Published : 08 Oct 2020 07:13 AM
Last Updated : 08 Oct 2020 07:13 AM

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு- கிராமம் Vs நகரம்?

நல்ல தரமான கேள்விகள் கொண்ட சிறந்த போட்டித் தேர்வு என்கிற அடையாளத்தை தக்க வைத்து உள்ளது யுபிஎஸ்சி குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வு. ஆனால்..?

காலையில் நடந்த பொதுப் பாடத் தேர்வு - அநியாயத்துக்குக் கடினமான ஒன்றாக இருந்தது. ‘தரமானது’ என்றாலே கடினமாகதான் இருந்தாக வேண்டுமா என்ன...? அதிலும் அந்தந்த துறை விற்பன்னர்கள் மட்டுமே பதில் அளிக்க முடியும் என்கிற அளவுக்கா ‘தரம்’ தேவைப்படுகிறது...?

கார்பன் நேனோ ட்யூப்ஸ், ’கோல்ட் ட்ரான்ச்’, ’செர்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட்’, ‘ட்ரிம்ஸ்’, ‘காஞ்ஜுடேட் வாக்சின்’ என்று ஒவ்வொரு பாடத்துக்கு உள்ளும் ஆழமாக நுழைந்து கேட்பதை - ஒரு தேர்வராக ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்.

போட்டித் தேர்வுக்கான அளவுகோல் - பல்வேறு துறைகளில் அறிதலும், புரிதலும் தானே அன்றி, அப்பாடங்களின் நுண்ணிய பொருளை ஆராய்ந்து சொல்வதல்ல. இந்த விதி, அநியாயத்துக்கு மீறப்பட்டு இருக்கிறது.

‘ப்ளூரி பொடன்ட் ஸ்டெம் செல்’, நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003; சைபர் காப்பீடு; கார்பன் - ‘சமூக விலை’; இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாள நாட்டுடன் வர்த்தக உறவு; மற்றும் 'west taxes intermediate' தொடர்பான வினாக்கள், தேர்வர்களை சவாலுக்கு அழைப்பது போல் உள்ளதே அன்றி, அவர்களின் பொது அறிவுத் திறனை சோதிக்கிற முயற்சியாகப் படவில்லை.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி, இந்தியாவின் பல்லுயிரிகள் - ‘சிலோன் ஃப்ராக்மவுத், காப்பர்ஸ்மித் பார்பட், சாம்பல் நிற மினியெட், வெள்ளை தொண்டை ரெட்ஸ்டார்ட் ஆகியன.. தேர்வர்களைக் கலங்கடிக்க வைக்கும் கேள்விகள்.

எத்தனை மாதங்கள் படித்தாலும் யாராலும் இத்தனை துறைகளில் புலமை பெறுவது இயலாத காரியம். கேள்விகளின் கடினத் தன்மை, ஒரு பாடத்தின் ஆழத்தைப் பொறுத்ததாக அமைவது, எல்லாருக்குமான பொதுவான போட்டித் தேர்வில் தவிர்க்கப்பட வேண்டும்..

தேர்வு முடிந்து சில மணி நேரங்களுக்கு, துறை சார்ந்த ’நிபுணர்கள்’ கலந்து ஆலோசித்து, விடைகளைத் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. என்ன பொருள்..? இது, பொதுத் தேர்வர்களுக்கான பொதுத் தாள் அல்ல.

மொத்தம் 100 கேள்விகளில், நிபுணத்துவம் இருந்தால் அன்றி விடை அளிக்க முடியாது என்கிற வகைக் கேள்விகள் - 40க்கும் மேல் இருந்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு மிக அதிகம். ’வடிகட்டுகிற வேலைக்கு’ உதவும் என்பதன்றி வேறு எந்த நியாயமும் இவ்வகைக் கேள்விகளில் இல்லை.

அறிவியல் - தொழில்நுட்பம், பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம், ‘தேசிய வரலாறு’ ஆகிய பகுதிகளில், ‘கணிக்க முடியாத’ பகுதிகள், அதிகம்; ‘பரிச்சயம்’ அற்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் ஏராளம்.

விவசாயம் தொடர்பான கேள்விகள் கூட, விவசாயக் கல்வி சார்ந்து இருந்த அளவுக்கு, நேரடியாக வேளாண்மை பற்றி அதிகம் இல்லை. ஆனால் மிக கவனமாக, ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ பற்றி மீண்டும் மீண்டும் குறிக்கப்படுகிறது!

‘தேசிய வரலாறு’ பகுதியில், காவிரி டெல்டா, சோழ - பல்லவ சாம்ராஜ்ஜியம் என்று 2 கேள்விகளில் மட்டும், தமிழ்நாடு பற்றிய கேள்விகள் ஏதோ தலை காட்டுகின்றன. ஆனால் நாம் கேள்விப்பட்டிராத பல பெயர்கள், பல சம்பவங்கள் ஆங்காங்கே வந்து ‘மிரட்டுகின்றன’.

