Last Updated : 04 Jan, 2023 06:10 AM

 

Published : 04 Jan 2023 06:10 AM
Last Updated : 04 Jan 2023 06:10 AM

இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு பணி மும்முரம்: கூகுள் தவறான மொழிபெயர்ப்பில் வினாக்கள்

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநின்ற காரணத்தைக் கண்டறிவதற்காக அவர்களிடமும் பெற்றோரிடமும் 55 கேள்விகள் கேட்டு கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இக்கேள்விகள் கூகுள் மூலம் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதால் சில கேள்விகள் அபத்தமாக இடம்பெற்றுள்ளன.

நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இப்பணி ஜனவரி 11-ம் தேதி முடிவடைகிறது. அரசு பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணியை அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்விதன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்டுகள், பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த பகுதியும் விடுபடாமல்... ஒவ்வொரு மாவட்டத்திலும்அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணிநடைபெற வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநி்ல திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு கவனம்: வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பு மேற்கொள்வோரிம் மாணவர்கள் இடைநின்றதற்கான காரணங்களை தகவல்களாக சேகரித்து ஆவணப்படுத்துவதற்காக 55 வினாக்கள் கொண்ட பட்டியல் தரப்பட்டு்ள்ளது. ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்ள இந்தப் பட்டியலில் சில கேள்விகள் கூகுளில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு அபத்தமாக உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியப் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கூறியதாவது: 2019-ல் மத்திய அரசின் புதியகல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டபோது, அதுகுறித்து தமிழக மக்களின் கருத்து கேட்பதற்காக ஆங்கிலத்தில் இருந்த புதிய கல்விக் கொள்கை வரைவு கூகுள் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

சுமார் 200 பக்கங்களை மொழி பெயர்ப்பு செய்ததில் பல இடங்களில் தவறான, அபத்தமான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதுகுறித்து கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், இந்திய மாணவர் அமைப்பு முயற்சியில் 40 பேர் கொண்ட ஆசிரியர்கள் குழுஅந்த வரைவு அறிக்கையை தெளிவாக மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டது.

அதிகாரிகள் விளக்கம்: அதுபோல இப்போது அரசு பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் பற்றிய கணக்கெடுப்பிற்காக வழங்கப்பட்டுள்ள 55 கேள்விகளில் சிலவற்றை அபத்தமாக மொழி பெயர்த்துள்ளனர். Student Expired என்பது மாணவர் காலாவதியானார் என்றும், Semi Orphans (Single Parent Child) என்பது அரை அனாதைகள் (ஒற்றைப் பெற்ற குழந்தை) என்றும், Duplicate Entry என்பது நகல் நுழைவு என்றும் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “கூகுள் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் விரைவில் சரிசெய்யப்படும்" என்று உறுதியளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x