Last Updated : 19 Aug, 2020 01:13 PM

 

Published : 19 Aug 2020 01:13 PM
Last Updated : 19 Aug 2020 01:13 PM

ஆசிரியரின் பெயரை மகனுக்குச் சூட்டிய முன்னாள் மாணவர்: படிப்புச் செலவை ஏற்ற ஆசிரியர்- கோவையில் மாணவர் சேர்க்கையின்போது நெகிழ்ச்சி 

மகன் அருள்சிவாவுடன், நாகராஜ்

கோவை 

ஆசிரியரின் பெயரை மகனுக்குச் சூட்டிய முன்னாள் மாணவர் குறித்து அறிந்த ஆசிரியர் கண்கலங்கியது கோவை அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையின்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வெள்ளியங்காடு அரசுப் பள்ளி
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள தலைசிறந்த அரசுப் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று. பழங்குடியினர், ஏழை, எளிய மாணவர்கள் அதிகளவில் படிக்கும் பள்ளி இதுவாகும். தொடர்ந்து 8 முறை 10-ம் வகுப்பிலும், 10 முறை 12-ம் வகுப்பிலும் 100 சதவீதம் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளது இப்பள்ளி.

தேசிய வருவாய் வழித்தேர்வில் 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அரசு வழங்கும் உதவித்தொகையைப் பெற்று வருவது இப்பள்ளியின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து ஆதரவுக்கரம் நீட்டி வரும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

இங்கு படித்த மாணவர்கள் என்ஐடி, எம்பிபிஎஸ், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் சேர்க்கைக்காக இப்பள்ளியில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் திரண்டு வருவது வழக்கம். 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆக. 17-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஆசிரியரும், மாணவரும் அருள்சிவா

இந்நிலையில் பள்ளியில் மாணவர் சேர்க்கை நேற்று பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆசிரியர் அருள்சிவா மாணவர் சேர்க்கைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது 6-ம் வகுப்பில் சேர வந்த மாணவர் ஒருவரின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த போது, அதில் அவருடைய பெயர் அருள்சிவா என்றிருந்தது. சற்றே வியந்த ஆசிரியர், மாணவரிடம் கேட்டபோது, 'எனது தந்தைதான் இந்தப் பெயரை வைத்தார்' என்று தெரிவித்துள்ளார்.

மாணவரின் தந்தை ஆசிரியரிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, 'நான் உங்களுடைய மாணவன். உங்களுடைய பெயரைத்தான் என்னுடைய மகனுக்குச் சூட்டியிருக்கிறேன்' என்று நெகிழ்ந்து போனார் ஆசிரியர் அருள்சிவா. இச்சந்திப்பு இருவரின் கண்களையும் கலங்கச் செய்தது.

இது குறித்து மாணவர் அருள்சிவாவின் தந்தை நாகராஜ் (42) 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, '6-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இந்த பள்ளியில்தான் படித்தேன். அப்போது எங்களுக்கு அருள்சிவா ஆசிரியராக இருந்தார். நன்றாகப் பாடம் நடத்துவார். எங்களின் சந்தேகங்களை எப்போது கேட்டாலும் தயக்கமின்றித் தீர்த்து வைப்பார். மாணவர்களுக்கு உதவுவதிலும், நல்வழிப்படுத்துவதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர். அதே நேரத்தில் மிகவும் கண்டிப்பானவர். தவறு செய்தால் தண்டிக்கத் தவறமாட்டார். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியராகவும் மாறினார்.

ஆசிரியர் அருள்சிவா

திருமணமாகி குழந்தை பிறந்தால் இவரது பெயரைத்தான் வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எங்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்ததால், அவனுக்கு என்னுடைய ஆசிரியர் பெயரைச் சூட்டினேன். நான் படித்த ஆசிரியரிடமே, என்னுடைய மகனும் படிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய ஆசிரியரைப் போல் மகனும் நல்ல நிலைக்கு வர வேண்டும். அவரைப் போல் உயர்ந்த உள்ளம் கொண்டவராக விளங்க வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்' என்றார்.

ஆசிரியர் நெகிழ்ச்சி
இது குறித்து ஆசிரியர் அருள்சிவா கூறும்போது, 'சிறுவன் அருள்சிவாவை பள்ளியில் சேர்க்க வந்த இளைஞர், தன்னை என்னுடைய மாணவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கு அவரைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. என்னுடைய பெயரை அவருடைய மகனுக்குச் சூட்டியிருப்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

சிறுவனுக்கு பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரையிலான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வது என வாக்கு கொடுத்துள்ளேன். எங்கள் பள்ளியில் ஏராளமான ஏழை மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தி, நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை' என்றார்.

மாணவர் சேர்க்கையின் போது நிகழ்ந்த இச்சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x