மதியம் நடந்த ‘சிசாட்’ தேர்வு அப்படியே நேர் எதிர். இது வெறும் தகுதி நிலைத் தேர்வு மட்டுமே. இதில் அநேகமாக ‘புகார்’ கூறுவதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை. பல வினாக்கள் எளிதாகவும் அதே சமயம் புத்திசாலித்தனம் நிறைந்தும் இருந்தன.

திசை அறிதல்; 2 & 3ஆல் வகுபடும் எண்; வாக்கியங்கள் - முடிவுகள்; நான்கு பேரில் யார் மூத்தவர் - 1 - 100 வரை, தன்னில் 4 கொண்ட ஆனால் 4ஆல் வகுபடாத எண்கள் எத்தனை போன்று பல கேள்விகள் இதமாக இருக்கின்றன.

சுவாரஸ்யமான கேள்விகளும் உண்டு. 7.5 அடி, 3.5 அடி நீளம் கொண்ட இரண்டு நேர்க் குச்சிகள் கொண்டு, எத்தனை குறைந்த பட்ச நீளம் கணக்கிடலாம்..? ஒரு புத்தகத்தில் ,ஒரு தாள் கிழிந்து விட்டது. மீதம் உள்ள பக்கங்களின் கூட்டுத் தொகை 195. கிழிந்து போன தாளின் பக்கம் என்ன? . DELHI என்கிற சொல்லில் இடையில் உள்ள 3 எழுத்துகளை எத்தனை முறை இடம் மாற்றலாம்..?

இதே போன்றதொரு அணுகுமுறையைப் பொதுப் பாடத்திலும் பின்பற்றி இருக்கலாம். ஆனால் மிகவும் செங்குத்தான பாறையில் ஏற வைத்தது ஏன்?

ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கும் சேர்ந்து விட்ட சிலர், மேம்பட்ட தரம் வேண்டி இம்முறை மீண்டும் எழுதினர். அவர்களுமே, முதல் நிலைத் தேர்வுக்குப் பிறகு, மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ‘அனுபவஸ்தர்கள்’ வெற்றியாளர்கள்’ ஆகியோருக்கே இந்த நிலைமை எனில், ’புதியவர்கள்’ என்ன செய்வார்கள்..?

அறிவியல் - தொழில் நுட்பம் உள்ளிட்ட பல பகுதிகளில், வினாக்களைப் படித்துப் புரிந்து கொள்ளவே கடும் சிரமப்பட வேண்டி இருந்தது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட போகிறவர்கள் - நிச்சயமாக கிராமத்துத் தேர்வர்கள்தாம்.

ஓரளவுக்கு படித்த நகரத்துப் பெற்றோர் இருக்கிற வீடுகளில், சற்றே ‘அறிவுசார் பின்னணி’ கொண்ட இளைஞர்களின் பாடு தேவலை எனலாம். முற்றிலும் கிராமத்துக் கல்வியுடன் சாதாரணப் பின்புலத்துடன் ‘சாதிக்க வேண்டும்’ என்கிற எண்ணத்துடன் களம் புகும் எண்ணற்ற சாமானியத் தேர்வர்களுக்கு, இவ்வாண்டின் முதல் நிலைத் தேர்வு, சற்றும் ஊக்கம் அளிப்பதாக இல்லை.
எப்போதும் சிறந்ததையே செய்கிற, தரமான தேர்வுகளால் தனித்து நிற்கிற யுபிஎஸ்சி, சமீப காலமாகக் கடைபிடித்து வரும் ‘இறுக்கமான’ போக்கை மாற்றிக் கொள்ளுதல் நல்லது.

இதிலே ஒரு வேடிக்கை (அ) வேதனை - சென்ற ஆண்டின் முதல் நிலைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் / வினாக்களுக்கான விடைகளை, இன்னமும் தேர்வர்களுக்குத் தெரியப் படுத்தவில்லை. ஒரு மரபு - மறைந்து வருகிறது.
நிறைவாக, என்னதான் ‘தரமானதாக’ இருந்தாலும், சமமற்ற போட்டி, சரியானதாக இருக்க முடியுமா..?போட்டித் தேர்வுக்கான அளவுகோல் - பல்வேறு துறைகளில் அறிதலும், புரிதலும் தானே அன்றி, அப்பாடங்களின் நுண்ணிய பொருளை ஆராய்ந்து சொல்வதல்ல. இந்த விதி, அநியாயத்துக்கு மீறப்பட்டு இருக்கிறது.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x