

விடுதலை நாளை சிறப்பாகக் கொண்டாடி முடித்த மகிழ்ச்சியில் அப்பள்ளியின் நாட்டுநலப் பணி குழுவின் பொறுப்பாளரும் கணித ஆசிரியருமான உமாநாத் மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
தம்பிகளா உங்களுடைய அணிவகுப்பு ரொம்ப சிறப்பா இருந்தது. வெரிகுட். எல்லா நிகழ்ச்சிகளும் நல்லா இருந்தது இல்லையா?
ஆமா சார், சிறப்பு விருந்தினர் ரொம்ப அருமையா பேசினார். இன்றைய ஐஏஎஸ் அன்றைக்கு ஐசிஸ் என்று சொல்லப்பட்டதும். இந்தியர்கள் யாரும் அதில் தேர்ச்சி அடையாத நிலையில் அக்குறை போக்கும் விதமாக சுபாஷ் சந்திர போஸ் முயன்று படித்து இந்திய அளவில் நான்காவது இடத்தைப் பெற்றார் என்பதும் எங்களுக்கு புதிய தகவல்.
உயரிய அரசு வேலை கிடைத்தும் வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்து பார்க்க வேண்டிய அந்த வேலை எனக்குத் தேவையில்லையென தூக்கி எறிந்துவிட்டு அவர் இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கி சுதந்திர போராட்டத்திற்கு அடித்தளமிட்டார்னு கேட்டபோது மெய்சிலிர்த்தது சார். பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளைப் பற்றி அவர் உணர்வுப்பூர்வமாகச் சொல்லிய விதம் ரொம்ப நல்லா இருந்தது.
பொறுப்புடன் நடந்து கொள்வதா?
எனக்கு கூட பெரிசானதும் ராணுவத்துல சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யணும்னு ஆசை வந்திடுச்சு சார் என்றான் ராஜா.
ராஜா சொல்றபடி ராணுவத்துல சேர்ந்தாதான் தேசப்பற்று இருக்குனு அர்த்தமா சார் என்று கேட்டான் அஸ்லாம்.
எல்லாரும் போய் ராணுவத்தில் சேரனும் என்ற அவசியமும் கிடையாது அஸ்லாம். மாணவர்களாகிய நீங்க ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் பொறுப்பா நடந்துக்கிட்டாலும் அது தேசப்பற்றுதான்.
புரியலையே சார்?
இப்ப ஒரு வகுப்பறையில் ஆளே இல்லாம ஃபேன் ஓடிக்கிட்டிருப்பதை பார்த்து நீ அதை ஆஃப் பண்ணாலோ, குழாயில் தண்ணீர் ஒழுகிட்டிருக்கும் போது குழாயை சரியாக மூடினாலோ அதுவும் தேசப்பற்றுதான்.
இது பொறுப்பான செயல், ஆனா இதுக்கும் தேசப்பற்றுக்கும் என்ன சார் சம்பந்தம்?
நம் நாட்டோட இயற்கை வளங்களான நிலக்கரி, நீர், அணுசக்தி ஆகியவற்றை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மின்சாரம் தயாரிக்கிறாங்க. அப்படி தயாரிக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடுது. அப்படியிருக்கும் போது நீங்க வீணாக்காம சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு சமம் இல்லையா?
அப்படினா நாங்க மின்சாரத்தை வீணாக்காம சேமிக்கும் போது அதை உற்பத்தி செய்ய செலவாகும் இயற்கை வளம், பணம், மனித உழைப்பு எல்லாமே மிச்சம். அதே மாதிரி ஒழுகும் குழாயை மூடினாலும் இயற்கை வளத்தை வீணாகாம தடுத்து நாம நாட்டுக்கு நல்லது பண்றோம்னா அது தேசப்பற்று என்பது சரிதான் சார்.
சரி இதே மாதிரி வேற என்னென்னல்லாம் மாணவர்களாகிய உங்களால் செய்ய முடியும் சொல்லுங்க பார்க்கலாம்...
சார், ஒவ்வொருத்தரும் தனித்தனியா பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தாம மிதிவண்டியோ, பொது போக்குவரத்தையோ பயன்படுத்தலாம்.
வகுப்பறையை, பள்ளியை, நம் தெருவை குப்பை இல்லாமல் சுத்தமா வச்சுக்கலாம், நெகிழி பைகளை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
இப்பல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சில பசங்க போதைப் பொருட்களை பயன்படுத்துறாங்க சார். அதை பயன்படுத்தாம தவிர்க்கிறதும் யாராவது பயன்படுத்தினா அதைப்பத்தி ஆசிரியர்களுக்குத் தெரிவிப்பதும் கூட முக்கியம்தானே சார்.
நிச்சயமா, இளைஞர்கள் நல்ல உடல், மன நலத்தோடு இருந்தால்தான் நாட்டுக்காக உழைக்க முடியும் தம்பிகளா.
வெளிநாடு போகலாமா?
சார், படிச்சு முடிச்சுட்டு நிறைய பேர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிடுறாங்க. நம் இளைஞர்களின் அறிவும், திறமையும் நம் நாட்டோட முன்னேற்றத்திற்கு பயன்பட்டாதான் நாடு முன்னேறும் இல்லையா சார்.
அதெப்படி சார்? இங்கதான் நாம படிச்சதுக்கேத்த நல்ல வேலை கிடைக்கறதில்ல. வெளிநாட்டுல அதிக சம்பளத்துல வேலை பார்த்து இங்க நம்ம குடும்பத்துக்கு அனுப்பினாலும் நம்ம நாட்டுக்கு நல்லதுதானே சார்?
பணம் வேணா கிடைக்கலாம், ஆனா நம் நாட்டோட வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி படிச்சிட்டு அந்த அறிவையும் திறமையையும் பணத்துக்காக வெளிநாட்டுக்கு விக்கிறதுதவறு இல்லையா? நம் தமிழக விஞ்ஞானிகள் அப்துல் கலாம்,
நம்பி நாராயணன், மயில்சாமி அண்ணாதுரை, சிவம், டில்லிபாபு, சிஎஸ்ஆர்ஐ தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி கலைச்செல்வி இவங்களுக்கெல்லாம் வெளிநாட்டுல வேலை கிடைக்காமலா இருந்திருக்கும்? என் அறிவை என் நாட்டுக்காக மட்டுமே பயன்படுத்துவேன்னு இவங்கல்லாம் நினைச்சதாலதானே இன்னைக்கு உலகமே பார்த்து வியக்கும்படி இந்தியா விண்வெளித்துறைல சாதிச்சிட்டிருக்கு?
உண்மைதான் சார், ஒத்துக்குறேன்.
அதே போல் இளைஞர்கள் அரசியலுக்கு வந்து நேர்மையான, ஊழலற்ற அரசை தர வேண்டியது அவர்களோட கடமை, அதுதான் உண்மையான தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதம்.
சார், உண்மையான நாட்டுப்பற்றுனா என்னன்னு புரிஞ்சுக்கிட்டோம். இதையெல்லாம் நாங்க வெறும் வாய் வார்த்தைகளோட நிறுத்தாம நிச்சயம் செயல்படுத்தி காட்டுவோம் சார் என்ற தன் மாணவர்களை பெருமையுடன் பார்த்தார் ஆசிரியர் உமாநாத்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com
முந்தைய அத்தியாயம்: பெரிதினும் பெரிது கேள் - 6: வாழ நினைத்தால் வாழலாம்!