பெரிதினும் பெரிது கேள் - 6: வாழ நினைத்தால் வாழலாம்!

பெரிதினும் பெரிது கேள் - 6: வாழ நினைத்தால் வாழலாம்!
Updated on
2 min read

ஆசிரியர் ஓய்வு அறையில் ரெகார்ட் நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்தார் ஆசிரியயை மங்களம். படம் மிக அழகாக வரையப்பட்டிருந்ததால் யாருடைய நோட்டு என்று முன்பக்கம் திருப்பி பெயரைப் பார்த்தார்.

பார்வதி என்ற பெயரைப் பார்த்ததும் காலையில் அவளும் அவள் தோழி உமாவும் பாடம் நடத்துவதை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்ததால் தன்னிடம் திட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது.

பார்வதி சிறு வயதிலேயே தாயை இழந்தவள். அதனால் எப்போதும் ஒரு மென்சோகம் அவள் முகத்தில் தென்படும். இன்றோ அவளது முகம் மிகவும் சோகமாக காணப்பட்டது.

தற்கொலை பைகள்!

மணி அடித்ததும் பார்வதியின் வகுப்பிற்கு ஆசிரியை சென்றார். ஸ்டூடன்ட்ஸ் காலையில் விலங்கு செல்களின் நுண்ணுறுப்புகள் பத்தி பாத்துக்கிட்டிருந்தோம் இல்லையா?

ஆமாம் மிஸ் லைசோசோமுக்கு இன்னொரு பெயர் ‘தற்கொலை பைகள்’, அதைப்பத்தி மதியம் சொல்றேன்னு சொன்னீங்க. கரெக்ட். ‘தற்கொலை பைகள்’ பத்தி நாளைக்கு சொல்றேன். இன்னைக்கு தற்கொலை பற்றி பேசலாமுன்னு நினைக்கிறேன்.

ஆமா மிஸ் இப்பல்லாம் ஸ்கூல், காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் தற்கொலை பண்ணிக்கிட்டதா அடிக்கடி நியூஸ்ல பார்க்கிறோம். தற்கொலை கோழைத்தனமான முடிவு மிஸ். அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது மிஸ், சாகத் துணியறதுக்கும் ஒரு தைரியம் வேணும். இல்லையா மிஸ், என்று பல்வேறு பதில்கள் மாணவிகளிடமிருந்து வந்தன.

ஆசிரியை, பார்வதியை பார்த்து “நீ ஏதாவது சொல்ல நினைக்கிறியா?” என்றதும் திடுக்கிட்டு பார்த்தாள். சில வினாடிகள் மௌனத்திற்கு பிறகு, தன்னை பிரச்சினையிலிருந்து காப்பாற்ற யாருமே இல்லைன்னு நினைக்கிறவங்கதான் அந்த முடிவுக்கு வருவாங்க என்றாள்.

நீங்க சொன்னது எல்லாமே ஒரு விதத்தில் சரிதான். உலகத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களோட வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் தற்கொலை எண்ணம் வந்திருக்கும். ஆனா அதிலிருந்து மீண்டுவந்து சாதனை படைத்தவர்கள் ஏராளம். எந்த பிரச்சினைக்கும் மரணம் தீர்வாகாது. அதேபோல் தீர்வு இல்லாத பிரச்சினைகளும் கிடையாது. சாதனையாளர்களில் அப்படி தற்கொலைக்கு முயன்றவர்கள் யார் மிஸ்? என்று ஆர்வத்துடன் கேட்டாள் உமா.

சோதனை வென்றவர்கள்

ஹாரிபாட்டர் எழுதிய ஜே கே ரௌலிங், புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், இரு ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் போன்றோர் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து தற்கொலை செய்து கொள்ள எண்ணியவர்களே. பிறகு அதிலிருந்து விடுபட்டு தங்கள் விடாமுயற்சியாலும், உழைப்பாலும் சாதனை படைத்தார்கள். இன்னும் ஒற்றை காலுடன் எவரெஸ்ட் ஏறிய ஒரு பெண்ணை பற்றி சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள்.

எப்படி சாதிச்சீங்க?

என்ன மிஸ் சொல்றீங்க ஒரு காலோட எவரெஸ்ட் ஏறினாங்களா? யாரு மிஸ் அது?

அருணிமா சின்ஹா என்ற 24 வயது இளம் பெண் உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். வாலிபால் விளையாட்டில் தேசிய அளவில் விளையாடி வென்ற ஒரு வீராங்கனை. ஒரு தேர்வுக்காக டெல்லிக்கு ரயிலில் செல்லும் போது அவர் அணிந்திருந்த செயினை கொள்ளையடிக்க வந்தவர்களிடம் போராடினார்.

போராட்டத்தின் முடிவில் கொள்ளையர்கள் அவரை ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டனர். எதிரே வந்த மற்றொரு ரயில் அவரது காலின் மீது ஏறியது. ஒரு கால் முற்றிலும் சிதைந்து, மற்றொரு கால் உடைந்து, முதுகு தண்டில் பலத்த அடியுடன் இரவு முழுவதும் யாரும் கவனிக்காமல் கிடந்தவரை காலையில் அவ்வழி வந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

ஆனால், மயக்க மருந்து இல்லை என்று மருத்துவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட அருணிமா மருத்துவர்களிடம் இரவு முழுவதும் வலியுடன்தான் கவனிப்பாரற்று கிடந்தேன், எனக்கு இன்னொரு கால் வேண்டும் மயக்க மருந்து இல்லாமலே அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்றார். வேறு வழியில்லாமல் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்தனர். சிதைந்த காலில் செயற்கை கால் பொருத்தப்பட்டது. உடைந்த காலில் உலோகத்தகடு பொருத்தப்பட்டது.

முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூன்று மாதத்திற்குள் மலையேறும் பயிற்சியில் ஈடுபடுகிறார். இரு வருடங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் இந்தியக் கொடியை நட்டு சாதனை படைக்கிறார். 2015-ல் ஜனாதிபதி விருது பெற்றார். எப்படி சாதிச்சீங்க என கேட்டபோது சின்ன வயசுலேயே அப்பாவை இழந்து அம்மா கஷ்டப்பட்டு வளர்த்தாங்க நிறைய போராட்டங்களை பார்த்திருக்கேன். பிரச்சினைகளை பார்த்து ஓடாமல் எவ்வளவு மோசமான சூழ்நிலைகள் இருந்தாலும் பிரச்சினைகளை தோற்கடித்து என்னால ஜெயிக்கமுடியும் என எனக்குள் சொல்லிக்கொள்வேன். அந்த தன்னம்பிக்கை தான் என் வெற்றிக்கு காரணம் என்றார்.

அன்பு மாணவிகளே உங்களுக்கு எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அருணிமா சின்ஹாவை நினச்சுக்கிட்டிங்கனா பிரச்சினைகளை தோற்கடிக்கும் மன வலிமை உங்களுக்கு வந்துடும், என்று அவர் பேசி முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. ஆசிரியர் ஓய்வறையை நோக்கி நடந்தவரை பின்னிருந்து யாரோ அழைப்பது கேட்டு திரும்பினார். பார்வதிதான் அது.

மிஸ் நீங்க இன்னைக்கு அருணிமா சின்ஹா பத்தி பேசலைனா நான் நாளைக்கு உயிரோட இருந்திருப்பேனான்னு தெரியல. ஆனா இனிமே எப்பேர்பட்ட பிரச்சினை வந்தாலும் போராடி ஜெயிப்பேன் மிஸ் என்று கண்கள் பளபளக்க கூறினாள்.

கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை

தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in