Last Updated : 02 Oct, 2021 06:39 AM

 

Published : 02 Oct 2021 06:39 AM
Last Updated : 02 Oct 2021 06:39 AM

கல்வி கட்டணச் சலுகை, சிறப்பு இடஒதுக்கீடு வழங்கியும் பொறியியல் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை குறைவு: விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்விகட்டணச் சலுகை, சிறப்பு இடஒதுக்கீடுவழங்கியும் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் பொறியியல், மீன்வளம், வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

இதனால் முந்தைய ஆண்டுகளைவிட பொறியியல் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக மிகக் குறைந்த அளவிலேயே மாணவர்கள், கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றுள்ள 440 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 51,870இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான சேர்க்கை கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 11,390 இடங்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க 15,660 அரசுப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றனர். சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த வாரம்நடைபெற்றது. அதில் மொத்தம் 5,972 (38%)அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளைத் தேர்வுசெய்து இடங்களை உறுதி செய்துள்ளனர்.

இதனால் எஞ்சிய 5,418 இடங்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு சென்றுவிட்டன. அரசு வழங்கிய இந்த நல்வாய்ப்பை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வரும்காலங்களில் இதுதொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு முக்கியக் காரணம் போதியகாலஅவகாசம் இல்லாததும், விழிப்புணர்வு இல்லாததுமே என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர் செல்வக் குமார் கூறியதாவது:

பொறியியல் மாணவர் சேர்க்கையை பொருத்தமட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2019-ம் ஆண்டு 12,659 பேரும், 2020-ம்ஆண்டு 13,082 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த விகிதத்தை உயர்த்தவே சிறப்புஒதுக்கீட்டை அரசு அமல்படுத்தியது. ஆனால், அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. கலந்தாய்வில் பங்கேற்கஇந்த ஆண்டு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டஅரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரைஅரசுப் பள்ளியில் படித்தமைக்கான சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி தகுதியான பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.

அதேபோல், அந்த சான்றிதழ்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் விநியோகம் செய்ததில் பல்வேறு குழப்பங்கள் நிலவின. இதுதவிர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு குறித்த முழு புரிதல் இருப்பதில்லை. அவர்களை வழிநடத்த, ஆலோசனைகள் வழங்க அரசு சார்பில் போதுமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கல்விக் கட்டணத்தை அரசு வழங்கும். பொதுப்பிரிவில் செல்பவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால், பல மாணவர்கள் இதை அறியாமல் விரும்பிய இடங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக அண்ணா பல்கலை. உள்ளிட்ட சிறந்த கல்லூரிகளை தவிர்த்துவிட்டு பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். அதேபோல்,சேர்க்கை இடங்களை உறுதிசெய்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான தேதி விவரம் தெரிவிக்கப்படாததால் மாணவர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி, பிளஸ் 2 படிக்கும்போதே பள்ளிகள் வாயிலாக பொறியியல் கலந்தாய்வு குறித்த வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x