போர்க் காலத்தில் சத்துணவு

போர்க் காலத்தில் சத்துணவு
Updated on
1 min read

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரின் காரணமாக இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகச் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் மருத்துவமனை, பள்ளிகள், மாணவ விடுதிகளுக்கான எரிவாயு விநியோகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

அதேநேரத்தில் எல்பிஜி எரிவாயு உருளையின் தட்டுப்பாட்டினால் ஒரு சில மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சத்துணவு விநியோகத்தில் தாக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள பல பள்ளிகளில் விறகு, களிமண் அடுப்பு களைப் பயன்படுத்திச் சமையல் செய்யப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் போதிய எரிவாயு இல்லாததால் உணவுப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு வேக வைத்த முட்டை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

சில பள்ளிகளில் வழக்கமான உணவுக்குப் பதிலாகக் கிச்சடி தரப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் சில பள்ளிகளில் சமைத்த உணவுக்கு மாற்றாக வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன.

கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தில் பெரிய பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ‘அக்‌ஷய பாத்ரா’ அறக்கட்டளையின் வசம் 70 நாள்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு இருப்பு உள்ளதால், அதன் மூலம் உணவு விநியோகம் செய்யப்படும் பள்ளிகளில் எந்தவித சிக்கலும் இதுவரை கண்டறியப்படவில்லை.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு, மதிய உணவு விநியோகம் இதுவரை சீராக நடைபெற்றுவருவதாகத் தெரிய வந்துள்ளது.

மூன்று வாரங்களுக்கு அவசியமான சமையல் எரிவாயு உருளைகள் தமிழ்நாடு பள்ளிகளுக்கு உணவளிக்கும் சத்துணவு சமையல் கூடங்களின் வசம் இருப்பதால், தற்சமயம் சூழல் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

போர்க் காலத்தில் சத்துணவு
சூப்பர் பூனையும் இணை உலகங்களும் | அணு முதல் அண்டவெளி வரை 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in