காலங்களை இணைக்கும் குவாண்டம் தையல் | அணு முதல் அண்டவெளி வரை 13

காலங்களை இணைக்கும் குவாண்டம் தையல் | அணு முதல் அண்டவெளி வரை 13
Updated on
2 min read

உடல்நலம் சரியில்லாத பாட்டியைப் பார்க்க, அந்தச் சிறுவன் ஊருக்குச் செல்கிறான். அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுடைய சிறுவன், புத்தகங்களைத் தேடி, அந்த பழைய வீட்டின் மாடி அறைக்குச் செல்கி றான். அங்கே நிறையத் தூசியுடன், பழையப் பொருள்கள் நிறைந்துள்ளன.

ஒரு பழைய கறுப்பு-வெள்ளை ஒளிப்படம் தென்படுகிறது. அதில், இவனுடைய இளவயதுத் தாத்தாவுடன் ஒரு பெண் இருக்கிறாள். “யாராக இருக்கும்?” என்று, யோசித்தபடி நின்றிருக்கும் இவனை, “தம்பி, இங்கே வா!” என்றொரு அமானுஷ்ய குரல் அழைக்கிறது.

திரும்பிப் பார்த்தால், அதே பெண், ஒரு சாய்வு நாற்காலியில், அமர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறாள். “பயப் படாதே! நானும் உன் பாட்டிதான், வா!!” என்கிறாள். இந்த சிறுவனும், தன்னிச்சையாக அவளை நோக்கிச் செல்கிறான்.

எழுத்தாளர் போகன் சங்கர் எழுதிய ‘Conjuring' கதையின் தொடக்கம் இது. மீதியைத் தேடிப் பிடித்துப் படியுங்கள்! நம் உலகில் ஒருவர் இறந்து விட்டால், அவர் என்றென்றைக்கும் மறைந்துவிட்டார். அவருடன் மீண்டும் தொடர்புகொள்வது, என்பது ஒரு அமானுஷ்ய அனுபவம்.

நிரூபிக் கப்பட்ட அறிவியல் நிகழ் வல்ல. ஆனால், குவாண்டம் உலகில், அணுத்துகள்கள், குவாண்டம் பிணைப்பில் ஒன்றையொன்று சந்திக்காமலேயே, கால இடைவெளி யைக் கடந்து தொடர்புகொள்ள முடியும். இந்த செயல் முறை, ‘பிணைப்புப் பரிமாற்றம்’ (Entanglement Swapping) என்றழைக் கப்படுகிறது.

காலம் கடந்த பிணைப்பு

ஜெருசலேம் நகரில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழக இயற்பியலாளர்கள், ‘ஒரே நேரத்தில் இருந்திராத ஃபோட் டான்களின் பிணைப்பு' (Entanglement Between Photons that Have Never Coexisted) என்கிற சோதனையை 2013இல் நடத்தினர்.

அவர்கள், முதலில் துகள்-1, துகள்-2 ஆகிய இரு பிணைக்கப்பட்ட ஃபோட்டான் துகள்களை (Entangled-Photons) உருவாக்கினர். இதில் துகள்-1 உடனடியாக அளவிடப்பட்டு அழிக்கப்பட்டது. சிறிது காலம் கழித்து, துகள்-3, துகள்-4 என மற்றொரு பிணைக்கப்பட்ட ஃபோட்டான் ஜோடியை உருவாக்கினர்.

துகள்-3, 4 பிறக்கும்போது, துகள்-1 ஏற்கெனவே அழிந்துவிட்டது. இப்போது, முதல் ஜோடியில் எஞ்சியிருந்த துகள்-2-ஐயும், புதிய ஜோடியில் இருக்கும் துகள்-3-ஐயும் இணைத்து ‘பெல்நிலை அளவீடு' (Bell State Measure ment) செய்துபார்த்தனர்.

இந்த அளவீட்டின் மூலம் துகள்-2, துகள்-3 தங்களுக்குள் பிணைக்கப்படு கின்றன. அப்போது ஒரு அதிசயம் நிகழ்கிறது. தனித்துவிடப்பட்ட துகள்-4, ஏற் கெனவே அழிந்துபோன துகள்-1 உடன் பிணைகிறது. துகள்-4 பிறப்பதற்கு முன்பே துகள்-1 அழிந்து விட்டாலும், துகள்-1இன் பண்புகள் துகள்-4இல் அப்படியே பிரதிபலிக் கின்றன.

இந்த சோதனையின் முடிவை, ‘கடந்தகால துகள், மீண்டும் உயிர் பெற்று வருகிறது' என்பதாகக் கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. ஆனால், அந்த துகள் அளவிடப்பட்ட போது உருவான தகவல், பின்னர் உருவாகும் துகள்களுக்கு இடையேயான பிணைப்புகளில், மீண்டும் வெளிப்படு கிறது என்பது தான் விசித்திரம்.

தகவல் அழியா விதி

குவாண்டம் இயற்பியலில் ‘தகவல் அழியா விதி’ (Law of Conservation of Information) மிக முக்கியமானது. இதன்படி, பிரபஞ்சத்தில் எந்த வொரு தகவலும், ஒருபோதும் அழிந்து போகாது.

ஒரு துகள் மறைந்தாலும், அதன் குவாண்டம் நிலைகள் (Quantum States) பிரபஞ்சத்தின் ‘அலை சார்பு’ (Wavefunction) எனும் பொதுவான வலைப்பின்னலில் சேமிக்கப்படுகின்றன. இயற்பியல் ரீதியாக இந்தத்தகவலை அழிப்பது சாத்தியமற்றது.

எனவேதான், பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த துகளின் தகவலைக் கூட, இன்றிருக்கும் மற்றொரு துகளுடன் இணைக்க முடிகிறது. ‘குவாண்டம் பிணைப்பு’ என்பது துகள்களுக்கு இடையேயான உறவு மட்டும் அல்ல, அது கால– வெளியின் (Space-Time) அடிப்படைக் கட்டமைப்போடு தொடர்புடையது.

பிணைப்பு இல்லையென்றால் கால-வெளி என்பதே இல்லை (ER = EPR conjecture) எனும் யோசனையை, சமீபத்திய கோட்பாட்டு இயற்பியல் முன்வைக்கிறது. எனினும், இது இன்னும் ஆய்வு நிலையில் மட்டுமே உள்ளது.

குவாண்டம் உலகில், கடந்த காலத்தில் நடந்தவற்றை, நிகழ் காலத் தின் செயல்களால் மாற்றி எழுத முடியுமா? தாமதிக்கப்பட்ட-தேர்வு சார்ந்த சோதனையின் (Delayed-Choice-Experiment) விந்தை என்ன? இந்த வினாக்களுக்கான விடைகளை நோக்கி இன்னும் ஆழமாகப் பயணிப்போம்.

(தொடர்ந்து தேடுவோம்)

- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com

காலங்களை இணைக்கும் குவாண்டம் தையல் | அணு முதல் அண்டவெளி வரை 13
குவாண்டம் உலகின் மர்ம கைக்குலுக்கல் | அணு முதல் அண்டவெளி வரை 12

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in