சூப்பர் பூனையும் இணை உலகங்களும் | அணு முதல் அண்டவெளி வரை 11

சூப்பர் பூனையும் இணை உலகங்களும் | அணு முதல் அண்டவெளி வரை 11
Updated on
2 min read

காலையில் நேர்த்தி யாக உடை அணிந்து பேருந்து நிலை யத்துக்கு வருகிறான் சிவா. சென்னையில் 12பி பேருந்தைப் பிடித்து, நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், சில காரணங்களால் பேருந்தைத் தவற விடுகிறான். வேலை கிடைக்காமல் போய்விடுகிறது.

நியாயமாகப் பார்த்தால் கதை இதன் அடிப்படையில்தான் தொடர வேண்டும். ஆனால், இயக்குநர் இங்கே ஒரு திருப்புமுனையை வைக்கிறார். சிவா பேருந்தைப் பிடித்திருந்தால்? நேர்முகத் தேர்வில் வெற்றி அடைந்தி ருந்தால்? வேலைக் கிடைத்திருந்தால் என அனைத்துக் கேள்விகளையும் சாத்தியமாக்கி, மற்றொரு கதையை உருவாக்குகிறார்.

வேலையற்ற சிவா சுயதொழில் தொடங்கி, கடுமையாக உழைத்து வெற்றி பெறுகிறான். வேலை கிடைத்த சிவா, வேலையில் பயணித்து வாழ்க்கையை அறிந்துகொள்கிறான். இந்த இரண்டு சாத்தியங்களும் இணை யாக ‘12B’ திரைப்படத்தில் காட்டப்பட்டன.

ஒரே நேரத்தில் இரண்டு நிலைகள்

சுண்டிய நாணயத்தைப் பூவா-தலையா எனக் கவனிக்கும் வரை இரண்டு சாத்தியங்களும் ஒரே நேரத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல் பேருந்து நிலையத்தை சிவா அடையும்வரை, ‘பேருந்தில் ஏறுவது, பேருந்தைத் தவறவிடுவது’ ஆகிய இரண்டு நிலைகளில் இருக்கிறான்.

இது ஒரு சினிமா திருப்புமுனையாக இருந்தாலும், அணுக்களின் உலகில் இது உண்மை. குவாண்டம் இயற்பியல் இதை ‘மேற்பொருந்துதல்’ (Superposition) என்கிறது. அதாவது, ஒரு துகள் கவனிக்கப்படும்வரை, அது சாத்தியமான பல நிலைகளிலும், ஒரே நேரத்தில் இருக்கும்.

கோபன்ஹேகன் விளக்கம்

இரு பிளவு சோதனையில், எலெக்ட் ரான்கள் துகளாக இருந்தாலும் அலை யாகப் பயணிக்கின்றன. அந்த அலை, எலெக்ட்ரான் படியக்கூடிய அனைத்து இடங்களின் சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது.

நாம் அந்த அலையின் பயணத்தை அளவிட முயன்றால், அந்த அலைப்பண்பு சரிந்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஒரே புள்ளியில் குவிந்துவிடும். இதுதான் 1920களில் நீல்ஸ் போர், ஹைசன்பெர்க் ஆகியோர் நிறுவிய குவாண்டம் இயற்பியலின் மரபுவழிக் கட்டமைப்பான ‘கோபன்ஹேகன் விளக்கம்’.

ஷ்ரோடிங்கரின் பூனை

கோபன்ஹேகன் விளக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத ஷ்ரோ டிங்கர், ஒரு கற்பனைப் பரிசோதனையைச் சொன்னார். ஒரு பெட்டிக்குள் பூனை, கதிரியக்கப் பொருள், நச்சுக்குப்பியை வைத்துப் பூட்டிவிட வேண்டும். கதிரியக்கப் பொருள் சிதைவதற்கு 50% வாய்ப்புள்ளது.

சிதைந்தால் நச்சுக்குப்பி உடைந்து பூனை இறந்துவிடும். சிதையாவிட்டால் பூனை உயிர் பிழைக்கும். ஒரு மணி நேரம் கழித்துப் பெட்டியைத் திறக்கும் வரை, குவாண்டம் விதிகளின்படி அந்தப் பூனை இரண்டு நிலைகளிலும் இருக்கும். நிஜ உலகில் இது சாத்தியமற்றது என்றார்.

பார்வையாளர் விளைவு நுண்ணுலகில் இது நிச்சயமாகச் செயல்பட்டது. எலெக்ட்ரான் எந்தப் பிளவு வழியாகச் செல்கிறது என்பதை ‘கவனிக்க’ அதன் மீது புற ஆற்றலைச் செலுத்தும்போது, எலெக்ட்ரானின் ‘அலைநிலை' சிதைந்துவிடுகிறது.

இது ஒத்திசைவு இழப்பு (Decoherence) எனப்படுகிறது. நாம் கவனிக்கும்வரை அனைத்துச் சாத்தியங்களும் அலையாக இருக்கின்றன. பெட்டியைத் திறக்கும் வரை, திரையில் எலெக்ட்ரான் பதியும் வரை, பேருந்தில் ஏறும்வரை - பூனை, எலெக்ட்ரான், சிவா ஆகியோர் அனைத்து சாத்திய நிலைகளிலும் இருக்கிறார்கள்.

கோபன்ஹேகன் விளக்கத்தில், ‘நாம் கவனித்தால்’ அலைநிலை ஒரு சாத்தி யத்தில் சுருங்கி, மற்ற சாத்தியங்கள் மறைகின்றன. ஆனால், அலையின் மற்ற சாத்தியங்கள் உண்மையிலேயே மறைந்துவிடுகின்றன என்பதற்குத் தெளிவான கணித விளக்கம் இல்லை.

இதற்கு மாறாக எவரெட், ‘அலை மறைய வில்லை' என்றார். அலையின் மற்ற சாத்தியங்கள் மறையாமல், தொடர்ந்து விரி வடைந்துகொண்டே சென்று, ஒவ்வொரு சாத்தியமும் தனித்தனி பிரபஞ்சங்களாகத் தொடரும் என்றார். இதுவே எவரெட்டின் ‘பல உலகங்களின் விளக்கம்' (Many-Worlds-Interpretation) எனப்படுகிறது.

குவாண்டம் கணக்கீடு

சாதாரண கணினிகள் ‘பிட்’ (Bit) அடிப் படையில், 0 அல்லது 1 என்ற நிலையில் இயங்குகின்றன. அதுவே குவாண்டம் கணினிகள் ‘கியூபிட்’ (Qubit) மூலம், ஒரே நேரத்தில் 0, 1 ஆகிய இரு நிலைகளிலும் செயல்பட முடியும்.

இதனால், சில கணக்கீடுகளில், ஒன்றன்பின் ஒன்றாக இல்லாமல், கோடிக்கணக்கான சாத்தியக் கூறுகளை ஒரே நேரத்தில் பரிசோதிக்க முடிகிறது. இந்த அசாதாரண வேகம், அந்தக் கணக்கீடுகள் வெவ்வேறு உலகங்களில் ஒரே நேரத்தில் நிகழ்ந்து, அதன் முடிவுகள் பின்னர் ஒன்றிணைக்கப்படுவதால் இருக்கலாம் என்று குவாண்டம் கணித்தலின் தந்தை டேவிட் டாய்ச் கருதுகிறார்.

(தொடர்ந்து தேடுவோம்)

- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com

சூப்பர் பூனையும் இணை உலகங்களும் | அணு முதல் அண்டவெளி வரை 11
நிச்சயமற்ற கொள்கையே நிச்சயமானது | அணு முதல் அண்டவெளி வரை 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in