Last Updated : 27 Nov, 2019 12:39 PM

 

Published : 27 Nov 2019 12:39 PM
Last Updated : 27 Nov 2019 12:39 PM

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரியில் இருந்து 6 ஆய்வு அறிக்கைகள் தேர்வு

திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க புதுச்சேரியில் இருந்து ஆறு ஆய்வு அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் ஆய்வறிக்கைகளுடன் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதுச்சேரி அறிவியல் இயக்கம், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து கடந்த 26 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 27-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு நடைபெற உள்ளது. இதற்கு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை, ஆரோக்கிய தேசத்துக்கான புதிய கண்டுபிடிப்புகள் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இளம் விஞ்ஞானிகள் புதுச்சேரி மாநில அறிவியல் மாநாடு நேற்று நடந்தது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே நடுநிலைப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் மாவட்ட மாநாடுகளில் சமர்ப்பித்த 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து 30 ஆய்வுக் கட்டுரைகள் மாநில மாநாட்டில் பங்கு பெற்றன.

அறிவியல் மாநாட்டில் மாநிலப் பயிற்சி மைய சிறப்புப் பணி அலுவலர் சந்திரசேகரன், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், அறிவியல் இயக்கத் தலைவர் அமுதா, மாநில ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆய்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் புதுச்சேரியில் இருந்து தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு சிறந்த ஆறு ஆய்வு அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டன.

இதில் பனித்திட்டு அரசு மேனிலைப்பள்ளி, காரைக்கால் எஸ்ஆர்விஎஸ் தேசிய மேனிலைப்பள்ளி (2 ஆய்வு அறிக்கைகள்), புதுச்சேரி செயின்ட் பேட்ரிக் பள்ளி, மாஹே சி.இ. பரதன் பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் புதுச்சேரி அமலோற்பவம் மேனிலைப் பள்ளிக் குழந்தைகளின் ஆய்வு அறிக்கைகள் தேர்வாகின. இதில் நீர் நிலைகளில் இருந்து மாசு அகற்றல், காய்கறிக் கழிவுகளில் மருத்துவ குணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள் அடங்கும்.

தேர்வான அறிக்கையைச் சமர்ப்பித்த ஆறு ஆய்வுக்குழு மாணவர்களில் தலைவர்களும், இரு வழிகாட்டி ஆசிரியர்களும் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் டிசம்பர் 27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x