

இன்றைய குழந்தைகள் காலில் சக்கரம் இல்லாத குறையாக, கடிகார முட்களுடன் போட்டிப் போட்டு ஓட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். அவர்களின் மனமும் உடலும் சோர்வடையாமல் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். இந்த இரண்டில் ஒன்று தளர்ந்து போனாலும், எண்ணிய இலக்கை அடைவது கடினம்.
ஒரு நாள் முழுக்க நம்மை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க கூடிய வழிமுறைகளில் யோகப் பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு. உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராகப் பாயும் போது அனைத்து உறுப்புகளும் அதன் இயக்கங்களை ஒழுங்காகச் செய்யும். அந்த வகையில், உடல் முழுக்க ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவும் ஆசனங்களில் முதன்மையானதாக இருக்கக் கூடிய உத்தானாசனம் பற்றி பார்க்கலாம்.
உத்தானாசனம் செய்வது எப்படி?
ஆரம்ப நிலையில், இரண்டு கால்களையும் சற்று தள்ளி வைத்து நேராக நிற்க வேண்டும். பிறகு மூச்சை நன்கு இழுத்தபடி கைகளை முன்புறமாகத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். ஒரு விநாடி இந்த நிலையில் இருந்து விட்டு, பிறகு மூச்சை விட்டபடி முன்புறமாகக் குனிந்து கைகளைப் பாதத்திற்கு அருகே வைக்க வேண்டும்.
முடிந்தவர்கள் கால்களை மடக்காமல் நிலையாக வைக்க வேண்டும். புதிதாக செய்பவர்களும், முடியாதவர்களும் முட்டியைச் சற்று மடக்கிக் கொள்ளலாம். சில விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு மெல்ல மூச்சை இழுத்தபடி உடலை உயர்த்திக் கொண்டே பழைய நிலைக்கு வர வேண்டும். மூச்சைவிட்டபடி இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
இது ஆரம்பநிலை யோகாசனமாக இருந்தாலும், யோகா பயிற்சியாளர்களிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது. எந்த ஒரு பயிற்சியை செய்யும் போதும், நல்ல புரிதலுடன் செய்யும் போது அதன் பலன் இரட்டிப்பாகும்.
உத்தானாசனம் உடல் வலியைப் போக்குவதோடு, முதுகு மற்றும் தண்டுவடத்தையும் வலுவாக்கும். இன்றுள்ள குழந்தைகள் அதிக நேரம் வகுப்பில் உட்கார வேண்டிய சூழல் இருப்பதால், இடுப்பு எலும்புகளை வலுவாக்கவும் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரித்து, மனம் புத்துணர்ச்சி அடையும்.
பயிற்சி எங்களுடையது... முயற்சி உங்களுடையது... ஆரோக்கியம் நம்முடையது.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்
யோகா செய்பவர்: அம்ருத நாராயணன்
படங்கள்: எல்.சீனிவாசன்
தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்
முந்தைய அத்தியாயம்: யோக பலம் - 4: தன்னம்பிக்கை அதிகரிக்க விருக்ஷாசனம்!