவேற்காடு ஏரிக்கு வந்து விதவிதமான பறவைகளை ரசித்து மகிழ்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு. மெட்ராஸ் உருவாவதற்கு முன்பே உருவான வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஏரி, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில், 481 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

ஒடிசாவில் உள்ள சிலிகா ஏரியை அடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரியில், ஆந்திராவில் உற்பத்தியாகும் ஸ்வரணமுகி, காலாங்கி, ஆரணி ஆகிய ஆறுகள் கலக்கின்றன. அதுமட்டுமல்லாமல், வங்காள விரிகுடா கடலின் முகத்துவாரமாக விளங்கும் இந்த ஏரி, பங்கிங்காம் கால்வாய் நீரும், கடல் நீரும் கலக்கும் இடமாகவும் திகழ்கிறது.

பழவேற்காடு ஏரி மற்றும் கடற் பகுதியில் 160 வகையான மீன்களும், 12 வகையான இறால்களும் கிடைக்கின்றன. மீன் வளம் மிகுந்த பழவேற்காடு ஏரியில், இறால் உள்ளிட்ட மீன் வகைகள், நண்டுகள், பச்சை ஆழி, மட்டி உள்ளிட்ட நீர் உயிரினங்கள் அதிகளவில் இருப்பதால், விதவிதமான பறவைகள் வந்து குவிகின்றன. அதனால் பறவைகள் சரணாலயமாகவும் இந்த ஏரி விளங்குகிறது.

ஆண்டுதோறும் செப்டம்பர் முதல், ஏப்ரல் வரை, ஆலா, பூ நாரைகள், கூழைக்கடா, செங்கிளுவை, சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, நீர்க்காகம், நீலம், வெள்ளை நிற மீன் கொத்தி என, 180 வகையான பறவைகள் குவிவது வழக்கம். இந்நிலையில், தற்போது மழைக்கால சீசன் என்பதால் இரைக் காக உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவிந் துள்ளன.

பழவேற்காடு, அண்ணாமலைச் சேரி, அவுரிவாக்கம், கனவான்துறை, பாக்கம், குளத்துமேடு ஆகிய மீனவகிராமங்களை ஒட்டியுள்ள ஏரிப்பகுதிகளில் பறவைகள் அதிகமாக காணப் படுகின்றன. ஏரிக்கரைகளை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கருவேல மரங்கள், பனை மரங்கள், அத்தி, ஆலமரம் உள்ளிட்ட மரங்களில் கூடு கட்டியுள்ளன.

சைபீரியா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பிளமிங்கோ என்கிற பெரும் பூ நாரை, சிறு பூ நாரை, யுரேசிய அரிவாள் மூக்கு உள்ளான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கல் நாரை, வர்ண நாரை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, கரண்டிவாயன், கூழைகடா, ஊசிவால் வாத்து, நீர் காகம் உள்ளிட்ட நீர்ப்பறவைகளும், வயல் வெளி பறவைகளான நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், உள்ளான், வெள்ளை கொக்கு உள்ளிட்டவையும் ஆயிரக்கணக்கில் பழவேற்காடு ஏரியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே குவிந்து வருகின்றன.

இந்த எண்ணிக்கை வரும் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிகரிக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இப்பறவைகள் இங்கு வசிக்கும். பின்னர் தாய்நாடுகளுக்கு பறந்து செல்லும்.

பறவைகளின் வரத்தால் பழவேற் காடு ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆந்திரா உள்ளிட்ட பிற மாநில சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். பறவைகள் குறிப்பாக பூ நாரை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி உள்ளிட்ட பறவைகளை ரசித்து மகிழ்வதுடன், புகைப்படம் எடுத்தும் குதூகலிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x