Last Updated : 25 Nov, 2019 09:40 AM

 

Published : 25 Nov 2019 09:40 AM
Last Updated : 25 Nov 2019 09:40 AM

பெண்ணால் பிறந்தோம்... பெண்களைப் பாதுகாப்போம்...

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அதன் மக்கள்தொகையில் சரி பாதி எண்ணிக்கையில் இருப்பவர் களின் வளர்ச்சி முக்கியமா, இல்லையா? ஆம் என்றால் பெண்களின் உரிமைக்குக் கட்டாயம் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு உரிமை இல்லை என்று யார் சொன்னது, உரிமை இல்லாமல்தான் அத்தனை துறைகளிலும் சாதித்து கொண்டிருக்கிறார்களா என்று கேட்கலாம்.

65 கோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ள நாட்டில் சில நூறு பெண்கள் அரசியல், கலை, விளையாட்டு உள்ளிட்டத் துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மறு புறம் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு 1 இந்தியப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 2015-2016-ம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 15-49 வயதுக்கு இடையிலான இந்தியப் பெண்களில் 30 சதவீதத்தினர் அவர்களுடைய 15 வயதில் இருந்து ஏதோ ஒரு விதமான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனராம். சிசுக் கொலை, கருக்கொலை, கல்வி மறுக்கப்படுவதில் தொடங்கி வரதட்சணைக் கொடுமை, பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு கொடுமை
களுக்கு இன்றும் உலகளவில் கோடிக்கணக்கான பெண்கள் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து போராடியவர்கள் மிராபல் சகோதரிகள் என்றிழைக்கப்பட்ட லத்தின் அமெரிக்க நாடான டொமினிக்கைச் சேர்ந்த மூன்று பெண்கள். அவர்களுடைய துணிகரமான செயல்பாட்டைக் கண்டு பயந்து 1960-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி அன்று அவர்களை அந்நாட்டு அரசு படுகொலை செய்தது. அதுவரை டொமினிக் நாட்டவருக்கு மட்டுமே தெரிந்த அந்த பெண்களை அவர்களுடைய மரணம் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது. ‘மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்’ என்று உலகம் முழுவதும் அவர்கள் அறியப்பட்டார்கள். இந்த மூன்று சகோதரிகள் இறந்த நவம்பர் 25-ம் நாளை சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு நாளாக ஐ.நா சபை 1999-ல் அறிவித்தது.

பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்

பெண்களுக்கும் பிறப்புரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை, கல்வி உரிமை, கருத்துரிமை, சொத்துரிமை, வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது. ஆனால், சட்ட புத்தகத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி நீடிக்கிறது. இன்றும் ஆணுக்கு ஒரு படி குறைந்தவர்களாகத்தான் பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக பலவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகப்படுகிறார்கள். கல்வியே விடுதலைக்கான முதல் படி. ஆனால், 8-ம் வகுப்புக்குச் செல்வதற்கு முன்பாகவே 64 சதவீதம் இந்திய சிறுமிகளின் படிப்பு இடைநின்று போய்விடுகிறது. இதை கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பெண் கல்விக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் இது குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும் ஒவ்வொரு மாணவியும் இது குறித்த புரிதலோடு கல்வி பயில வேண்டும்.

மகளிர் ஆரோக்கியமும் சுகாதாரமும்

மாதவிடாய் ரத்தம் தூய்மையானது என்று மருத்துவத் துறை நிரூபித்துக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், மாதவிடாயின்போது வீட்டைவிட்டு விலக்கி வைக்கப்பட்டு கொல்லைப்புறத்தில் இரவு முழுவதும் குளிரிலும் பூச்சிக்கடியிலும் கிடந்து இறந்த இந்திய இளம்பெண்கள் அநேகர். இன்றும் 10 சதவீத இந்தியப் பெண்கள் இதை ஒரு நோயாக நினைத்து கூனிக் குறிகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற சுகாதாரமான நேப்கின்களைப் பயன்படுத்துவது, அதற்காக செலவிடுதல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ‘பேட் மேன்’ போன்ற திரைப்படங்கள் மற்றும் அரசு நடவடிக்கைகளின் வழியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் தோறும் நேப்கின் விநியோகிக்கும் இயந்திரத்தை நிறுவுதல் அதில் ஒரு அங்கம்.

