

எப்போதும் பள்ளியிலிருந்து வரும் போது படபடவென சந்தோஷமாக பேசிக் கொண்டு வரும் செல்வம் அன்று வருத்தமான முகத்துடன் அறையில் போய் அமர்ந்தான். இதை கண்ட அவனது அம்மா ஜோதி அவனருகில் சென்றார். “என்னப்பா செல்வம், ஏன் டல்லாயிருக்க?” என கேட்டார்.
அம்மா உங்களுக்கே நல்லா தெரியும் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அதிலும்ராஜன், அருள், இப்ராஹிம், கதிரேசன் இவங்கெல்லாம் என்னோட உயிர் நண்பர்கள்ன்னு இத்தனை நாள் நெனச்சுட்டிருந்தேன். நீங்க எனக்கு குடுக்குற சாப்பாடு, பலகாரத்தையெல்லாம் வாங்கி சாப்பிடும்போது இனிக்க இனிக்க பேசுவாங்க.
ஆனா நான் இல்லாதப்போ என்னைப் பத்தி கிண்டல் பண்ணி பேசுறாங்களாம். அப்ப அருள் மட்டும்தான் “செல்வம் நம்ம ப்ரெண்ட் , ஏன்டா இப்படி பேசுறீங்க?” அப்படீனு அவங்களை திட்டியிருக்கான். வேற ஒரு பையன் வந்து இதை என்கிட்டே சொன்னான்.
அடுத்த வாரம் கதிரேசனோட பிறந்த நாள் வருது. அன்னைக்கு ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு வெளியே எங்கேயாவது போகலாம்னு வீட்டுக்கு தெரியாம ஆளுக்குஐநூறு ரூபாய் காசு கொண்டு வர சொல்றாங்க. நான் வரமாட்டேன்னு சொன்னதுக்கு, நீ எங்களோட வரலைன்னா இனிமே எங்க கூட பேசாதேன்றாங்க. எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியலம்மா என்றான் செல்வன்.
மதிப்பு தெரியுமா?
சிறு வயது முதலே தினமும் பள்ளியில் நடந்தவற்றை தன்னிடம் வந்து சொல்லும் பழக்கமுள்ள செல்வம் பதினோராம் வகுப்பிலும் நண்பர்களைப் பற்றிய தன் வருத்தங்களையும் பகிர்ந்து கொள்வது அம்மாவுக்கு மகிழ்ச்சியை தந்தது. அவனருகில் அமர்ந்த அம்மா தன் செல்போனிலிருந்த ஒரு படத்தைக் காட்டி செல்வம் இது எவ்வளவு விலை இருக்கும் சொல் என்றார்.
கல் போன்று இருந்த அந்த படத்தைப் பார்த்த செல்வம் அம்மா இது அழகா இருக்கு. நம்ம மீன் தொட்டியில போடலாம். என்ன ஒரு நூறு ரூபா இருக்குமா என்றான். புன்னகைத்த அம்மா, இது பட்டை தீட்டப்படாத வைரம். ஒரு வைர வியாபாரி கையிலிருந்தால் இதன் மதிப்பு ஒரு கோடி ருபாய், உனக்கு அதன் மதிப்பு தெரியாததால் நூறு ரூபாய் என்கிறாய்.
இது போலத்தான் நீ எங்கு இருக்கிறாய், உன்னோடு யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து உன் மதிப்பு மாறும். மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்பதுதான் முக்கியம்.
பனை மரமா, வாழை மரமா?
மனித உறவுகளில் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற எந்த உறவையும் நாம் தேர்ந்தெடுக்க முடியாது. நண்பர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அப்படிப்பட்ட நண்பர்கள், நல்லவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நண்பர்களில் பனை மரம் போன்றவர்கள், வாழை மரம் போன்றவர்கள் என இரு வகை உண்டு.
பனைமரம் யாரும் விதை போடாமல் முளைத்து தண்ணீர் ஊற்றாமல் வளர்ந்து ஓலை, பழம், கிழங்கு, நுங்கு என பலன் தரும். பனை மரம் போன்ற நண்பர்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் நம் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருப்பார்கள்.
வாழை மரத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றினால் மட்டுமே பலன் தரும். நம்மிடமிருந்து ஏதேனும் பலன் கிடைத்தால் மட்டுமே நட்பாக இருப்பவர்கள் வாழை மரம் போன்றவர்கள். நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது பனை மரம் போன்றவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
உனக்கு முன் நன்றாக பேசி, நீ இல்லாத போது உன்னைப் பற்றி தவறாக பேசுபவர்கள் நிச்சயம் போலியானவர்கள். அவர்களை விட்டு விலகியிருப்பது தான் உனக்கு நல்லது. உன்னைப் பற்றி அவர்கள் தவறாக பேசும் போது அருள் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசுனதா சொன்ன இல்லையா. அவன் உனக்கு நல்ல நண்பனா இருப்பான்.
திருத்து அல்லது விலகு!
அதோட வீட்டுக்கு தெரியாம பணம் கொண்டு வரச் சொல்லி ஸ்கூலுக்குப் போகாம வெளியே போறாங்கன்னா நிச்சயம் அவங்க நல்ல ப்ரெண்ட்ஸ் கிடையாது. மது, சிகரெட், போதைப்பொருள் பயன்படுத்துவது இது போன்ற தவறான பழக்கங்கள் இந்த மாதிரியான நண்பர்கள் மூலம்தான் அறிமுகமாகும்.
முதலில் விருந்தாளியாக வரும் கெட்ட பழக்கம் பிறகு உன்னை அடிமைப்படுத்தி உனக்கு எஜமானனாகிவிடும். பிறகு அதிலிருந்து விடுபடுவது ரொம்ப சிரமம். பல இளைஞர்கள் இப்படிப்பட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைச்சிக்கிட்டிருக்காங்க,
இப்படிப்பட்டவர்கள் நமக்கு நண்பர்களா இருந்தா அவங்களை திருத்த பார்க்கலாம். முடியாவிட்டால் அவர்களை விட்டு விலகி விடுவது தான் நமக்கு நல்லது.
நேரத்தை சரியாக பயன்படுத்தும் பெரிய குறிக்கோளுடைய, நேர்மறையான எண்ணங்கள் கொண்ட நண்பர்கள் உன்னை சூழ்ந்து இருந்தால் நீயும், உன் நண்பர்களும் வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் அம்மா. மனக்குழப்பங்கள் நீங்கி தெளிந்த முகத்துடன் அம்மாவுக்கு நன்றி சொன்னான் செல்வம்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com
முந்தைய அத்தியாயம் | பெரிதினும் பெரிது கேள் - 4: நாளைக்கு பார்த்துக்கலாம்னு இருந்தா என்னவாகும்?