Last Updated : 26 Nov, 2019 10:11 AM

 

Published : 26 Nov 2019 10:11 AM
Last Updated : 26 Nov 2019 10:11 AM

ரூ.25,000 வரை பரிசு: மாணவர்களிடையே விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு- முழு விவரம்

மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி. ஆகியவை இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகின்றன. இத்தேர்வு இந்தியா முழுவதும் குழந்தைகளின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இணையவழியில் நடைபெறும்.

இந்தத் தேர்வு குறித்து வித்யார்த்தி விஞ்ஞான் மந்தனின் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் ஆகியோர் கூறுகையில், "பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக நிச்சயம் இருக்கும்.

ஆறாவது வருடமாக இந்த ஆண்டு தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அறிவியல் விஞ்ஞானிகளுடன் உரையாடுவதற்கும் அவர்களுடன் சில செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்கிற நிலையை இப்போது பிராந்திய மொழிகளில் எழுதும் விதமாக மாற்றியிருக்கிறோம்” என்றனர்.

வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள இத்தேர்வில் புதுச்சேரியில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி, கேந்திரிய வித்யாலயா, நவோதாயா பள்ளி உட்பட பல பள்ளிகளைச் சேர்ந்த 240 குழந்தைகள் பங்கேற்க உள்ளனர்.

தேர்வு எழுத விரும்புவோர் கவனத்துக்கு
6 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதில் பங்கு பெறலாம். 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 9 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படுவர்.

தேர்வு இணையவழியில் நடைபெறும். ஸ்மார்ட் போன், டேப்லட், மடிக்கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தேர்வு எழுதலாம். மாணாக்கர்களின் பெற்றோரிடம் ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானது. VVM செயலி மூலம் தேர்வு எழுதலாம். மாணாக்கர்கள் அந்தந்தப் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வசதி உள்ளது. தேர்வுக்கு முன்னர் இரண்டு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணாக்கர்கள் வார இறுதி நாள்களில் அவற்றை எழுதிப் பார்க்கலாம்.

பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்
மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

மாவட்ட அளவில்
மாவட்ட அளவில் (6 முதல் 11-ம் வகுப்பு வரை) ஒவ்வொரு வகுப்புக்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட மண்டல அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

மாநில அளவில்
மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும். இதில் தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்குச் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். 120 மாணவர்களில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப் பரிசாக முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும். தேசிய அளவிலான ஓர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாநில அளவில் தேர்வு பெறும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

தேசிய அளவில்
ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11-ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள். தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர்.

அதில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11-ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். தேசிய மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாகச் செய்த மாணவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க, கருத்துகளைத் தெரிந்துகொள்ள வழிகாட்டப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x