பொருளாதார சுதந்திரம்

பெண் சுதந்திரத்தின் முக்கிய அங்கம் பொருளாதார தற்சார்பு நிலை என்பதும் நாம் அறிந்ததே. ஆனாலும், இந்திய யுவதிகளில் 23.6 சதவீதத்தினர் மட்டுமே 2018-ல் பணிவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். அதிலும் ஐ.டி. துறை போன்ற பெருநிறுவனங்களில் 26 சதவீதம் மட்டும்தான் உயர் பதவிகளில் பெண்களை பணியமர்த்தி உள்ளன. இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் பணிவாய்ப்பு பெறுவது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கே பாதகமானது என்று எச்சரித்துள்ளது உலக வங்கி. பன்முக திறமைகளைக் கோரும் வீட்டு வேலைகளைக் கோடிக்கணக்கான பெண்கள் செய்து வந்தாலும் அதற்குரிய ஊதியமோ, மரியாதையோ அளிக்கப்படாத அவல நிலை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

ஒரு தலையாகக் காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் 15 வயதில் அமில வீச்சுக்கு ஆளானவர் டெல்லிப் பெண் லட்சுமி அகர்வால். அதன் பிறகு தன்னம்பிக்கையுடன் போராடி குற்றவாளிக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டைப் பெற்றார். அமில வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சண்டிகரில் சமூக அமைப்பு ஒன்றை உருவாக்கினார். இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் மற்றும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார், ‘சபாக்’ (Chhapaak) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் இந்த படம் 2020 ஜனவரியில் வெளியாகவிருக்கிறது.

தண்ணீர் பெண்கள்

தண்ணீர் தட்டுப்பாடு எல்லோருக்குமான பிரச்சினை என்றாலும் பெண்களையே அது அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அன்றாட பயன்பாட்டுக்குரிய தண்ணீரை எடுத்துவரவே தினந்தோறும் பல கி.மீ. நடந்து கொண்டிருக்கிறார்கள். வறட்சியான வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் நீர் இறைப்பதற்காகவே பல பெண்களை மணந்துகொள்ளும் ஆண்கள் இருக்கிறார்கள். இவ்வளவு தீவிரமான பிரச்சினைக்குத் தீர்வு காண ‘தண்ணீர் ஏடிஎம்’ என்ற திட்டத்தை ‘சர்வஜால்’ அமைப்பு வட மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது.

பாலியல் துன்புறுத்தலில் இருந்து விடுதலை

2012-ல் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒரு பேருந்தில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’ (‘பயம் அற்றவள்’ - பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதற்காக சூட்டப்பட்ட புனைபெயர்) பாலியல் துன்புறுத்தலால் மரணமடைந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதன் பிறகு பெண்கள் பாதுகாப்புக்காக பிரத்தியேக பெண் காவல் நிலையங்கள் கொண்டுவரப்பட்டன, அதிக எண்ணிக்கையில் பெண் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டத்தை பல மாநிலங்கள் பிறப்பித்தன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க விரைவு நீதிமன்றம், பெண்கள் உதவி மையங்கள் செயலாற்றி வருகின்றன. ஆனாலும் இன்றும் 99 சதவீத பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க பெண்கள் முன்வருவதில்லை. தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்க பெண்கள் முன்வர வேண்டும். அதேபோன்று தாக்குதலில் இருந்து தப்பிக்க, பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ள தற்காப்பு கலையின் அடிப்படையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். கைப்பையில் ‘பெப்பர் ஸ்ம்ரே’, காவல்துறையை உடனடியாக உதவிக்கு அழைக்க ஸ்மார்ட்போனில் ‘Kavalan - SOS Mobile App’-ஐ பதிவிறக்கம் செய்துவைத்திருப்பது ஆகியவையும் உதவும். எல்லாவற்றையும் விட நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாத மனோதிடமே கைகொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x