Published : 19 Jul 2023 04:25 AM
Last Updated : 19 Jul 2023 04:25 AM

4 நாட்களில் 480 பேரை சேர்த்து மேலபுலம் அரசு பள்ளி சாதனை: முன்னாள் மாணவர்கள் கொண்ட குழு அமைப்பது மும்முரம்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் குழு அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 4 நாட்களில் 480 முன்னாள் மாணவர்களை வாட்ஸ் அப் குரூப் மூலம் சேர்த்து மேலபுலம் அரசு பள்ளி சாதனை படைத்துள்ளது.

தமிழக அரசுக்கு கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார். "அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல. அவை பெருமையின் அடையாளம்" என்ற நிலையை எட்டுவோம் என்றுபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் முழங்குகிறார். பெரும்தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியில் (சிஎஸ்ஆர்)இருந்து அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பலரும் பள்ளிக்கு உதவி: பல கிராமங்களில் ஊர் மக்கள் அரசு பள்ளிக்கு சீர்வரிசையாக மேஜை, நாற்காலி வாங்கிக் கொடுத்துள்ளனர். சில முன்னாள் மாணவர்கள் தாம் படித்த பள்ளிக்கு வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளனர். வேறு சிலர் தங்கள்சொந்த நிலத்தையே கொடுத்திருக்கிறார்கள்.

பல முன்னாள் மாணவர்கள் கம்ப்யூட்டர், தளவாட சாமான்கள்உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அனைத்துஅரசு பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் கொண்ட குழு அமைக்க அரசு திட்டம் உதயமானது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 25 பேர் கொண்ட முன்னாள்மாணவர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதனால், அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்ற ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு, முன்னாள் மாணவர்கள் குழு அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பரமேஸ்வரி

பள்ளியின் வாட்ஸ் அப் குரூப்: இந்நிலையில், நான்கு நாட்களில் 480 முன்னாள் மாணவர்களை சேர்த்துராணிப்பேட்டை மாவட்டம், நெமிலிதாலுகா, மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தி.பரமேஸ்வரி கூறியதாவது:

1941-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் பள்ளி மிகப் பழமையான பள்ளியாகும். அரசு உத்தரவை தொடர்ந்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். ஒரு லிங்க் மூலம் கூகுள் படிவத்தை அனுப்பி பெயர், ஊர், செல்போன் எண், என்ன வேலை பார்க்கிறார், பள்ளியில் படித்த ஆண்டு உள்ளிட்ட விவரங்களை பதிவிடச் செய்தோம். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

ஆகஸ்டு 15-ல் முதல் கூட்டம்: அதையடுத்து பள்ளி சார்பில் வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கினோம். முதல் நாளில் உள்ளூரில் இருந்தவர்களும், பள்ளியின் முகநூலில் இருந்தவர்களும் என 56 பேர் இணைந்தனர். பின்னர் அந்த வாட்ஸ் அப் லிங்க்கைமுன்னாள் மாணவர்கள் சிலருக்குஅனுப்பி அவர்களுடன் படித்தவர்களுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டோம். அதன்பயனாக 4 நாட்களில் 480 பேர் சேர்ந்துவிட்டனர்.

இவ்வாறு சேர்ந்தவர்களை 50 நபர்களாகப் பிரித்து ஒவ்வொரு ஆசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறோம். உள்ளூரில் இருந்து வெளிநாடுகள் வரை வசிக்கும் முன்னாள் மாணவர்கள் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு பொறுப்புகளில் பிற மாநிலங்கள், மற்ற மாவட்டங்களில் உள்ளனர். இந்நிலையில், வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று முன்னாள் மாணவர்களின் முதல் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x