

வளரும் வயதில் குழந்தைகளுக்கான மிகப் பெரிய சவால் மனதை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பதே. இன்றைய நவீன யுகத்தில், இளையோரின் மனதை திசைத் திருப்பும் விஷயங்கள் அநேகம்.
அதிலும் பதின்ம வயதுக் குழந்தைகளின் மனப்போராட்டங்கள் அவர்களின் வாழ்க்கையை திசை திருப்பக் கூடியவை.
படிக்கும் காலத்தில் மனதை உங்கள் கட்டுக்குள் வைக்க பழகிக் கொண்டாலே உங்களுடைய் இலக்கை எளிதாக அடைந்து விட முடியும். கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி படிக்க, எந்த விதமான ஆசனங்களை செய்யலாம் என்பதை இன்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் மாணவர்களே!
ஆர்ப்பரிக்கும் அலைகள் எழும் கடலுக்குள் நம் பயணத்தை சுமுகமாகத் தொடர முடியாது அல்லவா? மனதை அமைதியாக, சலனமில்லாமல், ஒருமுகப்படுத்தும் போது போக வேண்டிய பாதையும் பயணமும் எளிதாக இருக்கும்.
மனதை எப்போதும் விழிப்போடு வைத்துக் கொள்ளக்கூடிய ஆசனங்கள் நிறைய இருந்தாலும், சமன் நிலைப்படுத்தும் மற்றும் பின்னால் வளைந்து செய்யக்கூடிய ஆசனங்கள் மிகவும் நல்லது. இதில் மிகவும் விசேஷமானதும், பயனளிக்கக் கூடியது விருக்ஷாசனம்.
விருக்ஷாசனம் செய்வது எப்படி?
விருக்ஷம் என்ற சொல்லுக்கு மரம் என்று பொருள். மரம் போல் ஆடாது அசையாது நிற்கும் நிலை என்பதால் இதற்கு இந்த பெயர்.
# முதலில் கால்களை நேராக வைத்து, முதுகை நிமிர்த்தி நிற்க வேண்டும்.
# பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதிய வைக்க வேண்டும்.
# மடித்து வைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.
# பின்னர் மெதுவாக கைகளை தூக்கி தலைக்கு மத்தியில் நமஸ்காரம் செய்வது போல் வைக்க வேண்டும்.
# அடுத்து கால்களை கீழே இறக்கி, இப்போது வலது காலை மடக்கி இதேபோல் செய்ய வேண்டும்.
# இப்பயிற்சியின் போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும்.
தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்து பழகுவதால் பலன்கள் பல உண்டு. கால்கள் வலுப்பெறும், புஜங்கள் விரிவடையும். எல்லாவற்றுக்கும் மேலாக, மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். இன்றைய தேதிக்கு நமக்கு இதுதானே வேண்டும்.
சுட்டிக் குழந்தைகள் பழகலாம்!
விருக்ஷாசனம் தொடர்ந்து செய்து வருவதால், உடலின் சமநிலை கூடி, மன தடுமாற்றத்தைப் போக்கும். கவனக் குவிப்புத் திறன் வளரும் என்பதால் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்ற ஆசனம் இது. மனது ஒருமுகப்படும் போது, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
என் குழந்தையை ஒரு இடத்தில்ஒரு நிமிடம் கூட நிற்க வைக்க முடியாது என்று சொல்லும் பெற்றோர்கள், சிறுவயது முதலே அவர்களை இந்த விருக்ஷாசனத்தை செய்ய பழக்கினால், நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் சொல்லும் சொல்லுக்கு உங்கள் மனது கட்டுப்பட வேண்டுமா மனம் தெளியும் விருக்ஷாசனம் செய்து பாருங்கள். பயிற்சி எங்களுடையது…முயற்சி உங்களுடையது…ஆரோக்கியம் நம்முடையது.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்
யோகா செய்பவர்: அம்ருத நாராயணன்
படங்கள்: எல்.சீனிவாசன்
தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்