

மாதம் ஒரு முறையாவது சிறந்த சாதனையாளர்களை அழைத்து வந்து மாணவர்களுடன் உரையாட வைப்பது அந்த பள்ளியில் வழக்கம். அன்றும் அதற்காகவே தொழிலதிபரான வான்மதி அழைக்கப்பட்டு இருந்தார்.
குழந்தைகளே உங்களுக்கு ஒரு கதை சொல்லவா என்று அவர் கேட்டதும் பிரகாசமானது மாணவர்களின் முகம். அவரும் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊர்ல ‘நாளைக்கு பார்த்துக்கலாம்'னு ஒரு பொண்ணு இருந்தா. என்ன இப்படி ஒரு பெயர் இருக்கானு யோசிக்கிறீங்களா? படிக்கிறது, வீட்டுவேலை செய்றது எல்லாத்தையும் நாளைக்கு பாத்துக்கலாம், நாளைக்கு பாத்துக்கலாமுன்னு அவள் தள்ளிப்போடுவாள்.
அதனால் அவளோட பட்ட பெயரே நிரந்தரமாகிடிச்சு. இந்த தள்ளிப்போடும் பழக்கத்தால் மதிப்பெண் குறைந்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவளை திட்ட ஆரம்பிச்சாங்க. தோழிகள் அவளை தம் நட்பு வட்டத்தில் இருந்து தள்ளி வச்சாங்க. ஒன்பதாம் வகுப்பு வரை ஆல் பாஸ் ஆனவள், பத்தாம் வகுப்பில் திணறிப் போனாள். தள்ளிப்போடும் பழக்கம் உடம்பில் ஊறிப்போனதால் மலைபோல் தேங்கிய பாடங்களை படிக்க முடியாமல் பொதுத்தேர்வில் தோல்வியுற்று வீட்டுக்குள் முடங்கிப் போனாள்.
விபரீதத்தில் முடிந்த பழக்கம்
ஒரு நாள் தோட்டத்தில் நடந்த போது கீழே கிடந்த துருப்பிடித்த ஆணி காலில் குத்தியது. பெற்றோரிடம் சொன்னால் ஊசி போட சொல்வார்கள் என்று பயந்து, சரி நாளைக்கு பார்த்துக்கலாம் என வழக்கம் போல தள்ளிப்போட்டாள். நான்கைந்து நாட்கள் கழித்து அவள் தாங்கித் தாங்கி நடப்பதை பார்த்து அம்மா கேட்ட பிறகே நடந்ததை கூறினாள்.
பதறிப்போன அம்மா உடனே மருத்துவரிடம் அழைத்துப்போக, அவர் புண்ணை சுத்தம் செய்து மருந்து மாத்திரைகள் கொடுத்தார். ஆனாலும் நாளுக்குநாள் புண் பெரிதாக செப்டிக் ஆனது. காலை காப்பாற்ற கணுக்கால் வரை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வந்தது. சிறு வயது முதலே எதையும் தள்ளிப்போடும் பழக்கம் தன்னை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதை அவள் அப்போதுதான் உணர்ந்தாள்.
இன்றே செய்!
தன்னை கேலி பேசியவர்கள் முன்னால் தலை நிமிர்ந்து வாழ்ந்துகாட்டுவது என்று முடிவெடுத்தவள், வைராக்கியத்துடன் படிக்க ஆரம்பித்தாள். 10-ம் வகுப்பையும், பிளஸ் 2-வையும் பிரைவேட்டாக படித்து முதுநிலை வணிக நிர்வாகம் முடித்தாள். பல வருட அயராத கடின உழைப்பால் அம்மா நடத்தி வந்த சிறிய இட்லி கடையை பெரிய உணவு விடுதியாக்கினாள்.
இன்றைக்கு அவளது உணவு விடுதிக்கு உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகள் உண்டு. ‘நாளைக்கு பார்த்துக்கலாம்' என்று பட்டப் பேர் கொண்ட அந்த பெண்ணை "நாளைய தலைமுறையின் வழிகாட்டி" என இன்று பத்திரிக்கைகள் கொண்டாடுகின்றன என்றபடியே மேஜை மீதிருந்த ஒரு பிரபல வார இதழை எடுத்துக் காட்டினார் வந்திருந்த விருந்தினர் வான்மதி.
அதன் அட்டைப் படத்தில் வான்மதியின் புகைப்படமும் "நாளைய தலைமுறையின் வழிகாட்டி" என்ற தலைப்பும் காணப்பட்டது. பிள்ளைகளே இவ்வளவு நேரமும் நான் சொன்னது என்னைப் பற்றித்தான். நான் தான் அந்த நாளைக்கு பார்த்துக்கலாம்னு பட்டப்பேர் கொண்டு அழைக்கப்பட்டவள்.
அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உங்கள் முன் நிற்கிறேன் என்று சொன்னதும் மாணவ மாணவியரின் கரகோஷம் விண் அதிர செய்தது. ஓரடி முன்னே வந்த அவரது உலோகக்கால் அவரைப் போலவே மின்னியது.
அன்பு பிள்ளைகளே எல்லா வேலைகளையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அது மோசமான விளைவுகளை தரும்.செய்ய வேண்டிய வேலையைக் கண்டு மலைத்து போகாமல், அதை செய்து முடித்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அந்த எண்ணமே உற்சாகத்தை தரும். அதே உற்சாகத்தோடு வேலை செய்ய தொடங்குங்கள். ஒரே மூச்சில் முழுவதும் முடிக்க வேண்டுமென்று நினைக்காமல் சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு எது முக்கியமோ அதை முதலில் படியுங்கள்.
தள்ளிப்போடுவதை தடுக்கும் வழி
# படிக்க வேண்டிய பாடத்தை இரவே குறித்துக் கொள்ளுங்கள்.
# காலை படிக்க உட்காரும் முன் 25 நிமிடத்தில் அலாரம் அடிக்கும்படி வைத்துவிட்டுப் படிக்க ஆரம்பியுங்கள்
# இடையில் கவன சிதறல் ஏற்பட்டால் அதை ஒரு தாளில் எழுதிக் கிழித்துப் போடுங்கள்.
# 25 நிமிடம் முடிந்ததும் 3 லிருந்து 5 நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், செல்போன், டிவி பார்க்கக் கூடாது.
# மீண்டும் 25 நிமிடம் அலாரம் வைத்துப் படியுங்கள்
# இதுபோல நான்கு முறை செய்ததும் ஒருமணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
# முடிவில் உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
பெரிய வேலையை பிரித்து செய்வதால் சுமையை சுலபமாக்கும் இந்த உத்தி உங்களை வெற்றிப் பாதையில் வலம் வர செய்யும். ஆரம்பமே அமர்க்களமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்பித்தாலே அமர்க்களம்தான்.
கட்டுரையாளர்: ஆசிரியர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com