Last Updated : 27 Sep, 2023 04:30 AM

 

Published : 27 Sep 2023 04:30 AM
Last Updated : 27 Sep 2023 04:30 AM

சிரிப்பு வருது... சிரிப்பு வருது... சிரிக்கச் சிரிக்க...

“சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது” “சிரிப்பு…, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்பதே நமது பொறுப்பு” என்ற புகழ் பெற்ற பழைய திரைப்படப் பாடல்கள் சிரிப்பைப் பற்றிய எனது சிந்தனைக்கு வித்திட்டன.

சிரிப்பது என்பது நல்லது தான். ஆனால், எப்போது சிரிக்கிறோம்? எதற்காக சிரிக்கிறோம்? எப்படி சிரிக்கிறோம்? என்ற வினாக்களின் விடைகளைப் பொறுத்தே அந்த சிரிப்பு, நல்ல சிரிப்பா அல்லது நமட்டுச் சிரிப்பா என்பதை அறிய முடியும்.

அதிகாரச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, ஆனந்தச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, கேலிச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டிச் சிரிப்பு, வெகுளிச் சிரிப்பு என பல வகை சிரிப்புகள், நம் மனதில் தோன்றும் எண்ணங்களால் உருவாகி, நம் உடல் மொழி மூலமாக வெளிப்படுகிறது.

சிரிக்கும் போது டோபமைன், செரட்டோனின் போன்ற சில மகிழ்ச் சிக்குரிய ஹார்மோன்கள் நமது மூளையில், சுரப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஹார்மோங்கள் மூலம் மென்மையான உணர்வு, சிறந்த நினைவாற்றல், ஆழ்ந்த உறக்கம், நல்ல செரிமானம் ஆகியவை அதிகரிப்பதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சிரிக்கும் போது கிட்டத்தட்ட நமது உடலில் உள்ள முன்னூறு தசைகள் அசைவதாகவும், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி ஏற்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. பல்வேறு வகையில் சிறப்பானதாக உணரப்படும் இத்தகைய சிரிப்பு பற்றி சிந்திக்க வேண்டியதோடு மட்டுமல்லாமல், அவ்வாறு வெளிப்படும் சிரிப்பை சீராக்க வேண்டியதும் இன்றைய காலச் சூழலில் உடனடி தேவையாக உள்ளது.

குழந்தைகளின் சிரிப்பு, அவர்களின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். எண்ணங்கள் நல்லவைகளாக இருக்கும் போது,வெளிப்படும் சிரிப்பு, மிக மென்மையாய், மயிலிறகால் வருடுவது போன்ற உணர்வை பிறரிடம் வெளிப்படுத்தும். இத்தகைய அன்புடனும், பரிவுடனும் கூடிய புன்னகையை வெளிப்படுத்த நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது நமது கடமையாகும்.

தன்னம்பிக்கை சிரிப்பு: வெற்றியால் வரும் சிரிப்பு தன்னம்பிக்கை சிரிப்பு. இயற்கையை ரசிக்கும்போது வரும் சிரிப்பு மன அமைதிக்குரிய சிரிப்பு. நம்மால் உதவி பெற்றவர் முகத்தில் தெரியும் திருப்தியைக் கண்டு வருகின்ற சிரிப்பு மன நிறைவிற்கான சிரிப்பு. திருவிழா, திருமண விழா போன்ற விழாக்களின் போது வருகிற சிரிப்பு மகிழ்ச்சிக்குரிய சிரிப்பு, இவை போன்ற சிரிப்புக்கள், ஒருவரின் மனதில் தோன்றும் நேர்மறை சிந்தனைகளின் வெளிப்பாடாகும்.

அடுத்தவர் தோல்வியையைக் கண்டு வெளிப்படும் சிரிப்பு ஏளனச் சிரிப்பு. வலிமையற்றவர் அடி வாங்குவதைப் பார்க்கும் போது வரும் சிரிப்பு நையாண்டி சிரிப்பு. தன் கீழ் பணிபுரிபவரை மட்டமாக நினைத்து சிரிப்பது அதிகாரச் சிரிப்பு. ஒருவரின் உருவத்தை பார்த்து சிரிப்பது கேலிச் சிரிப்பு. இவை போன்ற சிரிப்புகள் ஒருவரின் எதிர்மறை சிந்தனைகளின் வெளிப்பாடாகும்.

சிறு வயது முதல் நேர்மறை எண்ணங்களுக்காக மட்டுமே சிரிக்க வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமையாகும். பிறரின் துன்பத்தைக் காணும்போது, சிரிக்கக் கூடாது என்பதை கற்றுத் தர வேண்டும். உருவகேலி, இனப் பாகுபாடு, பிறரதுதோல்வி, அடுத்தவரின் பலவீனம்போன்றவற்றை கண்டு சிரிக்கக்கூடாது என்பதை கற்றுத் தர வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் இன்றியமையாத கடமையாகும். இனியேனும், குழந்தைகள் சிரிப்பதை உற்று நோக்கி, அவர்களின் மன எண்ணங்களை நெறிப்படுத்த வேண்டும் என உறுதி ஏற்போம்.

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிங்காடிவாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x